Thursday, November 22, 2012

“ விடிவெள்ளிக் கவிஞன் நீ ” எனும் கவிதையை நீ எவ்வாறு உணர்கிறாய் என்று விளக்கி எழுதுக.



விடிவெள்ளிக் கவிஞன் நீ எனும் கவிதையை நீ எவ்வாறு உணர்கிறாய் என்று விளக்கி எழுதுக.


ஆக்கம்:
குமாரி புஷ்பவள்ளி சத்திவேல்
SMK Taman Selesa Jaya,
Johor Bahru,Johor.



   தமிழுக்கும் அமுதென்று பேர்என்று பாடி தமிழின் இனிமையை உலகறியச் செய்த புரட்சிக்கவி பாரதிதாசனின் மீது அளவிலா பற்று கொண்ட கவிஞர் ப.மு.அன்வர் அவர்களின் பேனா முனை செதுக்கிய விடிவெள்ளி கவிஞன் நீஎனும் கவிதையானது கவிதைப் பூங்கொத்து எனும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ளது. பாரதிதாசனைப் போல் விடிவெள்ளிக் கவிஞனைப் பெற்றும் தமிழினம் விடியலைப் பெற்றுக் கொள்ளவில்லை என்ற மையக் கருவைக் கொண்டு இக்கவிதை எழுந்துள்ளது.

    பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைகளில் ஆழ்ந்து தோய்ந்து ஈடுபாடு கொண்ட கவிஞர் அவர் சிறப்புகளை இக்கவிதையில் கூற விழைகிறார். கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்தக் குடி என்றும் உயர் பண்பாடும் நாகரீகம் கொண்ட இனம் என்ற போற்றிக் கொண்டாடப்பட்ட தமிழினம் பின் பல்வேறு காரணங்களால் தாழ்ந்து போய்விட்ட தமிழினத்துக்கு விடிவெள்ளி போல வாய்த்த கவிஞனாகிய பாரதிதாசனை தமிழகத்தின் இருண்ட நிலைமைகளுக்கு விடிவு பிறக்க வேண்டும் என்பதற்காக கவிதைகளை இடியாக முழங்கிய முகிலாகவும் உருவகப்படுத்துகிறார். மாற்றாருக்கு ஏவல் செய்யும் அடிமை நிலைக்கு ஆளாகிவிட்ட தமிழர்களின் நெஞ்சில் , பிறர் மேலாண்மையை எதிர்த்துப் போராடும் எழுச்சியைத் தன் கவிதை என்னும் ஊது குழலால் எழுப்பி வைத்தார். தாய்ப்பாலுடன் கலந்து வாய்த்த தமிழ் என்னும் பாலைப் பருகிக் கொண்டே இருப்பதே வாழுங்காலத்தில் பெறக்கூடிய பயன் என்று தெளிந்து கண்ட உண்மையில் தளராத உறுதி கொண்டவராக இருந்ததைக் குறிப்பிடுவதன் மூலம் பாவேந்தரின் தமிழ்ப் பற்றை பறைசாற்றுகிறார் கவிஞர். தமிழ்கூறு நல்லுலகில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த மகாகவி பாரதி என்ற பெரும் புலவனுக்குப் பிறகு தமிழருக்கு வாய்த்தவர்களில் கவிஞன் என்னும் முழுமையான தகைமைக்கு உரியவர் பாவேந்தர் பாரதிதாசன் ஒருவரே என்று கவிஞர் ஆணித்தரமாகக் கூறுகிறார்.

   புரட்சிக்கவி பாரதிதாசன் தமிழுக்கு மட்டுமின்றி தமிழர் வாழ்விலும் பெரும் அக்கறைக் கொண்டவர் என்று கவிஞர் தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறார். தமிழர்தம் வாழ்வு வளம் பெற வேண்டும் என தம் மனதில் எத்தனை எத்தனை ஆசைகளையோ வைத்திருந்தார்; கனவுகளை வளர்த்திருந்தார். செத்துவிட்டவனைப் போலச் செயலற்று ஆக்கமின்றிக் கிடக்கிற தமிழர்கள் மீண்டும் ஊக்கத்துடன் எழுச்சி பெற்று வெற்றிக் கொடி நாட்டுவார்கள் என்ற ஆர்வத்துடிப்பின் விளைவாக, கத்திமுனை போன்ற உணர்ச்சியூட்டும் கவிதைகளை எழுதி குவித்தார். தான் வாழ்ந்த காலமெல்லாம் தமிழர் விழிப்புணர்வு பெற வேண்டும் என்ற இடைவிடாத எண்ணத்திலேயே திளைத்து அதையே கவிதைகளாய்ப் பாடினார். தன் கவிதைகளில் எல்லாம் தமிழருக்கு வீறுணர்வூட்டுவதற்காகத் தீயின் கொழுந்து போன்ற எழுச்சிமிக்க சொற்களையே கொட்டி வைத்த உன்னத மனிதர் பாவேந்தர் பாரதிதாசன் என்று கவிஞர் புகழாரம் சூட்டுகிறார்.

    தமிழன்னையின் தவப்புதல்வர் பாரதிதாசன் மட்டுமே தமிழ்மொழியையும் தமிழ்நாட்டையும் தமிழர் வாழ்வையும் தமிழருக்கு இருக்க வேண்டிய தன்மான உணர்வையும் தன்முனைப்பு எழுச்சியையும் பற்றி விண்ணைத் தொடும் இமயத்தின் அளவாய் உயர்த்தியும் மிகுதியாகவும் பாடினார். அவரைத் தவிர அவ்வாறு பாடக்கூடிய வேறு யாரும் இதுவரை பிறந்ததில்லை என்று கவிஞர் துணிந்து கூறுகிறார்.   இதுமட்டுமல்லாமல் பாட்டாளிகளின் தோழனாகவும்  புரட்சிக்கவி திகழ்ந்தார் என்று அறிய முடிகிறது. மாற்றாருக்காகப் பயனற்ற சுமைகளைத் தாங்கி நொந்த உழைப்பாளிகளின் துன்பங்களைத் தெளிவாக வெளிப்படுத்திச் சுட்டிகாட்டியவை அவரின் நெருப்புப் போன்ற கடுமையான கவிதைகளே ஆகும். அத்துடன், தமிழர் சமுதாயத்துக்கு ஒரு பழியாக அமைந்துவிட்ட சாதிக் கொடுமையை எதிர்த்துப் போராடும் படைக்கலன்களாகவே பாவேந்தரின் கவிதைகள் அமைந்தன என்பது வெள்ளிடைமலை.

    ஆயிரமாயிரம் புலவர்களுக்கெல்லாம் பெரும்புலவன் பாரதிதாசனே என்று கவிஞர் உறுதிபடக் கூறுகிறார். இதற்குக் காரணம், அவர் நெறி தவறாத நிலையில் , கேடுகள் ஒழிந்து நலன்கள் தோன்றும் ஆக்கமான புதியகாலத்தை விரைந்து தோற்றுவிக்கும் மின்னல்வேகப் புரட்சியாளனாகத் திகழ்ந்ததே ஆகும். மின்னொளி வீசும் அடர்த்திமிக்க வைரங்களைப் போன்ற அரிய கவிதைகளைப் புதுமையாகச் செதுக்கி, அவற்றுக்குப் புதியவடிவங்களை வழங்கிய திறன்மிக்க சிற்பியாகவும் பாவேந்தர் விளங்கியுள்ளார். நிலவு  முதலிய இயற்கையின் எழில் கோலங்கள் பற்றியும், நினைவில் எழக்கூடிய கருத்துகளையும் உணர்வுகளையும் பற்றி பாவேந்தர் சொல்விருந்தாகப் படைத்தளித்துள்ள கவிதைகளின் வழி, தமிழரின் நெஞ்சில் நிலையாக என்றும் வாழ்ந்து குன்றின் மேலிட்ட விளக்காய்ப் பிரகாசிக்கிறார். பாவேந்தர் போன்று இனத்துக்கும் மொழிக்கும் தொண்டு செய்த நல்லோர்களின் கொள்கைகளையும் பணிகளையும் உறுதியுடன் தொடர்ந்து பேணாமல் , வெறுமனே பெயருக்காக அவர்களுக்குச் சிலைகளை மட்டுமே எழுப்பிவிட்டுத் தன்னலம் பேணித் திரியும் கூட்டத்தினர் மறந்த போதும் தன் கவிதைகளில் சிரித்துக் கொண்டிருக்கும் தமிழின் மூலம் பாவேந்தர் என்றும் வாழ்வார் என்று கவிஞர் கூறி முடிக்கிறார்.

   ஆகவே, பாவேந்தரின் சிறப்பினை அறியும் அதே வேளையில் எத்தகைய ஆன்றோர், சான்றோர் , அறிஞர் பெருமக்களின் அறிவூட்டமும் வழிகாட்டலும் வாய்த்தாலும் அவற்றை மதித்துப் பேணிப் பயன் கொள்ளும் விருப்பமோ முயற்சியோ இல்லாத ஒரு சமுதாயத்துக்கு அவற்றால் நலன் கிடைக்காது என்ற பேருண்மை இக்கவிதையின் மூலம் நாம் உய்த்துணர முடிகிறது.

No comments:

Post a Comment