“ மாசக்தி ” கவிதையின் மூலம் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து
எழுதுக.
ஆக்கம்:
குமாரி
புஷ்பவள்ளி சத்திவேல்
SMK Taman Selesa Jaya,
Johor Bahru,Johor.
செந்தமிழ்க் கவிஞர் காரைக்கிழார் அவர்களின்
கைவண்ணத்தில் மலர்ந்துள்ள கவிதையே “ மாசக்தி ” . இக்கவிதையானது கவிதைப் பூங்கொத்து எனும் கவிதை தொகுப்பு நூலில் இடம்
பெற்றுள்ளது. கவிஞனின் படைப்பாற்றலும் வரம்பு மீறிய பேராற்றலே என்ற மையக்
கருத்தினை ஒட்டி இக்கவிதை இயற்றப்பட்டுள்ளது.
உலகில் வழக்கமான
நிலையில் முடியாததாக இருக்கும் எதையும் கவிஞன் தன் கற்பனை இலக்கியத்தில்
படைத்துவிடும் ஆற்றலைப் பெற்றிருக்கிறான் என்பது மறுக்க இயலா உண்மை. அவ்வகையில்
தீயிலிருந்து வெளிச்சம் தரும் சுடரை வெளிப்படுத்தியபடி கொழுந்துவிட்டு எரிந்து
கொண்டிருக்கு நெருப்பின் நீலநிறப் பகுதியில் , தேன் ஒழுகக் கூடிய புதுமலர்களைத் தம்மால் பூக்குமாறு செய்ய முடியும் என்று
கவிஞர் தன் பேராற்றலை வெளிப்படுத்துகிறார்.வெப்பமூட்டிக் காய்ச்சப்பட்ட வெண்ணெய்
உருகி, அதிலிருந்து வரும் நெய்யை, வெப்பமிக்க நெருப்புக் கனலுக்குள்ளேயே வைத்து மீண்டும் உலர்ந்து
கெட்டிப்படுமாறு செய்யும் மாசக்தி தமக்கு வாய்த்திருப்பதாக கூறி நம்மை வியக்க
வைக்கிறார்.
“ அணை
கடந்த வெள்ளம் அழுதாலும் வராது ” என்ற வாக்கியத்திற்கொப்ப கடந்து விட்ட
காலம் மீண்டும் வாராது; மறைந்துவிட்ட முன்னோர்களை மீண்டும்
சந்திக்க இயலாது என்பதே இயற்கை விதி. ஆனால், கவிஞரோ காலம் எனும் ஆழமான கடலுக்குள்
மூழ்கி மறைந்துவிட்ட முன்னோர்களைத் தம்மால் மீண்டும் கண்ணுக்கு எதிரில் நேராகக்
கொண்டு வந்து பேசுமாறு செய்ய இயலும் என்று தம் கவிதையின் மாசக்தியை
இயம்புகிறார்.மேலும், வாழ்க்கை முடிவு நேரத்தில் வந்து
உயிரைப் பறிக்கும் காலனாகிய எமனைக் கூட தன் கட்டளைப்படி வரவழைத்து தனக்கு மண்டியிட்டு
அடிபணிந்து பணிவிடைகள் புரிந்து அருகில் நின்று விசிறுமாறு செய்யும் பேராற்றல்
கொண்டிருப்பதாகக் கூறி நம்மை ஆச்சரியக் கடலில் மூழ்கடிக்கிறார்.
தொடர்ந்து, காற்று மண்டலத்துக்கு அப்பால் புவியீர்ப்பு ஆற்றல் இல்லாமையால் பொருள்கள் எடை
இல்லாதவையாக மாறிவிடக்கூடிய எல்லையற்ற விண்வெளி உலகில், எண்ணாயிரங்கோடி என்று சொல்லத்தக்க அளவில் எண்ணிக்கையற்றவையாக மறைந்திருக்கிற
விந்தைகள் அதிகம் என்று அறிவியல் நமக்குக் கற்பித்திருக்கிறது என்றாலும் விண்வெளி ஆராய்ச்சியில் இன்னும் விழி பிதுங்கிய
நிலையிலேயே இருக்கும் உலக மனிதருக்கு, மறைந்திருக்கும் விந்தைகளை எல்லாம் எல்லோருக்கும் புரியும் வண்ணம் தன்னால்
காட்ட முடியும் என்றும் கவிஞர் தன்னம்பிக்கையோடு கூறுகிறார். தாயின் மடியில்
தவழ்ந்து பின் மண்ணில் மடியில் அடங்கிப் போவதே வாழ்க்கை நியதியாக இருப்பினும் , வாழ்க்கை இறப்பால் முடிந்து போய்விடாதபடி அதனைக் கால வரம்பின்றித் தொடரச்
செய்யும் தன் ஆற்றலைக் கவிஞர் பெருமைப்படச் சொல்கிறார்.
இதனைத் தவிர்த்து, அணு செறிந்த இந்த உலகில் உயர்ந்த படைப்பாகிய மனிதனுக்கு வாய்த்திருக்கும்
அறிவின் உச்சநிலையாகக் கருதப்படும் ஆறு அறிவு வகைகளையும் தான் ஆராய்ந்து
அவற்றுக்கு அப்பால் ஏழாவது அறிவையும் இந்த மண்ணுலகத்தில் உருவாக்கும் சக்தியைத்
தான் பெற்றிருப்பதோடு மட்டுமல்லாது ஓர் இரவுப் பொழுது முடிவடைவதற்குள்ளேயே ஒரு
கோடி பகல் பொழுதுகளை மீண்டும் மீண்டும் தோன்றுமாறு செய்து பின்னர் அவற்றை
மறையுமாறு செய்யவும் தன்னால் சாத்தியப்படும் என்று கவிஞர் கூறுகிறார்.
மேற்கண்ட கவிஞர் கூறிய அனைத்து செயல்களையும்
நடைமுறைப்படுத்த இயலுமா என்று நாம் யோசிக்கும் தறுவாயில் அத்தகைய எல்லாச்
செயல்களையும் செய்துமுடிக்கக் கூடிய ஈடு இல்லாத மாபெரும் ஆற்றல் தன்னிடம் இருப்பதை
அனைவரும் உணர வேண்டும் என்றும் கவிதை என்று சொல்லப்படுகிற, காலத்தை வெல்லக்கூடிய வலிமைவாய்ந்த அந்த பேராற்றலின் காலடிகளைத் தேடி அவற்றில்
மலர்களைச் சொரிந்து பணியுமாறும் கவிஞர் நம்மை வேண்டுகிறார்.
அறிவியல், கற்பனைக்குச் செயல்வடிவம் கொடுக்கும் இன்றைய காலக்கட்டத்தில் இலக்கியப்
படைப்பாளர்களின் நம்பமுடியா கற்பனை கருத்தாக்கங்கள் நாளைய உலகில் உண்மை நடப்புகளாக
மாறும் சாத்தியக்கூறு இருப்பதால் மனிதன் முடிந்ததை மட்டுமே தொடர்ந்து
செயலாக்குவதின்றி முடியாததை நோக்கி நம்பிக்கையுடன் பயணம் மேற்கொள்பவனாக இருக்க
வேண்டும் என்ற மறைப்பொருளையும் நாம் உய்த்துணர கவிஞர் அழகாய் வழிவகுத்துள்ளார்.
ஆகவே, நாம் கவிதை இயற்றும் கலையை வளர்த்துக் கொண்டு கவிஞரைப் போல் கற்பனை உலகின்
உச்சத்தைத் தொட்டு நாமும் மகிழ்வதோடு மற்றவரையும் மகிழ்விக்க வேண்டும்.
No comments:
Post a Comment