மோகினியின் பண்புநலன்களை விளக்கி எழுதுக.
குமாரி புஷ்பவள்ளி சத்திவேல்
SMK Taman Selesa Jaya,
Johor Bahru,Johor.
எழுத்தாளர்
நா.பார்த்தசாரதியின் கைவண்ணத்தில் மலர்ந்த பல நாவல்களுள் பொன் விலங்கு
முக்கியமானதாகத் திகழ்கிறது.இந்நாவலில் முக்கிய துணைக் கதைமாந்தரான மோகினி பல உயர்
பண்பு நலன்களைக் கொண்டவளாக வலம் வருகிறாள்.
மோகினி தூய்மையானவளாகவும் ஒழுக்கம்
நிறைந்தவளாகவும் திகழ்கிறாள். “சேற்றில் முளைத்த செந்தாமரை போல” கணிகையர் குலப் பெண்ணாக இருப்பினும் ஒழுக்கத்தை உயிரினும்
மேலாகக் கருதுகிறாள்.ஆண்களோடு பழகவும் பேசவும் மோகினியை அவளது அம்மா
வற்புறுத்தினாலும் அவள் அதை மறுக்கிறாள்.மாதவியைப் போல் கற்புக்கரசியாகத் திகழும்
மோகினி இதனாலேயே அம்மாவின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகிறாள்;தற்கொலை செய்து கொள்ளவும் முயலுகிறாள்.
இதனைத் தவிர்த்து, மோகினி பொருட் செல்வத்திற்கும் பகட்டுக்கும் மயங்காதவளாக
விளங்குகிறாள்.காண்போரைச் சுண்டி இழுக்கும் அழகையும் உயர் கலைத்திறனையும்
கொண்டிருப்பினும் கொண்டிருப்பினும் அவற்றைப் பயன்படுத்தி பொருட்செல்வத்தைக்
குவிக்க எண்ணவில்லை.பணத்தாசைப் பிடித்த முத்தழகம்மாள் மோகினியை வைத்து நடனம் ,
விளம்பரம் என்று பணத்தை ஈட்டுவதில் அதிகமான முனைப்பு
காட்டினாலும் மோகினி அதில் எள்ளளவும் விருப்பம் கொள்ளவில்லை.மாறாக வாழ்க்கை
நெறிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாள்.எனவேதான் ஜமீன்தார் போன்றோரின்
பணக்காரர்களின் உறவையும் துச்சமாக மதிக்கிறாள்.
மேலும், மோகினி தூய்மையான
காதலைக் கொண்டிருக்கும் பெண்ணாகவும் பிரகாசிக்கிறாள். சத்தியமூர்த்தியின்
அன்புக்கு ஆளாகி அவனையே தன் கணவனாக மனத்திலே வரித்துக் கொள்கிறாள்.ஜமீன்தாரைத்
திருமணம் செய்து கொண்டிருந்தால் ஆடம்பரமான , பகட்டான வாழ்வு கிடைக்கும் என்ற வாய்ப்பு இருந்த பொழுதும்
அவள் கொண்ட கொள்கை மாறாது இருந்ததற்கு உள்ளத்தில் அசையாது சுடர்விட்டு எரியும்
காதல் ஜோதியே காரணமானது. இறுதிவரை அவனது நினைவாகவே வாழ்ந்து உயிரைத் துறக்கிறாள்.
அத்துடன், மோகினி
எளிதில் உணர்ச்சி வசப்படும் பண்பைக் கொண்டிருக்கிறாள்.ஆண்களோடு
பேசிப் பழகுவதில் மோகினி ஒத்துழைப்பு வழங்காததால் தாயின் கடுஞ்சொல்லுக்கு
ஆளாகிறாள்.தற்கொலை முயற்சிக்கும் ஆட்படுகிறாள்.ஜவுளிக்கடையில் சத்தியமூர்த்தி
கண்டும் காணாதது அவளுக்கு வேதனையைத் தருகிறது.பொய்யான திருமணக்கோலப் படத்தைப்
பார்த்து நம்பிய சத்தியமூர்த்தியின் வெறுப்பான சொற்களால் அனலில் இட்ட புழு போல துடிதுடிக்கிறாள்.
இவ்வாறு இருப்பினும், மோகினி இலட்சியப் பெண்ணாகத்
திகழ்கிறாள்.கலையைத் தெய்வமாக மதிக்கும் அவள், அக்கலையில் பூரணத்துவம் பெற்று தரமான படைப்புகளின் மூலம்
புகழ் எய்த இலட்சியம் கொள்கிறாள்.காதலில் மென்மை கொண்டாலும் தனது கற்பைக்
காப்பதில் வன்மையுடன் போராடுகிறாள். அவளது இத்தகைய இலட்சிய உறுதியே
சத்தியமூர்த்தியின் உள்ளத்தில் “நித்திய சுமங்கலியாக” வாழ வைத்தது எனலாம்.
இதுமட்டுமல்லாது, மோகினி தெய்வ பக்தி கொண்டவளாகவும்
விளங்குகிறாள்.துன்பம் வரும்போதெல்லாம் கோயிலுக்குச் சென்று இறைவனிடம்
முறையிடுகிறாள்.தான் கற்றிருக்கும் பரதக் கலையை இறைவன் சந்நிதியில் அரங்கேற்றவே
அவள் விரும்புகிறாள்.
ஆகவே, குலம் தாழ்ந்தாலும் தனது உயர்பண்புகளால் உயர்ந்து
நிற்கிறால் மோகினி.போராட்ட வாழ்வு உச்சத்தைத் தொடும் பொழுது அவள் தற்கொலைக்கு
எத்தனித்து உயிரை மாய்த்துக் கொண்டது படிபோரின் உள்ளத்தை நெகிழச்
செய்கிறது.சத்தியமூர்த்தியுடன் இல்லற வாழ்வில் இணையாமல் போனாலும்,
அவன் வாழ்ந்து நினைக்க இவள் ஒரு ஞாபகமாகி போனதன் மூலம் தன்
காதலில் வெற்றி அடைந்துள்ளது திண்ணமாகும்.
No comments:
Post a Comment