“ யார் தமிழ் படிப்பார் ” என்ற கவிதையின் வாயிலாகக் கவிஞர்
தமிழ் மாணவருக்குக் கூறும் கருத்துகளைத்
தொகுத்து எழுதுக.
ஆக்கம்:
குமாரி
புஷ்பவள்ளி சத்திவேல்
SMK Taman Selesa Jaya,
Johor Bahru,Johor.
தமிழ்க்கல்வியின்பால் அதிக அக்கறை கொண்ட கவிஞர் பொன்முடி அவர்களின்
கைவண்ணத்தில் மலர்ந்த யார் தமிழ் படிப்பார் என்ற கவிதையானது கவிதைப் பூங்கொத்து
என்ற கவிதைத் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ளது. உயர்நிலைக்கல்வி வரை தமிழ்க்கல்வி
தொடர்ந்தால்தான் இந்நாட்டில் தமிழ் வளரும் என்ற உன்னத கருத்தினைக் கருப்பொருளாகக்
கொண்டே இக்கவிதை உருவாகியுள்ளது.
நம்
நாட்டில் தமிழ் வளர்ச்சி வாய்ப்புகள் பல வகைகளிலும் குறைந்து வருகின்ற
சூழ்நிலையில், தமிழ் வளர்ச்சி அடிப்படைக் களமாக
விளங்கும் தமிழ்ப்பள்ளிகளில் தொடக்கக் கல்வியைப் பெற்ற மாணவர்களே
இடைநிலைப்பள்ளிக்குச் சென்றதும் தமிழ்ப் படிப்பதைக் கைவிடுவதை எண்ணிய கவிஞரின்
ஆற்றாமையின் வெளிப்பாடாக அம்மாணவர்களை நோக்கிப் பேசும் குரலில் இக்கவிதை
அமைந்துள்ளது.
இடைநிலைப்பள்ளியில் காலடி பதிக்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பலர் தமிழைத்
தொடர்ந்து படிக்க தயக்கம் காட்டுவதைக் கவிஞர் சுட்டிக் காட்டுகிறார்.
தமிழ்ப்பள்ளியில் தமிழ் பயின்று வந்த மாணவர்களே தொடர்ந்து தமிழ் படிக்காவிட்டால் , தொடர்ந்து ஒலியெழுப்பிக் கொண்டிருக்கும் கடல் சூழ்ந்த இந்த பேருலகில் வேறு
யார் தமிழைப் படிக்க முன்வருவார்கள் என்ற கேள்வியை முன்வைக்கிறார்.
அமிழ்தினும்
இனிய தேன் தமிழ்மொழி நமக்குத் தாய்மொழியாக அமையப்பெற்றது நாம் பெற்ற பேறு. தாயின்
நலனைக் காப்பது பிள்ளையின் கடமை என்பதற்கொப்ப நம் தாய்மொழியைக் காப்பது நம்
முக்கிய கடமை என்பதை உணராது பலர் இருக்கின்றனர். என்று கவிஞர் வருத்தத்துடன்
கூறுகிறார். தொடக்கக் கல்வி பெற்ற தமிழ்ப்பள்ளியில் தோளில் சுமந்த அந்தக் கடமையை
இடைநிலைப்பள்ளிக்கு வந்த பின்னால் இறக்கி வைக்க அவர்கள் துணிகின்றனர். ஓராண்டோ
ஈராண்டோ அல்லாமல் ஆறு ஆண்டுகளாகத் தமிழ்ப்பள்ளியில் பயிற்று மொழியாக விளங்கி
அவர்களுக்கு அடிப்படையான தொடக்கக் கல்வியை வழங்கிய தமிழ்மொழியின் அருமையை மறந்து
விட்டு , இன்று புளித்து போய்விட்டது என்று
கூறுவதைக் கவிஞர் வன்மையாகச் சாடுகிறார்.
முதன்முதலில்
தங்கள் அறிவில் அழுத்தமாகப் பதிந்த தமிழை, கல்வியில் பாதிவரை வந்த பின்னர்
ஏளனமாகப் பேசி ஒதுக்கும் எண்ணம் இவர்களுக்கு எப்படி வந்தது என்று கவிஞர்
வியக்கிறார்.பொதுவாகத் தொடர்ந்து ஒரே உணவை உண்பதால் உணவின் மீது வெறுப்பு
ஏற்படலாம் ; தின்னும் அங்காடிப் பண்டங்கள் கூட
மிகுதியாகத் தின்றால் சடைவு தரலாம் ; சில வேலை கண்கள் கூட சில காட்சிகளைக்
காண மறுத்துவிடலாம். ஆனால், பெற்ற தாயையே பிள்ளை மறுத்து
விடுவதும் , உற்ற துணையாய் விளங்கும் தாயின்
அன்பையே உதறித் தள்ளிவிடுவதும் மற்றவர்களின் மத்தியில் மதிப்பையும் பாராட்டையும்
தருகிற செயல்களாகுமா என்று கவிஞர் இவர்களை யோசிக்கச் சொல்கிறார்.
மேலும், தமிழர்களே தமிழ் படித்தால் முன்னேற முடியாது என்று பேசியும் தமிழ் சோறு போடுமா
என்று வினா எழுப்புவது கவிஞரைக் கொதித்தெழச் செய்துள்ளது. இவ்வாறு கேள்வி கேட்கும்
தமிழர்களைப் போல் ஓர் இனம் இந்த உலகில் வேறு எங்குமே இல்லை என்பதால் வீறு குறைந்து
வீணனாகிவிட்ட இவனைக் கொன்று உடலைக் கூறுபோட்டாலும் தம் சினம் தீராது என்று
சினத்தின் உச்ச விளிம்பில் நின்று கூறுகிறார். எந்த நாட்டிலாவது எந்த மொழியாவது
சோற்றை ஏந்திக் கொண்டு வந்து, துவையலும் கறியும் கலந்து பிசைந்து
ஊட்டுவதில்லை; மாறாக அயராத உழைப்பும் தளராத மன
உறுதியும் உடைய எவனும் தன்னுடைய குறைகளுக்குத் தன் மொழியின் மீது பழி கூறுவதில்லை
என்பதே கவிஞரின் ஆற்றாமைக்கு முழுமுதற்காரணமாக விளங்குகிறது என்பது வெள்ளிடைமலை.
“ மொழியே இனத்தின் விழி ” என்பதனை அறியாத தமிழ் மாணவர்கள்
தாங்கள் தமிழ் கற்றதால்தான் வாழ்க்கையில் தலையெடுக்க முடியாமல் போய்விட்டதென்று
புலம்புவது ஒப்புக் கொள்ளக் கூடியச் செய்தியாகுமா என்று கவிஞர் தன் ஆதங்கத்தை
வெளிப்படுத்துகிறார். எந்தத் தாயும் தான் பெற்றெடுத்து சீராட்டி பாராட்டி வளர்த்த
அருமை குழந்தைக்கு எதிரியாகித் தீயாக மாறி அவனைத் தீய்த்துவிடும் செயலில் ஈடுபடுவதில்லை.
அவ்வாறே தமிழ் மொழியும் நம் முன்னேற்றத்திற்கு மட்டுமே வித்திடும். தாய்மொழியே
நமக்கு உணர்வாகவும் உயிர்ப்பாகவும் விளங்குகிறது. அதுவே நமது உரிமைகளை இந்நாட்டில்
நிலைநாட்டக்கூடிய பட்டயமாகும். அத்தகைய உரிமையிழந்த அடிமை நிலையடைந்த இனமாக நாம்
மாறினால் பெருமை வாழ்வைப் பெறவா முடியும் என்று கவிஞர் நம் சிந்தைக் கதவைத்
தட்டுகிறார் .
“ மொழி அழிந்தால் இனம் அழியும் ” என்று உலக வரலாறு நமக்கு கற்றுக் கொடுத்தப் பாடம். அவ்வகையில் தாய்மொழியின்
நலமே இனத்தின் நலனையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் என்பது மறுக்கமுடியா
ஆணித்தரமான உண்மை. அத்தகைய தாய்மொழி நம் நாட்டில் தழைத்து ஓங்குவதும் , இளைத்து வலிமை குன்றுவதும் தமிழ் படிக்கும் மாணவர்களின் கைகளில்தான் உள்ளது
என்று கவிஞர் பாசமிகு தந்தைபோல் உணர்த்த விழைகிறார்.
ஆகவே, தமிழ் மாணவர்கள் தொடர்ந்து உயர்கல்விநிலை வரை தமிழ் படிப்பதை ஊக்குவிக்கும்
அதே வேளையில் ” தமிழ் முன்னேற்றத்திற்குத் தடை ” என்னும் எதிர்மறை மனப்போக்கைத் தகர்த்தெறியும் நடவடிக்கைகளும் இன்றியமையாதது
என்ற கருத்தினையும் கவிஞர் நம்மை உய்த்துணர வழிவகுத்துள்ளார்.
No comments:
Post a Comment