காளிங்கராயரும் தளபதியும் மேற்கொண்ட சதித்திட்டங்களை
விளக்கி எழுதுக.
ஆக்கம்:
குமாரி புஷ்பவள்ளி சத்திவேல்
SMK Taman Selesa Jaya,
Johor Bahru,Johor.
இலக்கிய மைந்தன் இரா.பழனிசாமியின்
கைவண்ணத்தில் மலர்ந்த ‘காவிய நாயகி’ எனும் நாடகம் புறநானூற்றுப் புலவர் வெண்ணிக்குயத்தியாரின்
பாடலை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும்.கணவனின் மானங்காக்க உறுதியுடன் போராடும்
பொன்னி என்ற பெண்ணை மையமாகக் கொண்டு இந்நாடகம் எழுந்துள்ளது.இந்நாடகத்தில்
எதிர்மறைக் கதாபாத்திரங்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ள காளிங்கராயரும் தளபதியும் பல
சதித்திட்டங்களை வஞ்சகமாகத் தீட்டி சோழ அரசாட்சியைக் கைப்பற்ற மனப்பால்
குடிக்கின்றனர்.
முதலில், பொன்னிக்குத்
தண்டனைப் பெற்றுத் தந்து சோழன்
கரிகாலனுக்கு எதிராக மக்கள் புரட்சியை ஏற்படுத்த இருவரும் சதித்திட்டம்
தீட்டுகின்றனர்.வெண்ணிப்பறந்தலைப் போரில் கரிகாலன் போர் நியதியை மீறி
பெருஞ்சேரலாதனை வீழ்த்தினான் எனக் குற்றஞ்சாட்டும் பொன்னியை மன்னன் விருந்தினர்
விடுதியில் தங்க வைக்கிறான்.இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி, காளிங்கராயரும் தளபதியாரும் இரும்பிடர்த்தலையாருக்குத்
தூபமிட்டுத் தூண்டிவிட , அவர் கரிகாலனைச் சந்தித்து பொன்னி சேரனின் ஒற்றர் படையைச்
சேர்ந்தவள் எனக் குற்றம் சுமத்துகிறார்.ஆனால்,கரிகாலனோ வழக்கு விசாரணைக்கு முன்பே பொன்னியைத் தண்டிக்க
மறுத்து ,தீர
விசாரிப்பதாகக் கூறுகிறான்.சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு இது பெருத்த ஏமாற்றமாக முடிகிறது.
இரண்டாவதாக, புலவர் பொன்னிக்கும் கரிகாலனுக்கும் காதல் என்று புரளியைக் கிளப்பி கரிகாலன் குடும்பத்தில்
தளபதியாரும் காளிங்கராயரும் குழப்பத்தை ஏற்படுத்த முயலுகின்றனர்.பொன்னி கைப்பட
எழுதியதாக ஒரு பொய்யான ஓலையைத் தயாரித்து அதனைத் தளபதி வேண்மாளின் அந்தப்புரத்தில்
போட்டு பின் அவரே அதனை எடுத்து கரிகாலன் தவறவிட்டதாகக் கூறி வேண்மாளிடம்
கொடுக்கிறார்.வேண்மாள் அந்த ஓலையைக் கண்டு மனம் விம்முகிறாள்.உடனே,வேண்மாள் அது குறித்து இரும்பிடர்த்தலையாரிடம் புகார் செய்ய,
அவர் கரிகாலனிடம் விசாரிக்கிறார்.அவ்வேளை பொன்னி எழுதிய
உண்மையான ஓலை வர, அதில்
கையெழுத்தும் பொருளும் மாறுபட்டிருப்பதன் மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது;
கரிகாலன் குற்றமற்றவன் என்பது உறுதியாகிறது.இதனால்,
நயவஞ்சகர்களான காளிங்கராயரும் தளபதியும் தீட்டிய இரண்டாவது
திட்டமும் தோல்வியடைகிறது.
பேராசைக்கும் பதவி மோகத்திற்கும் அடிமையான காளிங்கராயரும் தளபதியும்,
பாண்டிய மன்னனின் உதவியோடு சோழப் பேரரசைக் கைப்பற்ற திட்டம்
தீட்டுகின்றனர். காளிங்கராயர் ஒரு நாள், பாழ்மண்டபத்தில் துறவி வேடத்தில் வந்த பாண்டிய
மன்னனின் ஒற்றனைச் சந்திக்கிறார்.இருவரும் இரகசிய ஓலைகளை மாற்றிக்
கொள்கின்றனர்.அதை மறைந்திருந்து கவனிக்கும் துறவி வேடம் தரித்த கரிகாலன் மடலாய
அமைச்சர் காளிங்கராயரின் மேல் மோதி அவர் வைத்திருந்த ஒலையைப் பறிக்கிறான்.அதன்வழி,
நாடிழந்த பாண்டிய மன்னனின் படை இரகசியங்களையும்
காளிங்கராயரின் துரோகத்தையும் கரிகாலன் அறிகிறான்.சதித் திட்டத்தை நிறைவேற்ற
ஐயாயிரம் பொற்காசுகளைக் காளிங்கராயரிடம் கொடுத்துவிட்டுப் போன பாண்டிய நாட்டு
ஒற்றனையும் கரிகாலன் பின்னர் கைது செய்கிறான்.
நான்காவதாக, பொன்னியைக் கொன்று அந்தப் பழியைச் சோழ மன்னன் கரிகாலன் மீது
போட விஷ வைத்தியன் கார்கோடகனை ஏவுகின்றனர்.கார்கோடகனை அரசாங்க
விடுதிக்கு அதிகாரியாக நியமித்து பொன்னியை விஷம் வைத்து கொல்லுமாறு
தூண்டுகின்றனர்.அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற ஆசை வார்த்தையில் மயங்கி
கார்கோடகனும் சம்மதிக்கிறான்.விருந்தினர் விடுதியில் கார்கோடகன் விஷம் கலந்த உணவு
தட்டோடு பொன்னியைத் தேடுகிறான்.கோட்டைக் காவலர்கள் தீவட்டி,
அமாவாசை மூலம் கார்கோடகனைப் பற்றி அறிந்த துறவி வேடம் கொண்ட
கரிகாலன் விரைந்து அங்குச் செல்கிறான்.பின்னர், கார்கோடகனிடமிருந்த சோற்றுத் தட்டைப் பறித்து அச்சோற்றை
குருவிகளுக்குப் போடுகிறான்.நஞ்சு கலந்த உணவைத் தின்ற குருவிகள் துடிதுடித்து
பரிதாபமாக இறக்கின்றன.சதித்திட்டத்தைக் கார்கோடகன் ஒப்புக் கொள்ள,
அவனை இரகசியச் சிறையில் அடைக்கிறான் கரிகாலன்.
இறுதியாக , கார்கோடகன்
சிறைப் படுவதற்குக் காரணமான துறவியைக்(கரிகாலன்) கொல்ல இருவரும்
சதித்திட்டம் தீட்டுகின்றனர்.வேங்கையன் எனும் முரடன் தன் குடும்பச் செலவுகளுக்குப்
பொருள் வேண்டி காளிங்கராயரைக் காண வருகிறான்.அதனைத் தங்களுக்குச் சாதகமாக்கி
அவனுக்குப் பொருளைத் தந்து துறவியைக் கொன்று விடுமாறு பணிக்கின்றனர்.ஆனால்,
வேங்கையன் துறவியக் கொல்ல முயன்றபொழுது,
பொன்னியின் எச்சரிக்கையால் துறவி காப்பாற்றப்படுகிறார்.பின்னர்,கரிகாலன் வேங்கையனைச் சிறையில் அடைக்கிறான்.
இவ்வாறு, எல்லாச் சதிச் செயல்களும் தோல்வியடைய காளிங்கராயரும்
தளபதியும் கரிகாலனிடம் வசமாக மாட்டிக் கொள்கின்றனர். தனது மதிநுட்பத்தைப்
பயன்படுத்தி எதிராக மேற்கொள்ளப் பட்ட அனைத்து சதித் திட்டங்களையும் தகர்த்தெறிந்த
கரிகாலன் அவ்விருவரின் முகத்திரையை
அரசவையில் கிழித்தெரிகிறான்.பால் வார்த்தவனையே தீண்டும் கருநாகங்களுக்கு ஒப்பான
காளிங்கராயரையும் தளபதியையும் விசாரித்து தக்க தண்டனை வழங்க ஆணையிடுகிறான்.
“குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்ற தருஉம் பகை” எனும் பொய்யாமொழிப் புலவரின் அமுத வாக்கிற்கொப்ப
காளிங்கராயரும் தளபதியும் செய்த குற்றங்களாலே சீரழிந்தனர். அனைவரின்
வாழ்க்கைக்கும் இது ஒரு பாடமே.
No comments:
Post a Comment