Sunday, November 18, 2012

கரிகாலன் - பெருஞ்சேரலாதன் ஆகிய இருவரையும் ஒப்பிடுக.



கரிகாலன் - பெருஞ்சேரலாதன் ஆகிய இருவரையும் ஒப்பிடுக.


ஆக்கம்:
குமாரி புஷ்பவள்ளி சத்திவேல்
SMK Taman Selesa Jaya,
Johor Bahru,Johor.



கலைமாமணி இரா.பழனிசாமி கைவண்ணத்தில் உருவான காவிய நாயகி நாடகம் புறநானூற்றுப் புலவர் வெண்ணிக் குயத்தியாரின் பாடலை அடிப்படையாகக் கொண்டது. கணவனின் மானங்காக்கப் போராடிய பொன்னி எனும் பெண்ணை மையமிட்டு இந்நாடகம் சுழல்கிறது.இதில் முக்கிய இரு துணைக்கதாபாத்திரங்களாகச் சோழ மன்னன் கரிகாலனும் சேர மன்னன் பெருஞ்சேரலாதனும் படைக்கப்பட்டுள்ளனர்.உயிரோட்டமான இவர்களின் பாத்திரப்படைப்பு நாடகத்திற்கு வலு சேர்த்துள்ளது. இவ்விருவரிடையே பல ஒற்றுமை வேற்றுமைகளைக் காண இயலுகிறது.

    கரிகாலனுக்கும் பெருஞ்சேரலாதனுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.முதலாவதாக, கரிகாலனும் பெருஞ்சேரலாதனும் மன்னர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.கரிகாலன் சோழ நாட்டு மன்னன்;அகிலம் போற்றும் ஆதித்த குலத்தில் உதித்த பேரரசன்; இமயம் முதல் குமரி வரை பல நாடுகளைத் தன் ஆட்சியின் கீழ் வைத்திருந்தான்.சேரன் பெருஞ்சேரலாதனோ இமயவரம்பன் வழி வந்த தலைவன்.வீரத்திற்கு அணியாய் விற்கொடியைப் பெற்றவன்.மலைவளம், கனிவளம்,நதிவளம், நிதிவளம் ஆகியவற்றை உள்ளடக்கிய சேரநாட்டு மாமன்னன்.

   கரிகாலனுன் பெருஞ்சேரலாதனும் சிறந்த வீரர்கள். கரிகாலன் போரி பல நாடுகளைத் தோற்கடித்துத் தனது ஆட்சியை விரிவுபடுத்தினான்.அருவா நாடு,வச்சிர நாடு,என் பல அரசாட்சிகளைத் தனது வீர சாம்ராஜ்யத்தால் வெற்றி கொண்டான்.மேலும்,வெண்ணிப் பறந்தலைப் போரில் வீரர்களோடு வீரனாகத் தானும் போர்க்களத்தில் இறங்கிப் போரிட்டான்.போருக்குப் படைகளை அனுப்பி விட்டு பின்னால் நின்று வேடிக்கைப் பார்க்கும் பண்பு அவனுக்கில்லை.பெருஞ்சேரலாதனும் வீரத்திற்குப் பெயர் பெற்றவன்.தன் நாட்டின் மீது போர்த் தொடுத்த கரிகாலனின் மேல் பதில் தாக்குதல் நடத்துகிறான்.அவனுடன் கூட்டுச் சேர்ந்த பாண்டிய மன்னன் பின்வாங்க, சேரன் மட்டும் வீரத்தோடு இறுதிவரை போரிட்டான்.விதிவசத்தால் கரிகாலனின் வாள் சேரனின் நெஞ்சில் பாய்ந்து முதுகைத் துளைத்து புறப்புண்ணை ஏற்படுத்தியதால் வடக்கிருந்து இறக்கிறான்.

    அதுமட்டுமல்லாது,தமிழ்ப்பற்று சோழனிடமும் சேரனிடமும் மிகுந்து காணப்படுகிறது.கரிகாலன் அவைக்கு வந்த பொன்னிக்கு உரிய மரியாதை கொடுத்து கவிதைப் பாட அனுமதிக்கிறான்.சோழனைவிட சேரன் நல்லவன் எனப் பொருள்பட பொன்னி பாடிய கவிதையை அவையோர் குறை சொன்னாலும், ‘இது சிந்தனைக்கு வேலை தரும் செந்தமிழ் கவிதைதான்என்று பாராட்டுகிறான்,அரசி வேண்மாள் எழுதிய கவிதையையும் கரிகாலன் படித்துச் சுவைக்கிறான்.சேரன் பெருஞ்சேரலாதனும் தமிழ்மொழி மீது ஆழ்ந்த பற்று கொண்டவன்.தன் அமைச்சரோடு மாறுவேடத்தில் சிற்றூர் போகையில் செந்தமிழில் வடச்சொற்கள் கலந்த வரலாற்றைப் பற்றி பேசுகிறான்.உயிர் காக்கும் மொழியாகத் தமிழை வளர்க்க வேண்டும் என்ற கருத்தினையும் சேரன் வெளிப்படுத்துகிறான்.

மாறுவேடம் தரிப்பது இரு  மன்னர்களுக்குமிடையே காணப்படும் மற்றுமொரு ஒற்றுமையாகும். கரிகாலன் துறவி வேடமேற்றுப் பொன்னியின் உண்மை நிலையையும் அவளது பின்னணியையும் அறிந்து கொள்ள அவள் தங்கியிருக்கும் விருந்தினர் விடுதிக்குச் செல்கிறான்.அவ்வேடத்தில் பல சதிச்செயல்களை முறியடிக்கிறான்.பெருஞ்சேரலாதனும் மாறுவேடம் தரித்து சிற்றூர் மக்கள் கொண்டாடும் அறுவடைத் திருநாளைக் காணவும், பொன்னியைச் சந்திக்கவும் செல்கிறான்.

அரசர்கள் இருவருமே பெண்மையைப் போற்றி மதிக்கின்றனர். பொன்னி விதவைக் கோலத்தில் தன் அவைக்கு வந்தாலும் கரிகாலன் பொன்னியை மதித்துத் தக்க மரியாதை கொடுக்கிறான்.மனைவி வேண்மாள் கூறும் ஆலோசனைக்கு மதிப்பளிக்கிறான் கரிகாலன்.மேலும்,பொன்னியின் உண்மைக் காதலை உணர்ந்து அவளைப் பெருஞ்சேரலாதனின் மனைவி எனவும் சேர நாட்டின் பேரரசி எனவும் அங்கீகரிக்கிறான்.அதே வேளையில் பெருஞ்சேரலாதோ இடம்,குலம்,தகுதி என வேறுபாடு பார்க்காமல் குணத்தை மடுமே கருத்தில் கொண்டு சோழ நாட்டுக் குயவர் குலப் பெண்ணான பொன்னியைக் காதலித்து மனைவியாக ஏற்க முனைகிறான்.

இப்படியாக இவர்களுள் பல ஒற்றுமைகள் இருந்தாலும் சில வேற்றுமைகளும் இருக்கத்தான் செய்கின்றன.முதலாவதாக, கரிகாலன் மண்ணாசை கொண்டு இமயம் முதல் குமரிவரை தனது ஆட்சியைப் பரவ விடுகிறான்.பெருஞ்சேரலாதனோ மண்ணாசை அற்றவனாகப் படைக்கப்பட்டுள்ளான்.மண்வெறி கொண்டு எந்த அரசாட்சியையும் கைப்பற்றும் எண்ணம் இல்லாதவன்.தன் நாட்டின் மீது படையெடுத்த கரிகாலனின் மீது பதில் நடவடிக்கையாகவும் தன் நாட்டைத் த்ற்காக்கவுமே வெண்ணிப்பறந்தலைப் போரில் ஈடுபடுகிறான்.

    இதனைத் தவிர்த்து, போர் மரபு என்ற ரீதியில் கரிகாலனுக்கும் சேரனுக்கும் வேற்றுமை நிலவுகிறது.கரிகாலன் பெருஞ்சேரலாதனோடு போர் செய்யும் பொழுது போர் மரபை மீறுகிறான்.அவனது வாள் பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்து முதுகைத் துளைத்து புறப்புண்ணை ஏற்படுத்துகிறது.பெருஞ்சேரலாதன் போர் மரபைச் சற்றும் மீறாமல், புறமுதுகில் ஏற்பட்ட காயத்தினால் தன்மானம் காக்க வடக்கிருந்து இறக்கிறான்.

   இறுதியாக, காவிய நாயகி வளர்ச்சிக்குக் கரிகாலன், பெருஞ்சேரலாதன் ஆகிய இருவரும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.சேர ,சோழ மன்னர்கள் தங்களுடைய பலத்தை ஒருங்கிணைத்து ஒற்றுமையுடன் செயல்பட்டிருந்தால் உலகம் போற்றும் வீரர்களாகத் திகழ்ந்திருப்பர் என்பது வெள்ளிடைமலை.

1 comment:

  1. கரிகாலனின் அம்பு மார்பு துளைத்து வெளி வந்தது, போர் மரபுப்பிழையாகத் தோன்ற வில்லை.

    ReplyDelete