Sunday, November 18, 2012

வெண்ணிப் பறந்தலைப் போருக்கான காரணங்களும் அதன் விளைவுகளும்.


ஆக்கம்:
குமாரி புஷ்பவள்ளி சத்திவேல்
SMK Taman Selesa Jaya,
Johor Bahru,Johor.


கலைமாமணி இரா.பழனிசாமி படைத்துள்ள காவிய நாயகிநாடகம் புறநானூற்றுப் புலவர் வெண்ணிக் குயத்தியாரின் பாடலை அடிப்படையாகக் கொண்டதாகும்.காதலையும் வீரத்தையும் மையக்கருவாகக் கொண்ட இந்நாடகத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாகத் திகழ்வது சேர மன்னன் பெருஞ்சேரலாதனுக்கும் சோழ மன்னன் கரிகாலனுக்குமிடையே நிகழ்ந்த வெண்ணிப் பறந்தலைப் போர் என்றால் அதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

   சோழ மன்னன் கரிகாலன் சிவபெருமானுக்கு அடுத்தப்படியாகச் சாத்தனை வணங்குகிறான்.அந்த தர்மசாஸ்தாவைப் பாண்டிய நாட்டையொட்டியுள்ள சேரநாட்டின் நீலி மலையென்னும் சபரிமலையில் நிறுவியிருந்தார்கள்.அத்துடன் பாண்டிய மன்னரின் வேண்டுகோளின்படி சாத்தனராகிய அய்யனின் மாளிகைக்குப் புறத்தே மாளிகைப் புறத்து அம்மனாக மதுரை மீனாட்சியம்மனையும் நிறுவியிருந்தனர். அந்த சாத்தனார் கோயில் தனது ஆளுகைக்குள் இருக்க வேண்டும் ; அதற்கு நாள்தோறும் சிறப்பான பூசைகள் நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கரிகாலன் விரும்பினான்.அதைச் சேரரிடம் கேட்டுப் பெறுவது மதிப்புக் குறைவான செயல் என்று கரிகாலன் கருதினான்.எனவே,அந்த கடவுளின் கோயிலைக் கைப்பற்றவே சோழ மன்னன் சேரநாட்டின் மீது படையெடுத்தான்.இதனால், சினங்கொண்ட பெருஞ்சேரலாதன் சோழ நாட்டின் மீது போர்த்தொடுத்தான்.இதுவே, வெண்ணிப் பறந்தலையில் போர் நடந்ததற்குக் காரணம்.

   இவ்வெண்ணிப் பறந்தலைப் போரினால் பல விளைவுகள் ஏற்படுகின்றன என்றால் அது மிகையில்லை.இப்போரில் பெருஞ்சேரலாதனும் கரிகாலனும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.கரிகாலன் பெருஞ்சேரலாதனோடு போர் செய்யும் பொழுது போர் மரபை மீறுகிறான்.அவனது வாள் பெருஞ்சேரலாதன் நெஞ்சைத் துளைத்துப்  புறமுதுகில் காயம் ஏற்படுத்துகின்றது.வீரர்களுக்குப் புறப்புண் ஏற்படுவது இழுக்கு என்பதால், “புறப்புண் ஏற்பட்டும் உயிர் வாழ்ந்தான் சேரன்என்று உலகம் பெருஞ்சேரலாதனைப் பழித்துப் பேசாமலிருக்க வடக்கிருந்து உயிர் துறக்க சித்தமாகிறான்.தான் இறப்பதற்கு முன் தனது காதலியான பொன்னிக்கு அவளின் தந்தை மருதவாணரின் முன்னிலையில் திலகமிட்டுத் தனது மானசீக மனைவியாக ஏற்றுக் கொள்கிறான். இதுவரை தமிழுக்காகப் பாடிய நீ, இனி உன் கணவனின் மானங்காக்கப் பாட வேண்டும்”, என்று கூறி இயற்கை எய்துகிறான்.   பொன்னியின் தந்தை மருதவாணர், சேரன் மறைவுக்குப் பிறகு தம் மகள் அவன் கல்லறையில் அமர்ந்து அல்லல் படுவதைக் காணப் பொறுக்காது சித்தப் பிரமை பிடித்தவராகச் சிரித்துக் கொண்டு வீதியில் அலைகிறார்; உயிரையும் விடுகிறார்.

    அதையடுத்து , பெருஞ்சேரலாதனின் மானத்தை நிலைநாட்ட பொன்னி விதவைக் கோலத்தில் கரிகாலனின் அரசவைக்குச் செல்கிறாள்.வெண்ணிப் பறந்தலைப் போரின் வெற்றிக்காகச் சோழனைப் புகழ்ந்தாலும் , அவனைவிட தன்மானம் காக்க உயிர் நீத்த சேரன் நல்லவன் என்று வஞ்சக புகழ்ச்சியாகப் பாடுகிறாள்.   கரிகாலனின் புகழுக்கு மாசு உண்டாக்கியதற்காகப் பொன்னிக்குத் தண்டனை தரவேண்டுமென அவையோர் கூற, பொன்னி கூறிய குற்றச்சாட்டை ஆராய்ந்து முடிவெடுக்கும் வரை அவளை விருந்தினர் விடுதியில் பாதுகாப்பாகத் தங்க வைக்க மன்னன் ஆணையிடுகிறான்.பொன்னியின் பின்னணியை அறிந்து கொள்ள துறவி வேடம் தரித்து அவளுடன் உரையாடுகிறான்.பொன்னி பெருஞ்சேரலாதனின் மானசீக மனைவி என்பதைப் புரிந்து கொள்கிறான்.

வெண்ணிப் பறந்தலை போரினால் தனது கணவனை இழந்த பொன்னிக்கு விருந்தினர் விடுதியில் காளிங்கராயராலும் தளபதியாராலும் சிக்கல் ஏற்படுகிறது.அவளைக் கார்கோடகன் மூலம் விஷம் வைத்துக் கொள்ள துணிகின்றனர். ஆனால், துறவி வேடம் கொண்ட கரிகாலன் அவளைக் காப்பாற்றி விடுகிறான்.மேலும், பொன்னிக்கும் கரிகாலனுக்கும் கள்ளத்தொடர்பு உண்டு என்று புரளியைக் கிளப்பி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டுகின்றனர். ஆனால்,பொன்னி எழுதிய உண்மையான ஓலையின் மூலம் இத்திட்டம் தகர்த்தெறியப்படுகிறது.வெண்ணிப் பறந்தலைப் போரின் விளைவாகப் பொன்னி ஏற்படுத்திய சர்ச்சையைத் தீர்க்க கரிகாலன் போட்ட துறவி வேடத்தின் மூலம் காளிங்கராயரும் தளபதியும் பசுத் தோல் போர்த்திய புலிகள் என்பதைக் கரிகாலன் தெரிந்து கொள்கிறான்; அவர்கள் மேற்கொண்ட அனைத்து சதித்திட்டங்களையும் முறியடிக்கிறான்.பால் வார்த்தவனையே தீண்ட நினைத்த பாம்புக்கு ஒப்பான காளிங்கராயரையும் தளபதியையும் விசாரித்து தண்டனை வழங்க ஆணையிடுகிறான்.

ஆகவெ, வெண்ணிப் பறந்தலைப் போரினால் பெருஞ்சேரலாதன் உயிர் துறந்தாலும் அப்போரின் விளைவாக பெருஞ்சேரலாதன் சிறந்த வீரன், தன்மானம் மிக்கவன் என்று உலகிற்கு நிரூபணம் ஆனது எனலாம்.
 

No comments:

Post a Comment