Friday, November 16, 2012

சத்தியமூர்த்தி - குமரப்பன் ஆகியோரின் நட்பு



சத்தியமூர்த்தி - குமரப்பன் ஆகியோரின் நட்பைச் சிறப்பை ஏற்ற எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி எழுதுக.


ஆக்கம்:
குமாரி புஷ்பவள்ளி சத்திவேல்
SMK Taman Selesa Jaya,
Johor Bahru,Johor.



நாவலாசிரியர் நா.பார்த்தசாரதியின் கைவண்ணத்தில் உருவானது பொன் விலங்கு நாவலாகும்.இச்சமூக நாவல் சத்தியமூர்த்தி என்ற தனிமனித வாழ்க்கைப் போராட்டங்களை மையமிட்டு எழுதப்பட்டுள்ளது.இந்நாவலில் சத்தியமூர்த்தி, குமரப்பன் ஆகியோர் நட்புக்கோர் இலக்கணமாகப் படைக்கப்பட்டுள்ளனர்.

    சத்தியமூர்த்தி, குமரப்பன் ஆகிய இருவரும் ஏற்றத்தாழ்வு இன்றி பழகும் இனிய நட்பைக் கொண்டிருக்கின்றனர்.கேலிச்சித்திரம் வரையும் குமரப்பனும் முதுகலைப் பட்டதாரியான சத்தியமூர்த்தியும் உயர்வு தாழ்வு பாராமல் நெருங்கிப் பழகுகின்றனர். பணம் ,அந்தஸ்து உயரும் போது நட்பில் இடைவெளி உண்டாக்கிக் கொள்ளும் பலரைப் போல் இல்லாமல் உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் போற்றத்தக்கவர்கள்.

   மேலும், சத்தியமூர்த்திக்கும் குமரப்பனுக்குமிடையே அன்பு எனும் ஆலமரம் வேரூன்றி நிற்கிறது. நகமும் சதையும் போல பழகும் இவர்கள் ஒருவர்பால் ஒருவர் அக்கறைச் செலுத்தி அன்பைப் பரிமாறிக்கொள்கின்றனர். உதாரணமாக மல்லிகைப் பந்தலுக்கு விரிவுரையாளராகச் செல்லவிருக்கும் சத்தியமூர்த்திக்குப் பிரியாவிடை விருந்து ஏற்பாடு செய்து குமரப்பன் தன் அன்பை வெளிப்படுத்துகிறான்.சத்தியமூர்த்தியோ குத்துவிளக்கு பத்திரிக்கையில் வேலையை இராஜினாமா செய்து விட்டுத் தன்னை நாடி மல்லிகைப் பந்தலுக்கு வரும் குமரப்பன் தன்னுடம் தங்க இணங்குகிறான்.

இதனைத் தவிர்த்து, புரிந்துணர்வு கொண்டவர்களாகவும் இருவரும் திகழ்கின்றனர்.நாவல் முழுவதும் ஒருவரை மற்றவர் புரிந்து கொண்டு நட்பு பாராட்டுவது சிறப்பு அம்சமாக அமைகிறது.மல்லிகைப் பந்தலில் வேலை செய்தால் செலவினம் கூடும் என்று குமரப்பன் ஆலோசனை கூறினாலும் தன் நண்பனின் மனம் மல்லிகைப் பந்தல் ஊரை மிகவும் விரும்புவதையும் தன் இலட்சியக் கனவை நனவாக்கத் துடிக்கிறதென்பதையும் புரிந்து கொண்டு சத்தியமூர்த்தியின் முடிவுக்கே விட்டு விடுகிறான்.

    இதுமட்டுமல்லாது, இடுக்கண் களைவதாம் நட்பு என்ற உன்னத பண்பை இவ்விருவரும் கொண்டிருக்கின்றனர்.கைம்மாறும் தன்னலமும் கருதாமல் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளும் பாங்கு நட்பின் உச்சம் எனலாம்.இருந்த வேலையை விட்டுவிட்டு தன்னை நாடி வந்த குமரப்பனுக்கு ஆதரவு அளித்து அவனைத் தன்னோடு தங்க சம்மதிப்பதோடு மட்டுமல்லாது அவனிடம் வாடகைப் பணத்தையும் வாங்க மறுக்கிறான் சத்தியமூர்த்தி. ஆனால், குரப்பனோ மயிர் ஊடா நட்பில் பொருள் ஊடாகக் கெடும்என்று சொல்லி  வாடகைக்கான தனது பங்கைக் கொடுக்கிறான். வெளிநாடு செல்லும் சத்தியமூர்த்திக்குப் பணவுதவி செய்வதோடு கண்ணாயிரத்திடம் பட்ட கடனையும் அடைக்க உதவுகிறான் குமரப்பன். அத்துடன்,சத்தியமூர்த்தி மோகினி கார்விபத்தில் சிக்கிய செய்தி கேட்டு மனமுடைந்த போது பக்கபலமாக இருந்து அவனைத் தேற்றியது நட்புக்கு இன்னோர் இலக்கணம்.

   சத்தியமூர்த்தியும் குமரப்பனும் ஒளிவு மறைவில்லாமல் பழகுகின்றனர்.தனக்கும் நடன மங்கை மோகினிக்கும் இடையிலான உறவைக் குமரப்பனிடம் கூறுகிறான் சத்தியமூர்த்தி.மேலும், சத்தியமூர்த்திக்கு மோகினி எழுதிய கடிதங்களை அனுமதியின்றி குமரப்பன் படித்து விட்டு நண்பனிடம் மன்னிப்புக் கேட்கும் பொழுது, தன் அந்தரங்கத்தைத் தெரிந்து கொள்ள உயிர் நண்பனுக்கு உரிமையுண்டு என்று சத்தியமூர்த்தி கூறுவது இதற்கு நற்சான்று.

அத்துடன், இவ்விருவரும் ஒரே கொள்கை கொண்டவராகவும் பவனி வருகின்றனர்.கண்ணாயிரம் போன்ற வஞ்சகமும் அற்பத்தனமும் கொண்டவர்களுடன் நட்புப் பாராட்ட இருவரும் விரும்பவில்லை.மஞ்சள்பட்டி ஜமீந்தாரும் கண்ணாயிரமும் செய்யும் அட்டூழியங்களுக்கு அடிபணிந்து போகாமல் துணிந்து எதிர்கின்றனர்.கல்லூரி கூரைக்குத் தீ வைத்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட சத்தியமூர்த்திக்கு ஆதரவாக மாணவர்களுடன் களமிறங்குகிறான் குமரப்பன்.இருவரின் கொள்கை உறுதியே இறுதியில் தர்மம் வெல்லத் துணை புரிந்தது எனலாம்.

ஆகவே, நட்பைக் கூட கற்பைப் போல எண்ணி அதன் புனிதம் காத்த சத்தியமூர்த்தி, குமரப்பன் ஆகியோர் நமக்கு வழிகாட்டியாவர்.நல்ல நட்பு நம்மை வாழ்க்கையில் உயர்த்தும் என்ற உன்னத கருத்தினை நாவலாசிரியர் இவர்கள் மூலம் நமக்குப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

1 comment: