Sunday, November 18, 2012

“ தமிழ்க்கவிதை ” வாயிலாகக்கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.



தமிழ்க்கவிதை வாயிலாகக் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.


ஆக்கம்:
குமாரி புஷ்பவள்ளி சத்திவேல்
SMK Taman Selesa Jaya,
Johor Bahru,Johor.


   நற்றமிழ்க் கவிஞர் க. பெருமாள் அவர்களின் கைவண்ணத்தில் உருவான தமிழ்க்கவிதைஎன்ற தலைப்பிலான கவிதை , ’கவிதைப்பூங்கொத்துஎனும் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது. வாழ்க்கை நுகர்ச்சியின் உணர்வு கலந்த கலையாக்கமே தமிழ்க்கவிதை என்ற மையக்கருத்தினை அடிப்படையாகக் கொண்டே இக்கவிதை உருவாகியுள்ளது.

   கவிதை என்பது கடினமான இலக்கிய வடிவம் என்ற மனப்போக்கு கொண்டவர்களுக்குத் தமிழ்க்கவிதை தனித்தன்மை வாய்ந்தது எனவும் இலக்கிய இன்பத்தினை ஊட்ட வல்லது என்ற முகாமையான கருத்து இக்கவிதையில் வெளிப்படுகிறது. தான் பெற்ற அனுபவத்தையும் இன்பத்தையும் யாவரும் பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே கவிஞர் பல கருத்துகளைத் தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளார்.

  அவ்வகையில், கவிதை என்பது எதுகை,எழுத்து, அசை, சீர், தளை போன்றவற்றை முயன்று தேடி வலிந்து உருவாக்குவது அன்று எனவும் ஊக்கத்துடன் கவிதை இயற்றும் கலையை உரிய முறையில் படிப்படியாக முயன்று கற்றால் அதன் சுவையில் மெய்மறந்து ஒன்றிப் பாய்விடலாம் என்று கவிஞர் ஆணித்தரமாகக் கூறுகிறார். இவ்வாறே தானும் தமிழ்க்கவிதையைப் பயின்று கோடி இன்பம் பெற்றதாகக் கவிஞர் தன்னையே முன்னுதாரணமாகக் கூறுகிறார்.
  மேலும், தமிழ்க்கவிதை இன்பத்தை ஊற்றெடுக்கச் செய்யும் திறன் பெற்றது .தமிழர்களிடையே, எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழே என்ற கவிதை வரிகளை மொழிந்தறியா வாய் இருப்பது அரிதே. பாவேந்தர் பாரதிதாசனின் அந்த இனிய கவிதை வரிகள், ஆழக் கடலில் மூழ்கி முத்தை எடுத்து விட்டது போன்ற பெருமகிழ்ச்சியைப் பொங்கச் செய்து அருமைமிகு தமிழர்களின் நாவில் எல்லாம் மணம் பரப்புகிற , அமுதின் சுவை கொண்ட பாட்டாகத் தொடர்ந்து அவர்களைச் சூழ்ந்து நின்று சுடர்வீசிக் கொண்டிருப்பதை யாராலும் மறுக்க இயலாது. யாழும் குழலும் போன்ற இசைக்கருவிகளால் பெறக்கூடிய இசைவகைகளை எல்லாம் ஒன்றாக இணைத்து வழங்குகிற இன்பச்சுவையின் உச்சநிலை வளர நம்மை இட்டுச் செல்லக்கூடியது கவிதை என்று அதன் மேன்மையைக்  கவிஞர் தெளிவுறுத்துகிறார்.

    தொடர்ந்து , வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையிலும் , தொடங்கியதெல்லாம் வெற்றிபெறும் வகையில் , உள்ளத்தில் வெளிச்சம் தரக் கூடிய வல்லமை பெற்றது தமிழ்க்கவிதை. வீரச் சுவை கொண்ட எழுச்சிப் பாட்டு, மழலைச் செல்வங்களுக்கு அமைதியான உறக்கத்தைத் தரும் தாலாட்டு, வெற்றியின் பெருமிதத்தை உணர்த்தும் பரணி பாட்டு, புகழுக்கு மேலும் சிறப்பூட்டும் வாழ்த்துப் பாட்டு  போன்ற பல்வகை கவிதைகள் தமிழர் வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஒருமித்து வாழ்ந்து கொண்டிருப்பது வெள்ளிடைமலை. இதனாலேயே தமிழர் வாழ்வு பெருமையும் சிறப்பும் பெற்று விளங்குகிறதெனவும் கவிஞர் உணர்த்துகிறார்.

   கவிதை என்பது உலகப்பொதுநிலையில் ஓர் இலக்கிய வடிவம் என்னும் நிலையில் பல பயன்களையும் சுவைகளையும் கொண்டிருக்கலாம். ஆனால், ”தமிழ்க்கவிதை என்பது அவற்றுக்கெல்லாம் அப்பால், தமிழர்களின் வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு கூறாக காலங்காலமாக விளங்கி வந்திருக்கிறது என்ற கருத்தினை கவிஞர் அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளார். இதனைத் தவிர்த்து, தொன்று தொட்டு வளர்ந்து வரும் தமிழ்க்கவிதை உலகமயம் என்னும் பெருவெள்ளத்தில் தனது தனித்தன்மையை இழந்துவிடுமாறு விட்டுவிடக் கூடாது என்பதையும் மறைமுகமாகக் கவிஞர்  வலியுறுத்துகின்றார்.

  ஆகவே, செம்மொழியாம் தமிழ்மொழியின் குழந்தையான தமிழ்க்கவிதை சீராட்டிப் பாராட்டி வளர்க்கப்பட வேண்டும். நம் வாழ்வில் இரண்டற கலந்து விட்ட தமிழ்க்கவிதையின் தனித்தன்மை போற்றிக் காக்கப்பட வேண்டியது நம் கையில்தான் உள்ளது.

No comments:

Post a Comment