Thursday, November 22, 2012

‘ பானையின் ஒப்பாரி ‘ என்ற கவிதையின் மூலம் கவிஞர் உணர்த்தும் படிப்பினையைத் தொகுத்து எழுதுக.



பானையின் ஒப்பாரி என்ற கவிதையின் மூலம் கவிஞர் உணர்த்தும்  படிப்பினையைத் தொகுத்து எழுதுக.
  


ஆக்கம்:
குமாரி புஷ்பவள்ளி சத்திவேல்
SMK Taman Selesa Jaya,
Johor Bahru,Johor.
 



   பைந்தமிழ்க் கவிஞர் கா.பெருமாள் அவர்கள் தமிழ்ச்சுவை ததும்ப இயற்றியிருக்கும் கவிதையே பானையின் ஒப்பாரி“ . இக்கவிதை கவிதைப் பூங்கொத்துஎனும் கவிதைத் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது. உலக வாழ்க்கை நிலையற்றது என்ற  என்ற மையக் கருத்தினை ஒட்டியே இக்கவிதை எழில் கோலம் பூண்டுள்ளது.

 சிலந்தி வலையைப் போல் உலகமே மாயை என்னும் வலையில் சிக்கிக் கொண்டுள்ளதை அறியாத மனிதன் தாயின் மடியில் தொடங்கி மண்ணுக்குள் அடங்கும் வரை வாழ்க்கையில் பல்வேறு ஆசைகளால் உந்தப்பட்டு அல்லலுறுகிறான். மனிதனை இத்தகைய அறியாமைப் பிடியிலிருந்து காப்பாற்ற கவிஞருக்கு ஒரு சாதாரண பொங்கற்பானைக் கைகொடுத்துள்ளது. பொங்கற்பானையின் ஒப்பாரி மூலம் கவிஞர் நிலையாமை என்ற கருத்தினை நமக்கு உணர்த்த விழைகிறார்.

  அவ்வகையில், குயவன் என்னும் பிரம்மாவின் கைவண்ணத்தில் பானையாக உருவாகியதோடு தமிழர் திருநாளாம் பொங்கலன்று தான் பொங்கல் பானையாகப் பரிமாணம் பெற்றதாகப் பானை தன் கதையைத் தொடங்குகிறது .கன்னியர்கள் மண்பானையின் மீது செம்மண் கலவையால் சாயம் பூசியதோடு அழகிய ஓவியக் கோலங்கள் வரைந்து பின் உருளாமல் உறுதியாய் இருக்கும் பொருட்டுத் துணியால் வட்டமாகச் சுருட்டிச் செய்த சும்மாட்டின் மீது அதனைத் தூக்கி இருத்தி வைத்ததாகக் கூறுகிறது. அதன் பிறகு, பானைக்குப் பொட்டு இட்டதுடன் அதன் கழுத்துப் புறத்தில் பொன்னிறத்திலான அரளிப்பூவைச் சூடி அழகுப் படுத்தியதையும் அறிய முடிகிறது.பின், விரியாத மொட்டுப் போன்ற முனைமுறியாத பச்சரிசியையும் அதற்குள் போட்டதாகச் சொல்கிறது.

பொங்கல் சமைக்கும் நோக்கத்துடன் மங்கையர் அரைவட்ட வடிவிலான கருப்பட்டியையும், பசுவின் மணமிக்க பாலையும் தன்னுள்ளே இட்டதாகக் கூறுகிறது. இந்த மண்ணில் உள்ளவர்கள் வாழ்வில் வளமும் நலமும் பொங்கிப் பெருக வேண்டுமென்ற உன்னத நோக்கத்துடன், ‘பொங்கலோ பொங்கல்என்ற மங்கள முழக்கத்தைக் கன்னியர்கள் பாடியதாகவும் மகிழ்வுடன் கூறுகிறது.இந்தச் சிறப்பூட்டும் செயல்களால் தான் மிகவும் பெருமை கொண்டு இருந்த வேளையில் , பொங்கற் சோற்றைக் கிண்டுகிற அகப்பைக் காம்பின் அடிப்பகுதி சற்று ஆழமாகப் பதிந்ததனால் அதற்குள் ஒரு சிறு பொத்தல் ஏற்பட்டு விட்டதை வருத்தம் இழையோட  கூறுகிறது.

   ஓட்டில் காயம்பட்டுச் சில்லுப் பெயர்ந்து விட்ட பானையெல்லாம் இனிப் பயன்படுத்துவதற்கு ஏற்புடையதாகாது என்றும் , இனியும் பயன்படுமா என்று ஆராய்ந்து நேரத்தைச் செலவு செய்யும் அளவுக்கு இது மதிப்புள்ள பொருள் இல்லையாதலால் குப்பையிலே தூக்கி போட்டுவிட வேண்டியதுதான் என்று மனிதர் முடிவெடுத்ததைப் பானை சோகத்துடன் கூறுகிறது. இப்படிப் புறக்கணிக்கும் அளவுக்குத் தான் அப்படி என்ன குற்றம் செய்து விட்டதாகப் பானை நம்மிடம் வினா எழுப்புகிறது.சிறு காயம் பட்டவனுக்கு மருத்துவம் செய்து பழைய நிலையாக்காமல் அவனைக் கொன்று புதைத்துவிடுவது போல , தன்னிடம் ஏற்பட்ட சிறிய பொத்தலை அடைத்து மீண்டும் பயன்படுத்த நினைக்காமல் அப்படியே தூக்கிப் போடுவது கொடுமையிலும் பெருங்கொடுமையான செயலன்றோ என்று பானை தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது. 

    மண்ணால் ஆகியிருந்தாலும் பொங்கற்பானை என்ற முறையில் மங்களப் பொருளாக வீட்டில் மதிப்புடன் இருந்து, உண்ணுவதற்கு மட்டுமின்றிச் சமைப்பதற்கும் பயன்படும் பாத்திரமாக உதவி வந்த மண்பானை வடிவிலான மண்ணுக்கு அது பாடம் சொல்கிறது. தன் இனத்தைச் சார்ந்த மற்றொரு மனிதனையே , அவன் உடற்கட்டுத் தளர்ந்து முதுமை அடைந்து பொருளாலும் ஏழையாகி விட்டால், ஒதுக்கிவிட்டு வெகுதூரம் விலகிவிடுகிற இழிகுணம் உடையவன் மனிதன் என்று வசைப்பாடுகிறது.அத்தகைய மனிதனை நம்பியதால் , முன்பு மண்ணிலிருந்து உருவான மண்பானையாகிய தான் மீண்டும் வெறுமண் என்ற பழைய கீழ்நிலையை அடைந்து விட்டதாக ஆழ்ந்த வருத்தத்துடன் கூறுகிறது. நன்றி கெட்ட மனிதனால்  வீணாகிப் போன தனது வாழ்வுக்குப் புது வசந்தம் வீச வழியில்லையே என்று துக்கத்துடன் பானை தனது ஒப்பாரியை முடிக்கிறது.

    ஆகவே, இன்று இருப்பது நாளை இல்லை என்று கவிஞர் உணர்த்தியிருக்கும் உலக நியதியை நாமும் உணர்ந்து கொண்டோமேயானால் ஆசை எனும் அரக்கனின் கோரப் பிடியிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொண்டு பெரு வாழ்வு வாழலாம். மேலும், மனிதனிடத்தில் செய்நன்றி மறவாப் பண்பு வளர்ந்தால் மட்டுமே மனித நேயமும் வளரும் என்பது வெள்ளிடைமலை.

No comments:

Post a Comment