Sunday, November 18, 2012

‘எங்கள் நாடு’ எனும் கவிதை உனக்குள் ஏற்படுத்திய பாதிப்பினை விளக்கி எழுதுக.

எங்கள் நாடுஎனும் கவிதை உனக்குள் ஏற்படுத்திய பாதிப்பினை விளக்கி எழுதுக.


ஆக்கம்:
குமாரி புஷ்பவள்ளி சத்திவேல்
SMK Taman Selesa Jaya,
Johor Bahru,Johor.
 
 

நாடறிந்த மலேசியக் கவிஞர் சங்கு சண்முகத்தின் கற்பனையில் மலர்ந்த எங்கள் நாடுஎனும் கவிதை, ‘கவிதைப் பூங்கொத்துஎனும் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது.இக்கவிதையில் கவிஞர் தன் தாய் நாடான மலேசியாவின் தனிச் சிறப்புகளை எல்லாம் பெருமித உணர்வுடன் விளக்கியுள்ளதோடு சில படிப்பினைகளையும் நம் சிந்தனைக்கு விருந்தாக்கி உள்ளார்.அத்தகைய படிப்பினை என்னுள் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது.

   தீவிரவாதம்,அரசியல் நிலைத்தன்மை, போதிய இயற்கை வளங்கள் இன்மை,உள்நாட்டுக் குழப்பங்கள் என உலகின் பல்வேறு நாடுகள் அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய உலக அரங்கில் மலேசியா ஒரு சுவர்ணபூமியாக நிலைப்பெற்றுவருகிறது.மேலும்,பல்லின மக்கள் வெவ்வெறு கலைக் கலாச்சாரங்களைக் கொண்டிருப்பினும் பிணக்கம் இன்றி இணக்கமாக வாழ்கின்றனர்.இத்திரு நாட்டில் பிறந்ததை எண்ணி நான் பெருமையடைகிறேன்.என் மண் அமைதி பூங்காவாக உலக அரங்கில் வாசம் வீசுவதை எண்ணி பேருவகை அடைகிறேன்.இன்றிருக்கும் உயிர் நாளை இருக்குமா என்று தினம் தினம் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் பல நாட்டு மக்களை ஒப்பிட்டுப் பார்க்கையில், பல தனிச் சிறப்புகளைக் கொண்ட இந்நாட்டில் பிறக்க வைத்த இறைவனுக்கும் ஆயிரம் கோடி நன்றி மலர்களைச் சமர்ப்பிக்க விழைகிறேன்.

இன்றிருக்கும் உயிர்கள் யாவும் எங்கள் தாயின் பிள்ளையேஎன்ற கவிஞரின் வரிகள் என்னுள் தெளிவை ஏற்படுத்தியுள்ளது.இது என் தாய் நாடு என்பதால் இந்நாட்டில் வாழும் பிற இனத்தவர்களும் என்  உடன்பிறப்புகளைப் போன்றவர்களே என்பதை நான் உணர்கிறேன். ஒற்றுமையில்லாக் குடும்பம் ஒருமிக்கக் கெடும்என்ற பழமொழியானது குடும்பத்திற்கு மட்டுமல்லாது நாட்டிற்கும் பொருந்தும் என்பதால் வேற்றுமைகளைக் களைந்து பிற இனத்தவருடன் சகிப்புத்தன்மையுடனும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடனும் வாழ வேண்டும் என்று அறிந்து கொண்டேன். ஒன்று பட்டால் உண்டு வாழ்வுஎன்பதில் எத்துணை பெரிய உண்மை பொதிந்துள்ளது என்பதை உணர்வுப் பூர்வமாக உணர்ந்தேன். 

மேலும், “காடு மேடு சீர்படுத்திக் காதல் கொண்ட தந்தையர் நாடு மலை நாடு இது என்று நாவினிக்கப் பாடுவோம்என்ற கவிஞர் இயம்பி உள்ள வரிகளில் நாட்டு நலனுக்காகப் போராடிய நம் முன்னோர்களை வாழ்த்த வேண்டும் என்று உணர்ந்தேன்.காடு மேடாக இருந்த பகுதிகளைச் சீர் படுத்தி, இன்று நாம் வாழும் இடமாக மாற்றியமைத்த முன்னோர்களை நினைத்துப் பெருமையடைகிறேன்.மேலும்,பல்லாண்டு காலமாக ஆங்கிலேயரிடம் அடிமைப் பட்டுக் கிடந்த நம் நாட்டு சுதந்திரத்துக்காகப் போராடிய தலைவர்களையும் தம் உயிரைப் பணயம் வைத்து எதிரிகளிடமிருந்து காப்பாற்றிய நாட்டு வீரர்களையும் இவ்வேளையில் நினைவு கூர்கிறேன்.  

  சமயம்,உணவு,உடை,நம்பிக்கை, வாழ்க்கை முறை என பவ்வேறு கூறுகளால் வேறுபட்டுள்ள மலேசிய மக்கள், ‘தேன் சுரக்கும் பூவடா நம் தேசமக்கள் நெஞ்சமேஎன்பதற்கொப்ப  இனிய பண்புகள் கொண்ட மக்களாகத் திகழ்கின்றனர். நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல அந்த நல்ல நெஞ்சத்தில் வீணான பகையுணர்வு ஏற்பட நான் ஒரு போதும் காரணமாக மாட்டேன்;அவ்வாறு செய்பவர்களுக்கும் நான் ஒரு போதும் தோள் கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்.

   இதைத் தவிர, இக்கவிதையைப் படித்தப் பின் மலேசிய குடிமகன் என்ற ரீதியில் நானும் இந்நாட்டு முன்னேற்றத்திற்கு என்னால் ஆன உதவி அல்லது தொண்டினை ஆற்ற உறுதி பூண்டுள்ளேன்.இது நாள் வரை, நான் என் நண்பர்களுடன் சேர்ந்து நாட்டு உடைமைகளான் பொதுத்தொலைபேசி,கழிவறை,பூங்கா போன்றவற்றைச் சேதப்படுத்திக் கொண்டிருந்தேன்.நான் செய்த செயல்களால் இப்போது வருந்துகிறேன்.மேலும்,குப்பைகளைக் கண்ட இடங்களில் வீசுவது, திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பது,குப்பைகளை ஆற்றில் வீசுவது போன்ற என்னுடைய பொறுப்பற்ற செயல்களினால் நான் வாழும் இம்மண்ணிற்கு ஏற்படும் விளைவுகளை நன்கு உணர்ந்தேன்.ஒரு நாட்டிற்குத் தூய்மையான சுற்றுச்சூழலும் இயற்கை வளங்களும் இயற்கை அன்னை கொடுத்த வரப்பிரசாதம் ஆகும்.ஆகவே, இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது ஒரு நாட்டுக் குடிமகனின் தலையாயக் கடமை என்பதை நன்கு உணர்ந்துள்ளேன்.

  எங்கள் நாடுஎனும் இக்கவிதையானது என் மனதில் நாட்டுப் பற்றை உருவாக்கியுள்ளது என்றால் அதில் மிகையில்லை.போதைப்பொருள்,கொலை,கொள்ளை போன்ற நாட்டைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் என் தாய் திருநாட்டின் பெயரைக் களங்கப்படுத்துவதோடு நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் என்பதால் அப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஒருபோதும் ஈடுபட மாட்டேன்.இம்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடும் என் நண்பர்களியும் அறிவுரைக் கூறித் திருத்துவேன்.மேலும், நன்றாகப் படித்து வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமைச் சேர்ப்பேன். 

   ஆகவே, சந்தக் கவிஞர் சங்கு சண்முகத்தின் இக்கவிதை வழி நான் மலேசிய நாட்டின் சிறப்புகளை அறிந்து கொண்டதோடு என்னைச் சிறந்த குடிமகனாக உருவாக்கியுள்ளது என்றால் எள்ளளவும் ஐயமில்லை.மேலும், கவிஞரின் பேனா முனையில் தெறித்த இக்கவிதை வழி, இலக்கியம் மனித வாழ்வைப் பண்படுத்தும் ஊடகம் என்பதையும் உணர்வுப்பூர்வமாக அறிந்து கொண்டேன்.

No comments:

Post a Comment