Tuesday, June 18, 2013

இலட்சியப்பயணம் 3 - மாதிரி கட்டுரைகள்

                                   நாவல் : இலட்சியப் பயணம்
                   நன்றி : குமாரி புஷ்பவள்ளி, செலெசா ஜெயா இடைநிலைப்பள்ளி


மாதிரி கட்டுரைகள்



பாடாங் தோட்டத்து மக்கள் எதிர்நோக்கிய சிக்கல்களை விளக்கி எழுதுக.
   நூற்றாண்டுகளைக் கடந்து விட்ட ரப்பர் மரங்களுடன் அதே காலம் உறவு கொண்ட இனம் நம் தமிழினம். அத்தகைய தோட்டப் புறத்தின் இருட்டுத் திட்டுகளையே தடையங்களாகக் கொண்டு நடை பழகியவர் பாவலர் ஐ.இளவழகு. அவரது பேனா முனை மலேசிய தோட்டப்புற வாழ்வியலின் உண்மைகளைக் கல் வெட்டாய் செதுக்கிய நாவலே இலட்சியப் பயணமாகும். உயர்ந்த இலட்சியமும் கடின உழைப்பும் வெற்றியைத் தேடித் தரும் என்ற கருப்பொருளைக் கொண்டு உருவாகியிருக்கும் இந்நாவலில் பாடாங் தோட்டத்து மக்கள் எதிர்நோக்கிய சிக்கல்களை நாவலாசிரியர் திறம்பட விளக்கியுள்ளார்.
     அவ்வகையில், பாடாங் தோட்டத்து மக்கள் தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடியான போக்குக்கு ஆளாகி நின்றனர். தொழிலாளர்கள் காலை ஐந்தே முக்காலுக்கு முன்பாகவே பிரட்டுக் களத்தில் பெயர் கொடுத்தாக வேண்டுமென தோட்ட நிர்வாகம் கட்டளை பிறப்பித்திருந்தது. அத்துடன், தொழிலாளர்கள் மலைக்காட்டுக்குச் செல்லும் ஒரே ஒரு நுழைவாயில் சரியாக ஆறு மணிக்கெல்லாம் மூடப்படும். அப்படித் தொழிலாளர்கள் தாமதமாக வந்தால் அன்று அவர்களுக்கு வேலை இல்லை ; வீட்டிற்குத் திரும்பும் முன் தண்டல்மாரிடமோ கிராணிகளிடமோ சொல்லிவிட்டுத்தான் திரும்பவேண்டும்; இல்லாவிடில் மறுநாளும் அவர்கள் வேலையை இழக்க நேரிடும். இத்தகைய கடுமையான விதிமுறைகளால் குழந்தைகளை ஆயாக்கொட்டகையில் விட்டுவரும் தாய்மார்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். காலைக் குளிரில் நடுங்கிக்கொண்டு அழுகின்ற பச்சைக் குழந்தைகள் தாயைப் பிரிய மறுத்து அழுது அடம் பிடிக்கும். பாச மிகுதியால் குழந்தைகளோடு கொஞ்ச நேரமிருந்தாலும் மலைக்காட்டுப் பாதை மூடப்பட்டு அவர்கள் வேலைக்குச் செல்லத் தடையாகும்.
    இதனைத்தவிர்த்து, முதலாளி வர்க்கத்தின் ஆதிக்கத்தால் தொழிலாளர்கள் அனலில் இட்ட புழுவாய்த் துடிக்க வேண்டியிருந்தது. தண்டல்மார், சின்னக்கிராணி, பெரியகிராணி போன்றோர் ஒரே இனமாக இருந்தாலும் தங்களை உயர்வர்க்கமாக நினைத்து தொழிலாளர்களைக் கொத்தடிமைப் போன்று நடத்தினர். உதாரணமாக தான் ஊற்றிய பால் அளவைச் சரியாக குறிக்காத சின்னக்கிராணி முத்துவை எதிர்த்துக் கேட்டதால் கோதண்டனுக்கு அறை விழுகிறது. இது நியாயத்திற்குப் புறம்பாக இருந்தாலும் சின்னக்கிராணியை மன்னிப்புக் கேட்ட வைப்பதற்குத் தொழிலாளர்கள்  வேலைநிறுத்தம் செய்து தங்கள் உரிமையை நிலைநாட்டப் போராட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.  அத்துடன், மேனேஜர்களிடம் பேசும் உரிமை தனக்கு மட்டுமே உண்டு என்று எண்ணத்தில் இருப்பவர் பெரிய கிராணி. அதனால்தான் வேலைநிறுத்தத்தைப் பற்றி மருதனே நேரில் சென்று மேனேஜர்களிடம் பேசுவதைக் கண்டு அவர் மனம் புழுங்கினார். சின்னக்கிராணி சண்முகமோ மருதனுடன் ஒன்றாகப் படித்து நன்கு பழகியிருந்தவனாக இருந்தாலும் தன் அதிகாரத்தன்மையைக் காட்டும் வண்ணம்  டிகிரி குழாயைத் தவறுதலாக உடைத்துவிட்ட மருதனைத்  திட்டி அவமானப்படுத்துகிறான்.
     இதுமட்டுமல்லாது, பாடாங் தோட்டத்து மக்களிடையே கடன் வாங்கி வாழ்க்கை நடத்தும் போக்கு சமூகச் சிக்கலாக விளங்குகிறது எனலாம். விரலுக்கேற்ற வீக்கம் என்பதற்கொப்ப வருமானத்திற்கேற்ற செலவு செய்யாமல் கடன் வாங்கும் போக்கைக் கடைப்பிடிக்கின்றனர். தீபாவளிக்கென கொடுக்கப்படும் பிரதியேகச் சம்பளத்தில் விலையுயர்ந்த துணிமணி, மதுபானம் எனத் தாராளமாகச் செலவு செய்கின்றனர். சம்பள நாளிலோ கடன் கொடுத்தவரெல்லாம் வீட்டு வாசலில் நிற்கின்றனர். ரொட்டிக்காரன், துணிக்கார பாய், ஐஸ்காரன் போன்றோருக்கு எடுக்கும் சம்பளத்தில் பணத்தைக் கொடுத்துவிட்டு மறுநாளில் மறுபடியும் கடன் வாங்கும் போக்கைக் கடைப்பிடிக்கின்றனர். மருதனின் தந்தை ஆண்டியப்பன்கூட முனியாசிங் என்பவரிடம் பத்து காசு வட்டிக்குக் கடன் வாங்கி அல்லலுறுகிறார். இவ்வாறு சேமிப்புப் பற்றி எண்ணம் கொள்ளாது  வாழும் தோட்டத்து மக்களை வறுமை எனும் அரக்கன் தன் கோரப்பிடியில் சிக்க வைத்து இன்புறுகிறான்.
    மேலும், பாடாங் தோட்டத்து மக்களிடையே பலர் மதுவுக்கு அடிமையாகிச் சிக்கித் தவிக்கின்றனர். சம்பள நாள், தீபாவளி போன்ற நாட்களில் மது அரக்கன் இம்மக்களைத் தன் வசப்படுத்தி கொட்டம் அடிக்கிறான். ஊரைத் திருத்த நினைக்கும் மருதனின் வீட்டிலேயே தந்தை ஆண்டியப்பன் மதுவுக்கு அடிமையாகிக் கிடக்கின்றார். அளவுக்கதிகமாகக் குடித்துவிட்டு நிதானம் தவறி ஆங்காங்கே  சேற்றிலும் புழுதியிலும் விழுந்து கிடப்பதும் , அவரைச் சிலர் கைத்தாங்கலாக வீட்டிற்கு அழைத்து வருவதும் , பின்னர் அவர் தம் மனைவியுடன் சண்டை போடுவதும் மருதனின் வீட்டில் நடக்கும் அன்றாடக் காட்சியாகின்றன. அதோடு, மது அரக்கனின் மாய வலையில் சிக்கி விட்டால் உறவின் பாச வலைகள்கூட  அறுந்து போய்விடும்  என்பதை மெய்ப்பிப்பதைப் போன்று மதுபோதையில் முத்துசாமிகிழவனும் அவர் மகன் பெரியசாமியும் விறகுக் கட்டையால் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு காயத்திற்குள்ளாகின்றனர்.
      இதே வேளையில், பாடாங் தோட்டத்து மக்களிடையே ஏமாளித்தனமும் மிகுந்து காணப்படுகிறது. தோட்டத்தில் துணி வியாபாரம் செய்யவரும் வியாபாரிகள் அதிக விலையில் தரமற்ற துணிகளை விற்றுச் செல்கின்றனர்.  வேண்டுமென்றே விலையை உயர்த்தி கமிசன் பெறும் அசாப்புக்காரர் முனுசாமி போன்றவர்களால் இத்தோட்டத்து மக்கள் பரிதாபமாக ஏமாந்து போகின்றனர். இதனைத்தவிர, மண்சரிவில் புதையுண்டு இறந்து போன தன் மகளுக்கான இழப்பீட்டுத் தொகையைப் பெறும் முத்துசாமிக்கிழவர் 2500 வவுச்சரில் கையெழுத்திட்டு வெறும் 250 வெள்ளியை மட்டுமே நிர்வாகத்திடமிருந்து பெறும் அவலநிலை இதனை மேலும் மெப்பிக்கிறது.ஏமாறுபவர் இருக்கும் வரை இவ்வுலகில் ஏமாற்றுபவர் இருந்து கொண்டுதான் இருப்பர் என்ற உலக உண்மை இத்தோட்டத்திலும் அப்பட்டமாக நிகழ்கிறது.
     அதுமட்டுமல்லாது, பாடாங் தோட்டத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பின்மை நிலவுகிறது.தோட்ட வேலைக்கும் வெளிக்காட்டு வேலைக்கும் செல்லும் பெண்கள் சின்னக்கிராணிகளின் அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு ஆளாகின்றனர். சின்னக்கிராணிகளின் இத்தகு ஒழுங்கீன நடவடிக்கைகளுக்குத் தண்டல்மார்களும் துணைபோகின்றனர். உதாரணமாகத் தொழிற்சங்கத் தலைவர் ஆறுமுகத்தின் மைத்துனியிடம் சின்னக்கிராணி முத்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் அவள் லாலான் மருந்தை அவன் முகத்தில் ஊற்றுகிறாள். ஆனால், உண்மை மறைக்கப்பட்டு அப்பெண் மீதே பழி போடப்படுகிறது . இதனால் ஆத்திரங்கொண்ட ஆறுமுகம் சின்னக்கிராணி முத்துவை நையப்புடைக்கிறார்; அதன் விளைவாக அவருக்கு ஒருமாத நோட்டிஸ் வழங்கப்படுகிறது.  மருதனின்  வேண்டுகோளுக்கு இணங்க சின்னக்கிராணி அத்தோட்டத்தைவிட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டாலும் அவனுக்குப் பதிலாக வரும் சின்னக்கிராணி சண்முகமும் இதைப்போலவே ராதாவிடம் நடந்து கொள்ள முயற்சிக்கிறான்.  பெண்களைக் கிள்ளுக்கீரையாக நினைக்கும் இவர்களால் பெண்கள் எதிர்நோக்கும் பாலியல் தொல்லை தொடர்கதையாகிறது.
    ஆகவே, தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் வியர்வைத் துளிகளைச் சிந்தி இம்மண்ணை வளமாக்கப் பாடுபட்டாலும் அவர்கள் எதிர்நோக்கிய வாழ்வியல் போராட்டங்கள் இதயத்தில் ஈரத்தைக் கசிய வைக்கின்றன.   அறியாமையும் அடிமைத்தனமும் மேலோங்கி இருந்ததன் காரணமே இத்தகைய வாழ்வியல் சிக்கல்கள் உருவாகியுள்ளதற்கு மூலக்காரணமாகும். உழைப்பை மட்டும் அட்டையாய் உறிஞ்சி உரிமைகளை வழங்க மறுக்கும் முதலாளி வர்கத்திடம் இனியும் தமிழினம் சிக்கித் தவிக்காமல் முதலாளித்துவநிலைக்கு உயர வேண்டும் என்ற சிந்தனையை நாவலாசிரியர் நயமாகச் சுட்டிக் காட்டியுள்ளார். 





இலட்சியப் பயணம் நாவலைச் சிறந்த நாவலாகப் படைப்பதில் நாவலாசிரியர் வெற்றி பெற்றுள்ளார். இதனைத் தக்கச் சான்றுகளோடு விளக்குக.
மலேசிய எழுத்தாளர் ஐ.இளவழகு அவர்களின் அரைநூற்றாண்டு இலக்கியப் பயணத்தில் முத்திரைப்
பதிப்பாகத் திகழும் நாவலே இலட்சியப்  பயணம் ஆகும். 1972 ஆம் ஆண்டில் தேசியத் தோட்டத் தொழிற்சங்கமும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்ற இந்நாவல் தோட்டப்புற வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளது. உயர்ந்த இலட்சியமும் கடின உழைப்பும் வெற்றியைத் தேடித் தரும் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டே நாவலாசிரியரின் பேனா முனை நெடுங்கதை புனைந்துள்ளது. வாசகரின் நெஞ்சைத் தொடும் வண்ணம் பற்பல கூறுகளை ஒருங்கே அமைத்து இந்நாவலைச் சிறந்ததொரு நாவலாகப் படைப்பதில் நாவலாசியர் வெற்றி பெற்றுள்ளார் என்றால் அதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.
    அவ்வகையில், இலட்சியப் பயணம் நாவலின் கதை ஓட்டம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது எனலாம். தொடக்கம், வளர்ச்சி, சிக்கல், உச்சம், சிக்கல் அவிழ்ப்பு என்ற நாவலுக்குரிய கூறுகளைத் திறம்பட அமைத்துள்ளார் நாவலாசிரியர். நாவலின் தொடக்கத்திலேயே காதல் வானில் சிறகடித்துப் பறக்கும் மருதன்-ராதா என்ற இரு இளஞ்சிட்டுகளை அறிமுகப்படுத்தி நம் கவனத்தை ஈர்க்கிறார்.நாவலில் இடம்பெறும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் காரண காரியங்களோடு தொடர்புபடுத்தி முறையாக அமைக்கப்பட்டுள்ளதால் கதையோட்டம் விறுவிறுப்பாக அமைந்ததோடு வாசகருக்குச் சலிப்பைத் தரவில்லை. அடுத்து என்ன நடக்குமோ என்ற ஆர்வத்தைத் தூண்டுவதோடு சம்பவம் நிகழும் இடத்தில் நாமும் இருப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, மருதனைக் காதலிக்கும் ராதாவை அவள் தந்தை கண்டிக்கும்பொழுது இருவரது காதலும் கைக்கூடுமா இல்லையா என்ற கேள்விக்கணை வாசகர் மனத்தில் மின்னலாய் எழுகிறது.
   இதனைத் தொடர்ந்து, நாவலின் கதைப்பாத்திரங்களும் நெஞ்சில் நிலைத்து நிற்கும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளன. தோட்டப்புறச் சூழலை உணர்த்தும் எதார்த்தம் ஒவ்வொரு கதைப் பாத்திரத்திலும் பிரதிபலிக்கும் வண்ணம் நாவலாசிரியர் வடித்துள்ளார். இலட்சிய வெறியும் கடமையுணர்வும் காதல் நெஞ்சமும் கொண்டு மிளிரும் மருதன்  நாவலைப் படித்து முடித்து விட்டாலும் நம் மனத்தில் ஒய்யாரமாய் பவனி வருகிறான். இவனைப் போன்ற இளைஞர்கள் சமுதாயத்தில் உருவாகினால் நாமும் பிற இனத்தாரைப் போன்று முன்னேற்றம் என்ற கோட்டையில் வெற்றிக் கொடி நாட்டலாம் என்ற சிந்தனையை நம்முள் துளிர்விடச் செய்துள்ளார் நாவலாசிரியர்.  அதே வேளையில் காதல் வானில் சிறகடித்துப் பறக்கத் துடித்த ராதா என்னும் இளங்கிளியின் சிறகுகள் கட்டாயத்திருமணம் என்ற வாளால் வெட்டப் பட்டது நம் மனத்தில் சோக ராகங்களை மீட்டியுள்ளது.மதுவுக்கு அடிமையாகி அட்டகாசம் புரியும் ஆண்டியப்பன் , முத்துசாமிக் கிழவனும் அதிகார வர்கத்தின் மொத்த உருவமாக விளங்கும் பெரிய கிராணியும் தோட்டப்புற வாழ்க்கைக்கே நம்மை இட்டுச் செல்கின்றனர்.  கற்பனை கதைப் பாத்திரங்களுக்கிடையில் வரலாற்றுப் பெட்டகத்தில் இடம் பெற்றுள்ள  உண்மை மனிதர்களையும் கதையில் இணைத்திருக்கும் நாவலாசிரியரின் புதிய உத்தி பாராட்டத்தக்கது. மலேசியத் தோட்டத் தொழிலாளருக்கென தம் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட தேசியத் தொழிற்சங்கத்தின் செயலாளர் பி.பி. நாராயணன்,  தேசிய கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் துன் வீ.தி. சம்பந்தன் போன்றோரின் சமுதாயத் தொண்டினை இன்றைய இளையோரும் அறிய வகைச் செய்துள்ளார் நாவலாசிரியர். 
 இதுமட்டுமல்லாது, இந்நாவலின் மொழிநடையும் தெளிந்த நீரோடையைப்போல காணப்படுவதால் கதையோட்டத்தை வாசகர் புரிந்து கொள்ள   இலகுவாக உள்ளது. இலக்கியநடை, பேச்சுவழக்கு, வருணனை, திசைச்சொற்கள்/வட்டார வழக்கு, மொழியணிகள் போன்றவை நாவலாசிரியருக்குக் கைக்கொடுத்துள்ளன. உதாரணமாக, தீட்டுக்கல், ஸ்டோர், காண்டா, கோட்டுப்பால் போன்ற வட்டாரவழக்குச் சொற்கள் தோட்டப்புறச் சூழலை வாசகர்களுக்குப் படம் பிடித்துக் காட்டத் தோள் கொடுத்துள்ளன. “மாலை மயக்கம் சாலையின் இரு மருங்கிலும் பளிச்சிட்டது ; பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் காணும் இடமெங்கும் பசுமையாய்க் கண்ணுக்குக் குளிர்ச்சியாய் இருந்தது அந்தக் காட்சி போன்ற வருணனைகள் வாசகருக்கு இலக்கிய இன்பத்தை ஊட்டுகின்றன என்றால் அதில் மிகையில்லை.  கதைப்பாத்திரங்களின் பேச்சு வழக்கும்  கதையின் எதார்த்தபாணியை வாசகருக்கு ஏற்படுத்தியுள்ளது. நாவலாசிரியரின் இத்தகைய மொழிநடையே வாசகரைத் தொடக்கம் முதல் இறுதிவரை தொடர்ந்து வாசிக்கத் தூண்டுகிறது என்று துணிந்து கூறலாம்.
    மேலும், காலமெல்லாம் தோட்டத் தொழிலாளியாகவே அடிமை வாழ்வில் உழன்று வரும் தோட்ட மக்கள் எழுச்சிப் பெற்ற முதலாளித்துவ நிலைக்கு உயர வேண்டும் என்ற சிந்தனையை இலட்சியப் பயணமாய்க் காட்ட விழைந்த நாவலாசிரியர் சிறப்பான உத்தி முறைகளைப் பயன்படுத்தி தன் நோக்கத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவ்வகையில், பின்னோக்கு உத்தி, முன்னோக்கு உத்தி, கவிதை உத்தி, கடித உத்தி, நனவோடை உத்தி, உரை உத்தி போன்ற பற்பல உத்திகளைப் பயன்படுத்தி தான் சொல்ல வந்த கருத்தைச் சுவைப்படச் சொல்லி வாசகர் மனத்தில் ஆழப் பதியமிட்டுள்ளார். உதாரணமாக , ஆறுமுகத்துடன் மேட்டுக்கடைக்குச் சென்றிருந்த மருதன் அங்கு லீலாவைப் பார்க்கும் பொழுது அவனுக்குப் பாரதியின்
                             “ சிந்து நதியின் மிசை நிலவினிலே
                               சேர நாட்டிளம் பெண்களுடனே என்ற பாடல் நினைவுக்கு வருவதாக நாவலாசிரியர் அமைத்துள்ளார். கேரளத்துப் பெண்களிடம் இயற்கையாக விளங்கும் அழகு லீலாவிடமும் குடிக் கொண்டிருப்பதைக் காணும் மருதன் அவ்வழகை உண்மையான அழகாகவும்,  உள்ளத்தின் அழகோடு தொடர்புடைய அழகாகவும், வணக்கத்துக்குரிய அழகாகவும் எண்ணுகிறான். எனினும், அழகால் கவரப்பட்டு சபலப்புத்தி கொள்ளும் ஆணாக மருதன் இல்லையென்பதையும் நாவலாசிரியர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டி நம் மனத்தில் அவனுக்கு உயர்ந்த  இடத்தில் சிம்மாசனம் போட வைக்கிறார்.
       சாதாரண பொழுது போக்கு நாவலாக இல்லாமல் சமுதாயத்திற்குத் தேவையான நல்லப் படிப்பினைகள் கொண்ட நாவலாகவும்  இலட்சியப் பயணத்தை உருவாக்குவதில் பாவலர் ஐ. இளவழகு வெற்றி பெற்றுள்ளார்.குடும்ப அக்கறை, கல்விக்கு முக்க்கியத்துவம், இலட்சிய வேட்கை, ஒழுக்கம், சமுதாயத்தொண்டு எனப் பலவேறு படிப்பனைகளை முத்தாரமாகக் கோர்த்து நமக்குத் தந்துள்ளார். ரணங்கள் படப்படத்தான் பால்மரங்களில் பால் சுரக்கிறது என்பதற்கொப்ப பல்வேறு வாழ்க்கைப் போராட்டங்களை எதிர்கொண்டாலும் அவற்றைத் துணிந்து எதிர்கொள்ளும் மருதன் நமக்கு நல்லதொரு பாடத்தைக் கற்பிக்கிறான்.  உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?” என்ற முதுமொழிக்கொப்ப உழைப்பை உயிர் மூச்சாகக் கொண்டு  செயல்பட்டால் வாழ்கையில் வெற்றிக் கனிகளைக் கொய்க்கலாம் என்பதை நாவலாசிரியர் மருதன் மூலம் நயமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். வியாபாரம் என்பது வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டு வரும் மந்திரக் கோலாக இருந்தாலும் சில வேளைகளில் நம்மை வெட்டிச் சாய்க்கும் கோடரியாகவும் மாறலாம்  என்பதால் மருதனை வழிகாட்டியாகக் கொள்ளல் சிறப்பு. அகல கால் வைக்காமல் சிறிய முதலீட்டில் தொடக்கம், பயனீட்டாளர்களைக் கவரும் வியாபார உத்தி, காலத் தேவைக்கேற்ற மாற்றம், வரவு செலவைக் கவனிக்க வங்கிக் கணக்கு போன்றவை நம்மினத்தவர் வியாபாரத்துறையில் சாதிக்க கண்டிப்பாய்த் துணைப்புரியும்.
       தொடர்ந்து, இலட்சியப் பயணம் நாவல் மொழி, இன உணர்வை மேலோங்கச் செய்யும் சிறந்த இலக்கியப் படைப்பாகவும் மிளிர்வது உள்ளங்கை நெல்லிக்கனி. “சீனிக்குக் காக்காயை ஓட்டும் வேலை, சீக்கிரமாய்ப் பணம் சேரும் ; சிறுமை ஓடும், கோணியிலே பணமள்ளிக் கொண்டு வந்தே கோபுரத்தில் வாழ்ந்திடலாம்” என்ற கங்காணியின் இனிப்புப் பேச்சில் மயங்கி இந்நாட்டிற்குக் கப்பலேறி  வந்த நாள் முதல் மலேசிய நாட்டின் மேம்பாட்டிற்குத் தங்கள் வியர்வைத் துளிகளை உரமாக்கிய இந்தியர்களின் வரலாறு இன்றைய இளைய சமுதாயம் அறிய வேண்டிய பாடம். அதிகார வர்கத்தின் பிடியில் சிக்கி அடிமையாகவும் வாயில்லா ஊமையாகவும், கல்வியின்றி அறியாமையில் உழன்ற தோட்டத் தொழிலாளர்களின் வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொள்ள இந்நாவல் வரலாற்றுக் கருவூலமாக விளங்குகிறது என்றால் அதை மறுப்பாருமில்லை. மலேசிய நாட்டின் வளத்திற்கு நமது முன்னோரின் உழைப்பும் தியாகமும் உள்ளது என்பது நம்மைப் பெருமைப்படச் செய்யும் செய்தியாகத் திகழ்கிறது. தமிழரோடு புலம் பெயர்ந்த தமிழ்மொழி இன்றளவும் இளமையோடு வாழ்ந்து கொண்டிருப்பதற்கு தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்ப்பற்று கொண்ட நல்லுள்ளங்களும்தான் காரணம் என்ற செய்தியையும் நாவலாசிரியர் குறிக்கத் தவறவில்லை. மலேசிய மண்ணில் அன்னைத் தமிழ் மேலும் தழைத்து வளரச் செய்வதில் தமிழர் அனைவரும்  கைக்கோர்த்து கடமையாற்ற வேண்டியது அவசியமாகிறது.
    ஆகவே, இலக்கியம் மனித வாழ்வைப் பண்படுத்தும் ஆற்றல் கொண்டது என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது இலட்சியப் பயணம் நாவல். வாசகருக்கு இலக்கிய இன்பம் நல்கும் அதே வேளையில் நம் சிந்தைக் கதவையும் தட்டிய பாவலர் ஐ.இளவழகு மலேசிய இலக்கிய வானில் என்றும் மின்னும் நட்சத்திரமாய்ப் பிரகாசிப்பார் என்பது ஆணித்தரம். இது போன்ற சிறந்த நாவல்களை உருவாக்கி தமிழன்னையின் மகுடத்தை அலங்கரிக்க நாம் உறுதி பூணுவோமாக.

       

,
   மருதன் தன் குடும்பத்தின் மீது கொண்டிருந்த பற்றை விளக்கி எழுதுக.

      மலேசிய இலக்கிய வானில் மின்னும் நடசத்திரமாக விளங்குபவர் பாவலர் ஐ. இளவழகு. இவரது சிந்தையில் மலர்ந்திட்ட இலட்சியப் பயணம் நாவலானது, உயர்ந்த இலட்சியமும் கடின உழைப்பும் வெற்றியைத் தேடித் தரும் என்ற கருப்பொருளைக் கொண்டு உருவாகியுள்ளது. இதில் முதன்மை கதைப்பாத்திரமாக விளங்கும் மருதன் தன் குடும்பத்தின் மீது மிகுந்த பற்றுள்ளவனாக நாவலாசிரியர் படைத்துள்ளார். பெற்றோர் ஆண்டியப்பன் - வேலம்மா, தங்கைகள் மனோகரி - சங்கரி, தம்பி மதியழகன் என அறுவர் கொண்ட தன் குடும்பத்தின் மீது மருதன் காட்டும் அன்பும் அக்கறையும் நாவலின் பல இடங்களில் பளிச்சிடுகின்றன.
     அவ்வகையில், படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற தீராத தாகம் இருந்தாலும் தன் குடும்ப நலனுக்காக மருதன் தன் படிப்பைப் பாதியிலேயே கைவிடுகிறான். பெற்றோரால் பணம் கட்டி படிக்க வைக்க இயலாது என்பதை உணர்ந்து தோட்டத்தில் வேலைக் கேட்டுச் செய்து கொண்டே சொந்தமாகப் படித்து  எல்.சி.இ வரையிலான கல்வியை எட்டிப் பிடித்திருந்தாலும் குடும்பத்தின் தலைப்பிள்ளை என்ற கடமையைக் கருத்தில் கொண்டு தன் தம்பிதங்கையரின் கல்விக்காகத் தனது மேற்படிப்பைத் தியாகம் செய்கிறான். வயதான தோட்டப் பாட்டாளிகளான தனது பெற்றோரை மட்டும் நம்பும் வாய்ப்பு இல்லாததால் உடன் பிறப்புகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தன்னையே மெழுகுவர்த்தியாய் உருக்கி அவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றுகிறான். தம்பி தங்கைகள் படிப்பதற்காகக் காலையிலும் மாலையிலும் அயராது உழைக்கிறான். மருதனின் இத்தகைய தியாகச் சிந்தனையே தங்கைகள் இருவரும் சீனியர் கேம்பரிஜ்ட் கல்வி வரையிலும் தம்பி மதியழகன் மலாயாப் பல்கலைக்கழகப் பட்டதாரியாகவும் உருவாகினர்.
      மேலும், சுயமுயற்சியில் எல்.சி.இ வரை படித்திருந்தாலும் மருதன் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து தன் வழியே செல்லவில்லை. ஐம்பது வயதை எட்டிவிட்ட தன் வயதான பெற்றோருக்கு ஏணிக்கோடு மரங்கள் சாய்க்கப்பட்டவுடன் வேலை இல்லாமல் போக வாய்ப்புண்டு. இந்நிலையில் அவர்களை நிர்கதியில் விட்டுவிட்டு தன் வாழ்க்கைப்பயணத்தை மட்டும் கவனித்துக் கொள்ளும் சுயநலம் மருதனிடம் எழவில்லை. அவ்வாறு தான் செய்தால் பெற்றெடுத்து வளர்த்த பெற்றோருக்குத் தான் செய்யும் துரோகமாக அது விளங்கும் என மருதன் நன்கு உணர்ந்திருந்தான். மூத்தப் பிள்ளை என்ற ரீதியில் தன் மீது பெற்றோர் வைத்திருக்கும் நம்பிக்கையை அவன் பாழாக்கவில்லை.

     இதனைத்தவிர, தன் குடும்ப நலனுக்காகக் காதலையே தியாகச் செய்யும் உன்னத மனிதனாக மருதன் விளங்குகிறான். ராதாவைத் திருமணம் செய்து கொண்டு இன்ப வாழ்வைச் சுவைக்க வேண்டுமென ஆயிரமாயிரம் கற்பனைகளை மனத்தில் செதுக்கியிருந்த  மருதனுக்கு  ராதாவின் கல்யாண ஏற்பாடு பேரிடியாய் விழுகிறது. வயதான பெற்றோரைப் பராமரிக்கும் அதே வேளையில், தன்னை நம்பியிருக்கும் தம்பி தங்கையருக்குக்  கல்வியையும் எதிர்கால வாழ்க்கையையும் அமைத்துக் கொடுக்க அவனுக்கு இன்னும் குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது தேவைப்படுகிறது. இந்நிலையில், ராதாவை காத்திருக்கச் சொல்ல வாய்ப்பில்லை என்பதால் உணர்ச்சியின் விளிம்பின் நிற்காமல் அறிவின் துணைக்கொண்டு சிந்தித்து முடிவெடுக்கிறான்.காதலும் கடமையும் மோதும்போது குடும்பக் கடமையே அவனுக்குப் பெரிதாகத் தெரிகிறது. இதனால் ராதாவை அவள் பெற்றோர் ஏற்பாடு செய்திருக்கும் திருமணத்திற்குச் சம்மதிக்கச் சொல்கிறான். தான் மனதாரக் காதலித்தவளை மற்றொருவனுக்குத் தாரை வார்த்து கொடுத்ததால் மனக்காயத்திற்கு ஆளானாலும் குடும்ப நலத்திற்காக அதையும் இன்ப வலியாகவே ஏற்றுக் கொள்கிறான்.

        தொடர்ந்து, தன் தந்தையின் ஆசையை நிறைவேற்றும் மகனாகவும் மருதன் பரிணாமிக்கிறான்.
ஊரில் தன் நிலத்தையும் வீட்டையும் அடமானம் வைத்த மருதனின் தந்தை ஆண்டியப்பன் அறுநூறு ரூபாய் கடனை அடைக்க மலாயாவிற்கு வந்தவர். இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் தன் நோக்கத்தில் வெற்றி அடைய முடியவில்லையே என்ற ஏக்கப் பெருமூச்சு அவர் மனத்தை வாட்டுகிறது. இதனை உணர்ந்த மருதன் தன் தந்தையின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அவரை ஊருக்கு அனுப்பி வைக்கிறான். பினாங்கிலிருந்து நல்லபடியாக ஊருக்குச் சென்று சேர்ந்த ஆண்டியப்பன் நிலத்தையும் வீட்டையும் மீட்டெடுக்கிறார்; அதனை சீரமைக்க பணத்தை எதிர்ப்பார்க்கிறார். அதன்படி மருதனும் பத்தாயிரத்திற்கும் மேலாகக் கடன்பட்டு பணத்தை அனுப்பிவைக்கிறான்.

      இதுமட்டுமல்லாது, குடும்ப முன்னேற்றத்திற்காக வியாபாரத் துறையில் ஈடுபட மருதன் திட்டமிடுகிறான். தோட்டத்தையே நம்பி இருந்தால் வளமான வாழ்வை வாழ முடியாது என்று தீர்மானித்துத் தன் தந்தையின் மறைவிற்குப் பிறகு தோட்டத்தைவிட்டு வெளியேறுகிறான்.  சித்தியவான் நகரில் தன் பெற்றோரின் நலநிதி பணத்தைக் கொண்டு வியாபாரம் தொடங்குகிறான். சிறிய முதலீட்டில் புத்தகக் கடையைத் தொடங்கும் மருதன்  பிறகு உணவுக்கடை, துணி வியாபாரம், சிறு தோட்டம் என பற்பல வியாபாரத்துறைகளில் துணிந்து கால்பதிக்கிறான். பம்பரமாய்ச் சுழன்று அல்லும் பகலும் உழைத்து தன் குடும்பத்திற்கு வளமான வாழ்க்கையை ஏற்படுத்தித் தருகிறான். தன் தங்கையருக்கு நல்ல இடத்தில் திருமணம் நடத்தி முடிப்பதுடன் தம்பியையும் பல்கலைக்கழகப் பட்டதாரியாக்குகிறான். இறுதியில், ஆயிரம் ஏக்கர் ரப்பர் தோட்டத்தை வாங்கி அதற்கு உரிமையாளனாக வருவதைப் பார்த்து தாய் மனம் மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் மனமும் பூரிப்படைய வைத்துள்ளார் நாவலாசிரியர்.

      இறுதியாக, பெற்றெடுத்துச் சீராட்டிப் பாராட்டி வளர்த்த அன்னையின் தனிமையையும் மனக்குறையையும் போக்குகிறான் மருதன். தந்தையின் மறைவு, திருமணமாகி மறுவீடு சென்றுவிட்ட தங்கையர், வெளியூரில் படிக்கும் தம்பி எனத் தொடர்ந்த நிகழ்வுகள் தன் அன்னைக்குத் தனிமையை ஏற்படுத்தித் தந்து விட்டதை மருதன் உணருகிறான். எனவே, அவரது தனிமையைப் போக்க அடிக்கடி தன் தங்கைகளையும் தம்பியையும் காண அழைத்துச் செல்கிறான். பல்லாண்டுகள் தோட்டத்தில் அனுபவித்த கஷ்டங்களுக்கு எல்லாம் தீர்வாக தன் அன்னைக்கு வசதியான வாழ்க்கையைத் தான் ஏற்படுத்திக் கொடுத்திருந்தாலும் தன் மகன் துணையில்லாமல் தனிமரமாக நிற்கின்றானே என்ற மனக்குறையால் துயரப்படும் தாயின் நிலையை அறிகிறான். தன் அன்னைக்கு எந்தக் குறையும் இருக்கக் கூடாது என்ற தன் கொள்கையில் ஓட்டை விழக் கூடாது என்பதைத் தீர்மானித்த மருதன் தன் மாமன் மகள் ருக்குமணியைத் திருமணம் புரிய சம்மதிக்கிறான்.

   ஆகவே, மனித வாழ்வில் இன்பத்தைச் சுரக்க வைக்கும் குடும்ப நலனில் ஒவ்வொருவரும் அக்கறை செலுத்த வேண்டும் என்ற சிந்தனையை மருதனின் மூலம் நமக்கு உணர்த்தியுள்ளார் நாவலாசிரியர். இன்றைய இளையோர் மருதனை வழிக்காட்டியாகக் கொண்டால் சமுதாயமும் மேன்மையுறும் என்பது திண்ணம்.

1 comment:

  1. 32Dear Admin,
    You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

    To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

    தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

    நன்றிகள் பல...
    நம் குரல்

    ReplyDelete