Thursday, November 22, 2012

“காவியமும் ஓவியமும்” எனும் கவிதையின் வாயிலாகக் கவிஞர் கூற விழையும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.



காவியமும் ஓவியமும்எனும் கவிதையின் வாயிலாகக் கவிஞர் கூற விழையும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.



ஆக்கம்:
குமாரி புஷ்பவள்ளி சத்திவேல்
SMK Taman Selesa Jaya,
Johor Bahru,Johor.
 



    நிலத்தடியில் புதைந்திருக்கும் வைரத்தைப் போன்று தமிழ்க் கவிதையும் அடர்த்தியும் அழகொளிச் சுடரும் வாய்த்தது. அத்தகைய கவிதை எனும் வைரத்தைப் பிரகாசிக்கச் செய்வதில் கைதேர்ந்தவர் நம் மண்ணின் மைந்தர் முனைவர் முரசு நெடுமாறன்.இவரின் கைவண்ணத்தில் மலர்ந்த காவியமும் ஓவியமும் எனும் கவிதையானது கவிதைப்பூங்கொத்து எனும் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது. தேர்ந்த கலைஞனுக்குங்கூடத் தன் குழந்தையின் கிறுக்கல் அரிய படைப்பே எனும் மையக் கருத்தை ஒட்டி இக்கவிதை உருவாகியுள்ளது.இந்தக் கவிதையைக் கவிஞர் தமக்கும் தம் மகனுக்கும் இடையில் நடந்த ஒரு நிகழ்ச்சியாகவே படைத்திருக்கிறார்.

   கவிஞருக்குக் கவிதை எழுத வேண்டும் என்ற உணர்வுத் தூண்டல் ஏற்பட்ட காரணத்தால் படிப்பறைக்குச் சென்று அங்குச் சிதறிக் கிடந்த பழைய தாள்களை எடுத்து ஒழுங்குப்படுத்தி வைத்து எழுதுகோலையும் கையில் எடுத்துப் பிடித்தவாறு, எழுத விழைந்த கருப்பொருளைப் பற்றி கலந்து எழுந்த பல்வேறு உணர்வுகளையும் மனத்தில் மெல்ல ஓடவிட்டுக் கற்பனையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறுகிறார். கவிதை எழுதுவதில் முழுவதும் மூழ்கிவிட்ட நிலையில் தன் உடலில் ஏதோ ஒன்று உராய்வதுப்போல உணர்ந்தாலும் கவனம் திருப்பாமல் தன் வேலையைத் தொடர்கிறார். அப்போது பாட்டு என்ற தேனைப் பாய்ச்சிக் கொண்டிருந்த அவருடைய எழுதுகோலை திடீரென்று யாரோ பறித்ததால்  கவிஞர் பதறி எழுகிறார். அவரிடமிருந்து பறித்துக் கொண்ட அந்த எழுதுகோலால் , அவரின் மகன் புத்தம் புதிய புத்தகம் ஒன்றில் ஏதேதோ ஆர்வமாய் எழுதத் தொடங்குகிறான்.

    காற்றோடு காற்றுக் கலந்தது போலவும், கடலோடு கடல் கலந்தது போலவும், நீரோடு நீர் கலந்தது போலவும் கற்பனையில் இரண்டறக் கலந்து ஒன்றி , உணர்வின் உச்சத்தில் இருந்தமையால் கவிஞர் பிள்ளை பாசத்திற்கு இடங்கொடாமல் விரைந்து சென்று மகன் எழுதத் தொடங்கிய புத்தகத்தை வெடுக்கென்று பிடுங்கிவைத்துவிட்டு அவன் கையிலிருந்த எழுதுகோலையும் பறித்து வந்து பாதியில் நின்ற கவிதையைத் தொடர்ந்து எழுதுகிறார். தன்னிடமிருந்து எழுதுகோலையும் நூலையும் பறித்துத் தான் எழுதுவதைத் தடுத்து விட்டதால் , மனம் வருந்திய மகன் தேம்பி அழுகிறான். கவிஞர் கவிதைப் படைப்பதில் முழுமூச்சுடன் ஈடுபட்டதால் அவர் மகனின் அழுகுரலைப் பொருட்படுத்தவில்லை. எனவே, அவன் அழுகுரல் படிப்படியாகக் குறைந்து பின் நின்று போகிறது.

பொங்கி எழுந்த உணர்வு கவிதை எனும் முழு உரு கண்டதும் கவிஞர் எல்லை இல்லா இன்பம் எய்துகிறார்.உலகம் முழுவதும் தன் கைக்குள் ஒடுங்கிவிட்டது போன்ற ஆனந்தத்துடன் தான் படைத்த பாடலைப் படிக்கத் தொடங்குகிறார்.

   அச்சமயம், “ அத்தான் என்ற குரல் செவியில் விழுந்ததால் குரல் வந்த பக்கம் திரும்பிப் பார்க்கிறார். அங்கே  அவர் மனைவி, “ உங்கள் திருமகனுடைய உயர்ந்த கைவண்ணத்தைப் பாருங்களேன் என்று பற்களெல்லாம் தெரியுமாறு சிரித்துக் கூறவே கவிஞரும் அவள் காட்டிய திசையை நோக்குகிறார்.

   அங்கே, எந்தக் கலைஞனாலும் தீட்ட முடியாத ஓவியங்கள் அரிய காட்சிகளாக வீட்டுச் சுவரில் ஒளிவீசிக் கொண்டிருந்தன. மகனோ, ஓவியக் கலையில் அரிய தேர்ச்சி பெற்ற பெருங்கலைஞன் போன்ற தோற்றத்தில் கையில் அடுப்புக் கரியுடன் மகிழ்ச்சிப் பொங்க நிற்கிறான் என்று கவிஞர் தமக்கும் தம் மகனுக்கும் இடையே நடந்த நிகழ்ச்சியைக் கூறி முடிக்கிறார்.

  அன்றாட வாழ்வியலில், எல்லோர் வீட்டிலும் நடக்கும் சிறு நிகழ்ச்சியாக இருந்தாலும் சிந்திக்க வைக்கும் சில செய்திகளைக் கவிஞர் மறைமுகமாகச் சுட்டுகிறார்.குழந்தையின் கலையார்வத்தைப் பொருட்படுத்தாமல் தந்தை புறக்கணித்த போதும் விடா முயற்சியுடன் வேறு வழியில் தன் ஆர்வத்தைச் செயற்படுத்தித் தன் தந்தையின் புறக்கணிப்பையே அங்கீகாரமாக மாற்றிவிட்ட சிறுவனின் செயல் நமக்கு ஒரு படிப்பினையாக அமைகிறது. சின்னஞ்சிறு சிறு சிறுவனே தனக்கு ஏற்பட்ட புறக்கணிப்பால் சோர்ந்து முடங்கி விடாமல் விடாமுயற்சியுடன் அதனைச் செய்து முடித்து புறக்கணித்தவரின் பாராட்டையும் ஏற்பிசைவையும் பெற்றுவிட முடியும் என்றால், வளர்ந்த இளையோரும் பெரியோரும் இத்தகைய விடாமுயற்சியை மேற்கொண்டால் எத்தகைய வெற்றிகளைப் பெற முடியும்  என்று நம் சிந்தனைக் கதவைத் தட்டுகிறது இக்கவிதை. மேலும், சுடர்விளக்காயினும்  தூண்டுகோல் வேண்டும் என்பதற்கொப்ப வளரும் குழந்தைகளிடத்தில் வெளிப்படும் திறமைகளைச் செதுக்கும் சிற்பிகளாகப் பெற்றோர்கள் திகழ வேண்டும் ; அவ்வாறு இல்லாவிட்டால் பிரகாசிக்க வேண்டிய வைரங்கள் எவருக்கும் பயன்படாமல் போய்விடும் என்ற குழந்தை வளர்ப்பின் உன்னத முறையினையும் கவிஞர் விளக்குகிறார்.

   எனவே, மழலைச் செல்வங்களின் பேச்சும் செயலும் நம்மை இரசிக்கச் செய்யும் அதே வேளையில் வாழ்வியல் கருத்துகளை உணர்த்துவனவாகவும் அமைகின்றன என்பது வெள்ளிடைமலை.

No comments:

Post a Comment