சத்தியமூர்த்திக்கும் அவன் தந்தைக்குமிடையே காணப்படும்
வேறுபாடுகள்.
ஆக்கம்:
குமாரி புஷ்பவள்ளி சத்திவேல்
SMK Taman Selesa Jaya,
Johor Bahru,Johor.
சமூக நாவல்
எழுதுவதில் தனித் திறம் பெற்ற எழுத்தாளர்களில் நா.பார்த்தசாரதி
குறிப்பிடத்தக்கவர்.அவரது சிந்தனை ஓடையில் மலர்ந்திட்ட நாவல்களில் ஒன்றே பொன்
விலங்கு. சத்தியமூர்த்தி என்ற இளைஞன் பொது வாழ்விலும் தனிமனித வாழ்விலும்
எதிர்நோக்கும் சிக்கல்களை இந்நாவல் சுவைபடச் சொல்கிறது.இந்நாவலில் சத்தியமூர்த்தி
முதன்மை கதைப்பாத்திரமாகவும் அவன் தந்தை துணைக் கதைப்பாத்திரமாக வலம்
வருகின்றனர்.நாவலுக்கு உயிரோட்டம் தரும் இவ்விரு கதை மாந்தர்களிடையே பல வேறுபாடுகளைக்
காண இயலுகிறது.
தொழில் ரீதியில் சத்தியமூர்த்தியும் அவன் தந்தையும்
மாறுபடுகின்றனர்.சத்தியமூர்த்தி உயர்ந்த இலட்சியங்களும் சிறந்த கொள்கைகளும் கொண்ட
இளைஞன். பிறமொழிகளை வெறுக்காது தமிழ்மொழி மீது ஆழ்ந்த பற்று கொண்டவன். தமிழில்
முதுகலை ( எம்.ஏ) பட்டம் பெற்றவன். “ஆசிரியர் தொழில் அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி” என்பதற்கொப்ப அவன் தன் இலட்சியக் கனவாக ஆசிரியர் தொழிலைப்
புனிதமாக நினைக்கிறான்; மதிக்கிறான்.ஆனால், அவன் தந்தையோ ஆசிரியர் தொழிலை மதிக்கவில்லை. ‘நம்மை ஏணியாகப் பயன்படுத்தி மேலே ஏறிப் போகிறவர்களைப்
பார்த்து வயிறெரிகிற தொழில்’ எனக் கூறுகிறார்.இதற்குக் காரணம் கால் நூற்றாண்டுக் காலத்துக்கு மேலாகப்
பள்ளி ஆசிரியராக இருந்தும் பணம் சம்பாதித்துச் செல்வச் செழிப்புடன் வாழ
முடியாததால் உடலும் உள்ளமும் தேய்ந்து சோர்ந்து போகிறார்.ஆசிரியர் தொழில் செய்து
சம்பாதித்துச் சொத்துச் சேர்க்க முடியாததால், சத்தியமூர்த்தி தன் இலட்சியக் கனவாக நினைக்கும் ஆசிரியர்
தொழிலுக்குச் செல்ல விரும்புவதைத் தடுக்கிறார்.வறுமையில் உழலும் தன் குடும்பத்தின்
நிலைக்கு ஆசிரியர் தொழிலே காரணம் என்கிறார்.
வறுமையை
இருவரும் பல்வேறு கோணத்தில் காண்கின்றனர்.சத்தியமூர்த்தி வறுமையைத் தன்
உயர்வுக்குத் தடையாகக் கருதவில்லை.வறுமையிலும் நன்கு கற்று தமிழில் முதுகலைப்
பட்டம் பெறுகிறான்.பிறகு, தமிழ் விரிவுரையாளராகப் பணிப்புரிய வேண்டும் என்ற
கொள்கையுடன் திகழ்கிறான். இதற்கு எதிர்மாறாக அவன் தந்தை வறுமையை ஒரு பலவீனமாக
நினைக்கிறார்.வறுமையின் காரணமாக சத்தியமூர்த்தியைக் கண்ணாயிரத்திடம் வேலை
கேட்கும்படி வற்புறுத்துகிறார்.வீட்டின் மேல் பகுதியைப் புதுப்பிக்க கடன்
வாங்குகிறார்.
இதனைத்
தொடர்ந்து சத்தியமூர்த்தி உயர்ந்த இலட்சியங்களைக்கொண்டவன்.குறைவான
சம்பளம் பெற்றாலும் ஆசிரியர் தொழிலையே விரும்புகிறான்.மாணவர்களிடையே எழுச்சியான
உணர்வுகளை மேலோங்கச் செய்வதையே இலட்சியமாகக் கொண்டவன்.மோகினியின் இறப்பு மனதில்
ஆறா துயரத்தை ஏற்படுத்தியிருந்தாலும் ஜெர்மனிக்கு உயர்கல்வியை மேற்கொள்ள செல்லத்
தயங்கியதே கிடையாது.சவால்களைச் சமாளிக்க, நாம் புது முயற்சியில் ஈடுபட்டு நம்மை மேலும் உயர்த்திக்
கொள்ளும் மனப்பாங்கு இருத்தல் அவசியம் என்பதற்கிணங்க சத்தியமூர்த்தி
செயல்படுகிறான். “ஆக்கம்
அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கமுடையா னுழை” என்ற திருவள்ளுவரின் கூற்றுக்கேற்ப சத்தியமூர்த்தி தன்
வாழ்விலும் கடைப்பிடித்துள்ளான்.ஆனால். அவன் தந்தையோ எந்தவொரு இலட்சியமும்
கொண்டிராது தன் வாழ்க்கையைக் கழிக்கிறார்.
சத்தியமூர்த்தி
கொள்கை தவறாதவன்.அவன் கண்ணாயிரம் போன்றவர்களின் நடவடிக்கைகளில்
வெறுப்பு கொள்கிறான்.அறத்தை என்றும் நாடுபவனாகத் திகழ்கிறான். தன் வாழ்வில்
என்றும் உண்மையான வழியைத் தேர்ந்தெடுக்கிறான்.ஜமீன்தார் மற்றும் கண்ணயிரம் போன்ற
அநீதியை இழைப்போரை எதிர்க்கும் தன்மையைக் கொண்டவன். கடமைத் தவறா கொள்கையைச்
சத்தியமூர்த்தி கொண்டுள்ளான்.தன் தொழிலைச் செவ்வன செய்து தன் மாணவர்களின் நலன்
கருதும் ஓர் புரட்சிகரமான ஆசிரியராகத் திகழ்கிறான்.மோகினியுடன் தூய்மையான காதலைக்
கொண்டுள்ளான் ; பாரதியிடமோ
மாணவி என்ற உறவை மட்டுமே கொண்டிருக்க விரும்பி கண்ணியமாகப் பழகுகிறான்.ஆனால்,
சத்தியமூர்த்தியின் தந்தையோ கொள்கையை விட்டுக் கொடுக்கும்
பண்பைக் கொண்டவராக விளங்குகிறார். துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்ற கொள்கைக்குச்
சற்றும் இடங்கொடாமல் தன் தேவைக்காகக் கண்ணாயிரம், மஞ்சள்பட்டி ஜமீன்தார் போன்ற அற்பனத்தனமும் தீய எண்ணமும்
கொண்டோருடன் பழகுகிறார் ; அடிபணிந்து போகிறார்.
‘சாதி
இரண்டொழிய வேறில்லை’ என்ற
பாரதியின் கூற்றுக்கொப்ப சத்தியமூர்த்தி குடிப்பிறப்புக்குமுக்கியத்துவம்
வழங்காமல் பண்புக்கே முதலிடம் தருகிறான்.மோகினி தாசி குலத்தில் பிறந்தாலும் அவளின்
நற்குணங்களைப் போற்றி அவளைத் தன் வாழ்க்கைத் துணைவியாகத் தேர்ந்தெடுக்க
சித்தமாகவுள்ளான்.ஆனால். அவன் தந்தை பண்பைவிட குலத்திற்கே முக்கியத்துவம்
அளிக்கிறார். மோகினி தாசி குலத்தில் பிறந்ததைச் சுட்டிக்காட்டி ‘கூத்தாடறவளோட உனக்கென்ன பழக்கம்’ என்று துச்சமாகப் பேசுகிறார்.
சத்தியமூர்த்தியைப் பொருத்தமட்டில் பொறுமையைக்
கடைப்பிடிக்கிறான். தன் தந்தை தன்னைக் கண்டிக்கும் பொழுது அல்லது திட்டும் பொழுது
எதிர்த்துப் பேசாமல் பொறுமையைக் கடைப்பிடிக்கிறான்.ஆனால், கொள்கைகளைப் பொறுத்தமட்டில் பொறுமை இழக்கிறான். மறுபக்கம்,
சத்தியமூர்த்தியின் தந்தை மகனைப் பொறுத்தமட்டில் பொறுமை
இழக்கிறார். மஞ்சள்பட்டி ஜமீன்தாரிடன் மன்னிப்புக் கேட்டு சமரசமாகப் போகச்
சொன்னதற்கு அவன் உடன்படாதபோது பொறுமை இழந்து அவனைத் திட்டுகிறார்.ஆனால்,
கொள்கையைத் துச்சமாக மதித்து, தன்மானம் போனாலும் மஞ்சள்பட்டி ஜமீன்தாரிடம் எடுபிடியாக
இருக்க சம்மதிக்கிறார்.
ஆகவே,
பொன் விலங்கு நாவலில் சத்தியமூர்த்தியும் அவன் தந்தையும்
வெவ்வேறு கோணத்தில் வேறுபட்டே காணப்படுவது வெள்ளிடைமலை.சத்தியமூர்த்தி இன்றைய
இளைஞர்களின் வாழ்க்கையில் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளும் ஒரு கதைமாந்தராக
நாவலாசிரியர் படைத்துள்ளார்.
No comments:
Post a Comment