Monday, November 26, 2012

சேர மன்னனுக்கும் பொன்னிக்கும் காதல் மலர்ந்த கதையையும் அது வெண்ணிப்பறந்தலையில் முடிந்ததையும் விளக்கி எழுதுக.



சேர  மன்னனுக்கும் பொன்னிக்கும் காதல் மலர்ந்த கதையையும் அது வெண்ணிப்பறந்தலையில் முடிந்ததையும் விளக்கி எழுதுக. 

    காவிய நாயகி நாடகம் இரா.பழனிசாமியின் கைவண்ணத்தில் மலர்ந்த ஒரு நூலாகும்.வெண்ணிக்குயத்தியாரின் புறநானூற்றுப் பாடலை ஆதாரமாகக் கொண்டு புனையப்பட்ட இந்நாடகம் காதலையும் வீரத்தையும் கருப்பொருளாகக் கொண்டுள்ளது.அவ்வகையில் பெருஞ்சேரலாதன், பொன்னி ஆகிய இருவரின் காதல் நாடக கதை ஓட்டத்திற்கு பெரும் துணை புரிந்துள்ளது. 

    பெருஞ்சேரலாதன் சேரநாட்டு மன்னனாவான்.தன் நாட்டின் சிற்றூர் மக்கள் அறுவடைத் திருநாளைக் கொண்டாடும் விதத்தினைக் காண விழைகிறான்.அதன் பொருட்டு அவனும் அமைச்சரும் மாறுவேடமிட்டுச் செல்கின்றனர்.அவ்வேளையில் சோழ நாட்டின் வெண்ணிப்பறந்தலை எனும் ஊரைச் சேர்ந்த மண்வினைஞர் மருதவாணர், சேரநாட்டில் வாழும் தன் தங்கையின் அழைப்புக்கிணங்க அறுவடைத்  திருநாளைக் கொண்டாட தன் தங்கையின் அழைப்புக்கிணங்க அறுவடைத் திருநாளைக் கொண்டாட தன் மகள் பொன்னியுடன் வருகிறார்.பொன்னி காட்டு வழியில் இயற்கை அழகை இரசித்த வண்ணம் தன் தந்தையுடன் உரையாடிக் கொண்டு வருகிறாள். அப்பொழுது குதிரையில் வந்த பெருஞ்சேரலாதனையும் அவன் அமைச்சரையும் கண்ட மருதவாணர் அவர்கள் கள்வர்கள் என்று அஞ்சுகிறார். மருதவாணரும் பொன்னியும் மரத்தின் பின்னால் மறைந்து கொள்கின்றனர். அதைக் காணும் பெருஞ்சேரலாதனும் அமைச்சரும் அவர்கள் இருவரையும் விசாரிக்கின்றனர்.

   மருதவாணரும் பொன்னியும் வரும் வழியில் பாண்டியநாட்டுப் பிரான்மலைக் கள்வர்கள் அவர்களின் வழிப்பயணத்திற்காக வைத்திருந்த பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாகக் கூறுகின்றனர்.அவ்வேளையில் பொன்னியின் அழகைக் கண்டு பெருஞ்சேரலாதனும் அவனைக் கண்டு பொன்னியும் மயங்குகின்றனர். பின்பு அமைச்சரும் மருதவாணரும் அருகில் இருப்பதை உணர்ந்து இருவரும் சமாளித்துக் கொள்கின்றனர். கள்வர்கள் என்ற சொல்லைப் பயன்படுத்தியமைக்காக எழுந்த விவாதத்தினைத் தொடர்ந்து பெருஞ்சேரலாதன் பொன்னியின் சுவடிகளைக் கொண்டு சென்று அவற்றை ஆராய்ந்து மறுநாள் தீர்ப்புரைப்பதாகக் கூறுகிறான். பொன்னியின் அத்தை வீட்டைத் தெரிந்து கொண்டு புறப்படுகிறான். 

    பின்பு, பெருஞ்சேரலாதன் தனது மாளிகையில் பொன்னியின் நெருப்பு என்ற கவிதைச் சுவடிகளை வாசித்து அவள் மனத்தில் இடம்பிடிக்க எண்ணி மீண்டும் மாறுவேடத்தில் செல்ல மெடிவெடுக்கிறான்.தன் எண்ணத்தை அமைச்சரிடம் கூறுகையில் அவரோ, மண்வினைஞர் குலத்தில் பிறந்த பொன்னி மன்னருக்குப் பொருத்தமில்லை என்று கருத்துரைக்கிறார். அன்பிற்கும் குலத்திற்கும் தொடர்பில்லை என்று கூறும் மன்னன் பொன்னியைச் சந்திக்கச் செல்கிறான். இருவரும் காதல் வயப்படுகின்றனர்.

  பொன்னியின் தந்தை மருதவாணர் தன் மகளைத் தேடிக்கொண்டு இருக்கையில் பெருஞ்சேரலாதன் மருதவாணரைச் சந்தித்து, பொன்னியும் தானும் ஒருவரையொருவர் விரும்புவதாகவும் அவரின் சம்மதத்தோடு பொன்னியை மணக்க விரும்புவதாகவும் கூறுகிறான். அதுவரையில் தங்கள் காதல் களங்கமற்றதாக இருப்பதற்கு உறுதியளிக்கிறான்.

     பின்பு, சோழநாடு திரும்பிய பொன்னிக்குப் பெருஞ்சேரலாதன் ஓர் ஆண்டிற்குள் பெண்கேட்டு வருவதாக ஒருவர் மூலம் சொல்லி அனுப்புகிறான். இதற்கிடையில், சோழமன்னன் கரிகாலன் மண்வெறி கொண்டு சேரநாட்டின்மீது போர்த் தொடுத்திருப்பதால் தன் தாய் நாட்டைக் காக்கும் போரில்ஈடுபட்டபின் பொன்னியைச் சந்திப்பதாகப் பெருஞ்சேரலாதன் ஓலை அனுப்புகிறான். தன் காதலனே என்றாலும் தன் நாட்டு மன்னனை மண்வெறி கொண்டவன் என்று கூறியதைப் பொன்னியால் சகித்துக் கொள்ள முடியாமல் கோபமடைகிறாள்.

வெண்ணிப்பறந்தலையில் சேரமன்னனின் படைகள் குவிந்திருப்பதைக் கேள்வியுறும் பொன்னி, தாய்நாட்டுப் பற்றின் காரணமாகச் சேரமன்னனை வசைப்பாடச் செல்கிறாள்.அங்குதான் வீரன் என்று காதலித்த தன் காதலன்தான் சேரமன்னன் என்ற உண்மையினை அறிந்து அதிர்ச்சியிஉல் உறைந்து போகிறாள்.காதலா, நாட்டுப்பற்றா என்ற கேள்வியில் இருதலை கொள்ளி எறும்புபோலத் திண்டாடுகிறாள். கொற்றவை கோயிலுக்குச் சென்று இருவரும் போரில் சமாதானமாகப்போய்விட வேண்டுமென வேண்டுகிறாள்.

   விதி வலியது என்தற்கொப்ப வெண்ணிப்பறந்தலைப் போரில் கரிகாலனின் வாள் பெருஞ்சேரலாதநின் மார்பில் பாய்ந்து முதுகுவரைச் சென்று புறப்புண்ணை ஏற்படுத்து விடவே, தன்மானம் காக்க பெருஞ்சேரலாதன் வடக்கிருந்து உயிர்விட முடிவெடுக்கிறான். செய்தியறிந்த பொன்னி அலறித்துடித்துப் போர்களத்திற்கு ஓடி வருகிறாள்; மருதவாணரும்அவளைப் பிந்தொடர்கிறார்.மருதவானர் முன்னிலையில் பொன்னியின் நெற்றியில் குங்குமத் திலகமிட்டு மனைவியாக ஏற்றுக் கொள்கிறான்; தன் மானங்காக்க வேண்டுமாய் அவளிடம் உறுதிமொழிப் பெற்று  உயிர் துறக்கிறான்.

   ஆகவே, இந்நாடகத்தில் பெருஞ்சேரலாதன் பொன்னியின் காதல் களங்கமற்றதாகவும் புனிதமாகவும் காட்டப்படுள்ளது. இவர்களின் காதல் காவிய நாயகி நாடகத்தை உயிர்ப்பித்த வேளையில் வாசகர்களின் மனத்தில் என்றும் மறையாமல் நிலைத்து நிற்கும் என்பது வெள்ளிடைமலை.

                                       மேனகா த/பெ மணியம்
SMK Taman MutiaraRini
Skudai, Johor Bahru

No comments:

Post a Comment