Friday, November 16, 2012

பூபதியின் பாத்திரப்படைப்பை ஆராய்க.



பூபதியின் பாத்திரப்படைப்பை ஆராய்க.

ஆக்கம்:
குமாரி புஷ்பவள்ளி சத்திவேல்
SMK Taman Selesa Jaya,
Johor Bahru,Johor.


தமிழக நாவலாசிரியர் நா.பார்த்தசாரதியின் கைவண்ணத்தில் மலர்ந்த பல சிறந்த நாவல்களில் பொன் விலங்கும் ஒன்றாகும்.சத்தியமூர்த்தி என்ற இளைஞன் தன் தனி மனித வாழ்விலும் பொது வாழ்விலும் சந்திக்கும் போராட்டங்களை மையமிட்டு இந்நாவல் எழுந்துள்ளது. இந்நாவலில் முக்கிய துணைக் கதைப்பாத்திரமாக வலம் வரும் பூபதி நாவலின் கதை ஓட்டத்திற்கும் திருப்புமுனைக்கும் பெரும் பங்காற்றியுள்ளார்.

மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரியின் அதிபரான பூபதி பாசமிகு தந்தையாகô படைக்கப்பட்டுள்ளார்.தாயில்லா பிள்ளையான பாரதியை அக்குறை தெரியாமலே அன்பும் அரவணைப்பும் செலுத்தி வளர்க்கிறார். அவளுக்கு எந்தக் குறையுமில்லாமல் பேணி பாதுகாக்கும் அதே வேளையில் நற்பண்புகளையும் ஊட்ட அவர் தவறவில்லை. நேர்முகத் தேர்வின்போது மூன்று  ஆண்களுக்குத் தேநீர் கொடுத்து விட்டு நான்காவது நாற்காலியில் தானும் உட்கார்ந்து விடாமல் சற்றே நாணத்துடன் ஒதுங்கி நின்ற பாரதி, சத்தியமூர்த்தியின் கண்களுக்கு அவன் சந்தித்த அகம்பாவமிக்க செல்வகுடும்பத்துப் பெண்களில் முற்றிலும் புதுமையானவளாக இருந்ததற்கு பூபதியின் வளர்ப்பு முறையையே காரணமாகக் கூறலாம்.

எதையும் தீர ஆலோசித்து முடிவெடுக்கும் மனிதராகப் பூபதி இந்நாவலில் வலம் வருகிறார்.தமிழ் விரிவுரையாளர் பணிக்காக மதுரையிலிருந்து மல்லிகைப் பந்தலுக்கு நேர்முகப் பேட்டிக்கு வருகிறான் சத்தியமூர்த்தி.நேர்முகத்தேர்வின்போது சத்தியமூர்த்தி கூறும் பதிலால் மனத்திருப்தி அடைந்தாலும் இன்னோரு வயோதிக ஆசிரியரையும் அழைத்துப் பேட்டி காண்கிறார்.கல்லூரி முதல்வரின் முறையீட்டுக்கு இணங்காமல் நன்கு தீர சிந்தித்து சத்தியமூர்த்தியையே தமிழ் விரிவுரையாளர் பணிக்கு நியமிக்கிறார்.இதன் மூலம் அவரின் இப்பண்பு வெளிப்படுகிறது.

   மேலும், பூபதி உயர்ந்த இலட்சியவாதியாகவும் நாவலாசிரியர் படைத்துள்ளார். தொழிலதிபராக இருந்தாலும் கல்விச் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர் மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரியை சிறந்த போதானா முறையுடன் ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த கல்லூரியாக உருவாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் செயல்படுகிறார். அதற்குச் சிறந்த ஆசிரியர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை தானே மேற்கொள்கிறார்.உடல்நலம் சரியில்லாமல் இருந்தாலும் தன் வீட்டிலேயே நேர்முகத்தேர்வை வைத்து சத்தியமூர்த்தியின் அறிவையும் பண்பையும் சோதிக்கிறார்.தன் தந்தை மல்லிகைப் பந்தல் கல்லூரியை பல்கலைக்கழகமாக உயர்த்தும் எண்ணம் கொண்டிருப்பதைப் பாரதி சத்தியமூர்த்தியிடம் தெரிவிப்பது இதற்கு நற்சான்று.

பிறரின் திறமையைப் பாராட்டி உற்சாகப்படுத்தும் உன்னத மனிதராகவும் பூபதி இந்நாவலில் பிரதிபலிக்கிறார்.கல்லூரி தேநீர் விருந்தில் அனைவரும் ஆங்கிலத்தில் பேசியபோது சத்தியமூர்த்தி மட்டும் தமிழில் பேசியதைப் பாராட்டுகிறார். அதைத் தொடர்ந்து, சத்தியமூர்த்தி ஷி வாக்ஸ் இன் பியூட்டிஎன்ற ஆங்கிலக் கவிதையை விளக்கியதை வகுப்பின் வெளியிலிருந்து கேட்கும் பூபதி அவனைப் பாராட்டுகிறார். சத்தியமூர்த்தியின் திறமைக்கு அங்கீகரமாக அவனை உதவி வார்டனாகவும் நியமிக்கிறார்.

அத்துடன், பூபதி கண்டிப்புமிக்க மனிதராகவும் படைக்கப்பட்டுள்ளார்.தாம் நிர்வகிக்கும் கல்லூரி மாணவர்கள் கட்டொழுங்குடன் திகழ வேண்டும் என்பதற்காகப் பல சட்டதிட்டங்களை அமல்படுத்திகிறார். இறுதியாண்டு மானவர்கள் ஓர் அறையில் ஒருவர் மட்டுமே தங்க வேண்டும், மாணவர்கள் இரவு ஒன்பது மணிக்கு மேல் வெளியே செல்லக் கூடாது, அவசர காரியங்களுக்காக வெளியே செல்லும் மாணவர்கள் வார்டன் அல்லது துணைவார்டனிடம் அனுமதி பெற்றுச் செல்ல வேண்டும் , இல்லையேல் தண்டம் கட்ட வேண்டும் வேண்டும் போன்றவை அவற்றுள் அடங்கும். இராஜாராமன் என்ற மாணவன் தான் தேர்வில் தோல்வி அடைந்ததற்குக் கல்லூரி முதல்வரே காரணம் என்று கூறி அவரைக் கத்தியால் குத்திய சம்பவத்தைத் துணிவுடன் எதிர்நோக்கி அவனுக்கு அறிவுரை கூறி தன்னிலை உணரச் செய்தது அவரது கண்டிப்பை நன்கு வெளிப்படுத்துகிறது எனலாம்.

சான்றாண்மைப் பண்புகள் இருக்கும் அதே வேளையில் பூபதியிடம் சில குறைகளும் இருக்கவே செய்கின்றன.புகழுக்கு ஆசைப்படும்சாதாரண மனிதராகவே பூபதி விளங்குகிறார்.டில்லியில் வழங்கப்படும் விருதைப் பெறுவதற்கு மதுரை வரும் பூபதி சத்தியமூர்த்தியிடம் தன் பிறந்தநாள் விழாவையும் கல்லூரி ஸ்தாபகர் தின விழாவையும் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாட்டைச் செய்யச் சொல்லி அவனை வரவேற்பு இதழ் தயாரிக்கச் சொல்கிறார். அதுவரை சத்தியமூர்த்தியின் உள்ளத்தில் மிக உயர்ந்த இடத்தில் சிம்மாசனம் பெற்றிருந்த பூபதி இக்குணத்தாலேயே  மிக அற்பத்தனவராகக் காட்சியளிக்கிறார்.

இதைத் தவிர, பூபதி தீயவருடன் நட்பு பாராட்டும் குணம் கொண்டவராகவும் இருக்கிறார்.மஞ்சள்பட்டி ஜமீன்தார், கண்ணாயிரம் போன்ற நயவஞ்சகர்களுடன் ஏய் பூபதிஎன்று பேசிக் கொள்ளும் அளவுக்கு நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கிறார். அவர்களோடு சீட்டாடி பொழுதைக் கழிப்பதைக் காணும் சத்தியமூர்த்தியும் அதிர்ச்சிக்குள்ளாகிறான்.

       ஆகவே, “நெல்லுக்கும் உமியுண்டு, புல்லிதல் பூவுக்குமுண்டுஎன்பதைப் போல பூபதியிடம் சில குறைகள் காணப்பட்டாலும் மற்றவர்களுக்கு நன்மை செய்யும் சான்றாண்மை குணத்தால் உயர்ந்தே காணப்படுகிறார்.செல்வம் படைத்தவர்கள் தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்றில்லாமல் சமுதாயத்திற்குத் தொண்டு செய்ய முன்வர வேண்டும் என்ற கருத்தையும் நாவலாசிரியர் பூபதியின் மூலமாக மறைமுகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment