Sunday, November 18, 2012

“ உயிர்க்கவிதை ” - கவிஞர் கரு. திருவரசு



காண்பன யாவும் கவிஞன் கண்களுக்குக் கவிதையாய்த் தோன்றுவதை உயிர்க்கவிதை கவிதை வழி விளக்குக.


ஆக்கம்:
குமாரி புஷ்பவள்ளி சத்திவேல்
SMK Taman Selesa Jaya,
Johor Bahru,Johor.


  கற்பனைக் குதிரைக்குக் கடிவாளமிட்டு கவிதை எனும் தேரோட்டுவதில் வல்லமை படைத்தவர் கவிஞர் கரு. திருவரசு. அவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்திட்டது உயிர்க்கவிதை எனும் கவிதையாகும்.இது கவிதைப் பூங்கொத்து எனும் கவிதை தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது. கலைக்கண்களுக்குப் பார்ப்பதெல்லாம் கவிதையே எனும் கருப்பொருளைக் கொண்டு இக்கவிதை மலர்ந்துள்ளது.     உயிர்க்கவிதை எனும் தலைப்பில் கவிஞர் கவிதையைக் குறிக்காமல் உயிருள்ள பொருள்களையே கவிதையாக உருவகம் செய்து புதுமை படைத்திருக்கிறார்.கவிஞர்கள் கற்பனை ஊற்று பெருக்கெடுத்து ஓடும் திறன் பெற்றவர்கள் என்பதனை மெய்ப்பிப்பது போன்று மக்களின் கண்களுக்கு மிகச் சாதாரணமாகத் தெரியும் பொருட்களைக் கூட தனது கலைகண்ணால் தனிச்சிறப்பை எய்திட வழிவகுத்துள்ளார்.

 இப்பூவுலகிற்கு எழில் தோற்றத்தைக் கொடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பன மலர்கள். இதழ் மூடிய நிலையில் மொட்டாக இருக்கிற போது தோன்றுகின்ற ஒருவகையான அழகையும், இதழ்கள் விரிந்து முழுதும் மலர்ந்த நிலையில் தோன்றுகின்ற இன்னொரு வகையான அழகையும் காட்டுகிறது மலர். இதைத்தவிர பட்டுப்போன்று விளங்குகிற இதழ்களின் பளபளப்பும் இதழ்களி¢ன் மீது தங்கியிருக்கிற பனிநீர்த் துளிகளாகிய முத்துகளில் தோன்றுகின்ற மினுமினுப்பும்கூட அழகோவியம். மேனியில் படும்போது இதமான தீண்டலினாலும் குளிர்ச்சியினாலும் சிலிர்ப்பை ஊட்டுகிற தென்றல் காற்றினால் பரவும் நறுமணத்தில் தோன்றுகின்ற புதுமையான மயக்கத்தையும் தன் அரிய உடைமைகளாகச் சேர்த்து வைத்துள்ள குளிர்ச்சியான பூ ஓர் உயிருள்ள கவிதையென கவிஞர் இரசித்துக் கூறுகிறார்.

 இதைத்தவிர, குழந்தையும் இறைவன் படைப்பில் அற்புத உயிர்கவிதையே என்று கவிஞர் மொழிகிறார். குழந்தைகளின்  சின்னஞ்சிறு கைகால்களின் அழகிய அசைவுகளைக் காணும்போது அவற்றிலிருந்து உதிர்வன போல மனத்தில் தோன்றுகிற இனிய சொற்கள் கவிஞர்களுக்குத் தங்களின் கவிதைகளுக்கு ஏற்ற நல்ல சீர்களாய் வாய்க்கும். மேலும், தளர்ந்து நடக்கும் குழந்தையின் குறுநடையில் கவிதைக்குப் பொருந்துகிற அடிகள் உருவாகும் என்றும் அந்த அடிகளில் , எதுகை, மோனை இயைபு முரண் எனச் செவிக்கு இன்பமூட்டும் ஒரே விதமான ஓசைகொண்ட சொற்களால் செய்யுளைத் தொடுக்கிற தொடை என்ற கவிதைக்கூறும் சேர்ந்தே அமைந்திருக்கும். அந்தக் குழவியின் சிணுங்கல் அழுகைகூட செவிக்கு இனிய பண்ணாக ஒலிக்கும். பால்மணம் மாறாத மெல்லிய சிறிய வாயிலிருந்து வெளிப்படும் மழலை உளறல் மொழி தமிழர்களுடைய இலக்கியப் பண்பாட்டுக் கூறாக விளங்கும் அகம் புறம் என்னும் வாழ்க்கைப் பொருளை எடுத்துரைப்பது போன்ற இன்பத்தை நல்கும். கள்ளம் கபடு அற்ற இத்தகைய குழந்தையே கவிஞருக்கு உயிருள்ள கவிதையாகத் தோன்றுகிறது எனலாம்.

    அடுத்ததாக கவிஞர் கூற விழையும் உயிர்கவிதை பெண்ணாகும். பெண்களே உலகின் கண்கள் என்பர் சான்றோர். உலகத்துக்குப் பிள்ளைச் செல்வங்க¨ள ஈன்று தருவதால் பெருமைக்குரிய தாயாகி, குடும்பத்தில் உள்ளவர்களைப் பேணிக்காக்கும் செயலில் ஓர் உடன்பிறப்பும் ஆகி, வாழ்க்கையின் உயர் இலக்குகளை நோக்கிய பயணத்துக்கு உறுதுணையான வழித்துணையுமாகி , வாழ்வின் சரிபாதியைத் தன் துணைவருக்கு வழங்கி அன்புசெய்வதே உருவமாகக் கொண்ட தனிப்பெரும் சிறப்பு கொண்டவள் பெண் என்று கவிஞர் புகழ்மாலைச் சூட்டுகிறார். சுழன்றடிக்கும் காற்றின் வலிமையும் சிவந்த சுடர்களை விரித்து உலகைக் காக்கிற கதிரவனின் இயல்பும் கலந்து இந்த உலகம் முழுவதையும் இயக்குகிற மெல்லிய அலையாக உருவாகி வளரும் அந்தப் பெண்ணின் பெருமையை நாமும் உணர கவிஞர் வழிவகுத்துள்ளார்.  

 இதனைத் தவிர, இயல்பு வாழ்க்கையில் சாதாரணமாகக் கருதப்படும் பாட்டாளிகளிடத்தில் மற்றவர் காணாத அழகையும் சிறப்பையும் பல புதுமைகளையும் கவிஞர் காண்கிறார். மாசு எதுவும் அற்றதாகக் கருதப்படும் பனிநீர்த் துளியின் தூய்மையையும் பழித்து ஒதுக்குமளவுக்கு மிகுந்த தூய்மையுடையதாக பாட்டாளியின் வியர்வை விளங்குவதாகக் குறிப்பிடுகின்றார் கவிஞர். மேலும், பொங்கி வரும் கடுஞ்சினமுடையவன் போல சூரியன் தன் வெப்பமிக்க கதிர்களால் சுட்டுத்தீய்க்கிற மேனியிலும் , தொடர்ந்த கடினமான உழைப்பின் அடையாளமாகச் சேர்ந்திருக்கிற அழுக்கினிலும் , கனிந்த பழம்போன்ற  தன்மைக்கு மாறாக உழைப்பால் கன்றிக் கறுத்துக் காய்ப்பேறிச் சுருக்கம் விழுந்த உடலின் தோல் மடிப்புகளிலும் சிறப்புத்தன்மையைத் தன்னால் காண முடிவதாக கவிஞர் அழகுற கூறுகிறார் ; மனிதப் பிறவியின் எல்லாவிதமான உயர்வையும் தன் மணமாகப் பரப்பிக் கொண்டிருக்கிற பாட்டாளியைப் போற்றுகிறார். கவிஞர் தமது கூர்த்த பார்வையின் வாயிலாக கண்டுணர்ந்து கூறும் விவரங்கள் இதுவரை கண்டவருக்கும் காணாதவருக்கும் உயர்ந்த புதிய கோணத்தில் காண வாய்ப்பளித்திருக்கிறது என கூறினால் மிகையில்லை. அத்துடன், மலரும் குழந்தையும் அவை ஏற்படுத்தும் இன்பத்துக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் எப்போதும் எல்லா மக்களாலும் விரும்பிக் கொண்டாடப் படுவதைப் போன்று அவற்றினும் மிகுதியான பயன்களைத் தரும் பெண்ணும் உழைப்பாளியும் எப்போதும் விரும்பிக் கொண்டாடப்படுவதில்லை ; அவர்கள் தங்களுக்குரிய உரிமைக்காகவும் மதிப்புக்காகவும் இன்னும் போராட வேண்டிய நிலையிலேயே இருக்கின்றனர் என்ற சமூக சிந்தனையையும் கவிஞர் முன்வைத்துள்ளார்.    ஆகவே, அன்றாடம் வழக்கமாக நாம் காணும் அனைத்து பொருட்களும் எதோ ஒர் உன்னத சிறப்பை தன்னகத்தே கொண்டுள்ளன என்ற உண்மையினை நாம் உய்த்துணர வேண்டும் . அப்பொழுதுதான் தியாகத்தின் சின்னமாக விளங்கும் பெண்களையும் ஆக்கத்தின் சின்னமாக விளங்கும் பாட்டாளிகளைப் போன்றவர்களையும் நாம் மதித்து வாழும் பண்பு ஓங்கும் ; வாழ்வு சிறக்கும்.

No comments:

Post a Comment