Friday, November 16, 2012

பொன் விலங்கு - படிப்பினைகள்/ சமுதாயச் சிந்தனைகள்



பொன் விலங்கு நாவல் மூலம் நாம் பெறும் படிப்பினைகளை/ சமுதாயச் சிந்தனைகளை விளக்கி எழுதுக

ஆக்கம்:
குமாரி புஷ்பவள்ளி சத்திவேல்
SMK Taman Selesa Jaya,
Johor Bahru,Johor.
 

சாகித்திய அகாடமி விருதைப் பெற்ற நா.பார்த்தசாரதியின் மற்றொரு அருமை படைப்பே பொன் விலங்கு நாவலாகும்.உயர்ந்த இலட்சியங்களும் சிறந்த கொள்கைகளும் கொண்ட சத்தியமூர்த்தி எனும் இளைஞன் தன் தனிமனித வாழ்விலும் பொது வாழ்விலும் எதிர்நோக்கும் சிக்கல்களை இந்நாவல் முன்வைக்கிறது.வெறும் பொழுது போக்கு நாவலாக அல்லாமல் அரிய பல படிப்பினைகளைக் கொண்ட சமூக நாவலாகப் பொன் விலங்கு திகழ்கிறது.

வாய்மையே வெல்லும் எனும் சிந்தனையை இந்நாவல் நமக்கு வெளிப்படுத்துகிறது.மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரியின் நிர்வாகம் பூபதியின் மறிவிற்குப் பின்னர் மஞ்சள்பட்டி ஜமீன்தார் கைக்கு மாறுகிறது.அவருடன் கூட்டுச் சேர்ந்த கண்ணாயிரம் சத்தியமூர்த்தியைப் பழிவாங்கும் பொருட்டு பல தீங்குகளையும் அநீதிகளையும் விளைவிக்கின்றனர்.உச்சக்கட்டமாக, கல்லூரி கூரைக்குத் தீ வைத்து விட்டான் என் பொய்க் குற்றம் சுமத்தி சத்தியமூர்த்தியைச் சிறையில் தள்ள முயலுகின்றனர்.சத்தியமூர்த்தியோ அவர்களது சூழ்ச்சிக்கு அடிபணியாமல் இறுதிவரை தனது நியாயத்திற்காகவும் உரிமைக்காகவும் போராடுகிறான். கல்லூரி மாணவர்கள், குமரப்பன் போன்ற நல்லுள்ளங்களின் பக்கத் துணையுடன் இறுதியில் வெற்றிப் பெறுகிறான். அதர்மம் அவ்வப்பொழுது வெற்றிக் களிப்பில் கொட்டம் அடித்தாலும் இறுதியில் தர்மமே வெல்லும் என்ற உன்னத கருத்து நமக்கு இந்நாவலில் விருந்தாகிறது.இராட்சத அலைகள் எழும்பும் வாழ்க்கைச் சமுத்திரத்தில் வாய்மை எனும் துடுப்பை இறுதிவரை உறுதியாகப் பற்றி கப்பலைச் செலுத்திய சத்தியமூர்த்தியின் நம்பிக்கை நமக்கு நல்லதொரு வழிகாட்டியாகும். 

  அதோடு , நல்ல நட்பு வாழ்வை உயர்த்தவல்லது என்ற சிறந்த கருத்தினை நாவலாசிரியர் இந்நாவலில் பதியமிட்டுள்ளார்.சத்தியமூர்த்தி தனது வாழ்வில் எதிர்நோக்கிய சிக்கல்களைத் துணிவுடன் சமாளிக்க அவனுக்குத் தோள் கொடுத்தது உற்ற நண்பனான குமரப்பனே.இராமாயணத்தில் இராமன் - குகன் , மகாபாரதத்தில் கர்ணன் - துரியோதனன் நட்பு போன்று சிறந்த நட்பிலக்கணத்தைக் கொண்டவர்களாகத் திகழ்கின்றனர் சத்தியமூர்த்தியும் குமரப்பனும்.படிப்பறிவிலும் தொழிலும் இருவரும் வெவ்வேறு நிலையினைக் கொண்டிருந்தாலும் நகமும் சதிதையும் போல இணைப்பிரியாமல் வாழ்கின்றனர்.சத்தியமூர்த்திக்கு மோகினி எழுதிய கடிதங்களை அனுமதியின்றி படித்ததற்கு மன்னிப்புக் கேட்கும் குமரப்பனிடம் தன் அந்தரங்கத்தைத் தெரிந்து கொள்ள உயிர் நண்பனுக்கு உரிமையுண்டு என சத்தியமூர்த்தி கூறுகிறான். இடுக்கண் களைவதாம் நட்புஎன்பதற்கொப்ப வெளிநாடு செல்லும் சத்தியமூர்த்திக்குப் பணவுதவி செய்வதோடு கண்ணாயிரத்திடம் பட்ட கடனையும் அடைக்க உதவுகிறான்.இவர்களைப் போன்று நாமும் ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும்.

ஒருவனுக்கு ஒருத்தி எனும் தமிழரின் சிறந்த வாழ்வியல் நெறியை இந்நாவல் வலியுறுத்துகிறது.இரயிலில் தற்கொலைக்கு முயன்ற நடனமங்கை மோகினியைச் சத்தியமூர்த்தி காப்பாற்றியப்பின் ஏற்பட்ட உறவு இருவரையும் ஆழமான அன்பில் பிணைக்கிறது.மோகினியை மனைவியாக மனதில் வரித்தபின் அவன் அன்புக்காகவும் ஆதரவுக்காகவும் ஏங்கும் பாரதிய்டமிருந்து விலகி கவனமாகப் பழகுகிறான். அதுபோல சத்தியமூர்த்தியைத் தன் மானசீக கணவனாக என்ணி வாழும் மோகினி, மஞ்சள்பட்டி ஜமீன்தாரின் அத்துமீறலாலும் சத்தியமூர்த்தி தன்னை விட்டு வெளிநாடு பயணமாவதாலும் தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள்.தூய்மையான காதல் நிலைப்பெற வேண்டும் என்ற உன்னத படிப்பினையையும் நாவலாசிரியர் நமக்கு வழங்கியுள்ளார்.

    இதுமட்டுமல்லாது, மாணவர் சமுதாயத்தினருக்கு நல்ல வழிகாட்டல் தேவைஎன்ற கருத்து சத்தியமூர்த்தி மூலம் வெளிப்படுகிறது.கல்லூரி முதல்வரின் கடுமையான போக்கினால் இராஜாராமன் என்ற மாணவன் தன் தேர்வுத் தோல்விக்கு அவரே காரணம் எனக்கூறி கத்தியால் குத்துகிறான். அதற்கு எதிர்மாறாகச் சத்தியமூர்த்தியோ, சிறந்த போதனையாலும், நற்பணிகளாலும், அன்பான அணுகுமுறையாலும் மாணவர்களின் பாராட்டைப் பெறுகிறான்.அத்துடன், தமிழ் மன்ற விழாவுக்கு நவநீத கவியை வரவழைத்து மாணவர்களின் தமிழார்வத்தைப் பெருக்க முனைகிறான்.இளைய சமுதாயமே நாட்டின் முதுகெலும்பு என்பதை உணர்த்த மாணவர்களைச் சமூகப்பணியில் ஈடுபடுத்துகிறான். வாழ்க்கையில் கட்டொழுங்கு முக்கியம் என்பதை உணர்த்த இரவில் விடுதியை விட்டு வெளியேறும் மாணவரை அறிவுரை கூறித் திருத்துகிறான்.இத்தகைய நடவடிக்கைகளினாலேயே சத்தியமூர்த்தி மாணவர்களின் நெஞ்சில் இடம் பிடிக்கிறான். கல்லூரி நிர்வாகம் அவனைப் பழிவாங்க முனைந்தபோது மாணவர்கள் அவனுக்காகப் போராடத் துணிகின்றனர். இன்றைய இளையோர் நாளையத் தலைவர் என்ற கூற்றுக்கொப்ப மாணவர்களுக்குச் சிறந்த வழிகாட்டிகள் தேவை என்ற கருத்தினை நாவலாசிரியர் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

      மேலும், அநீதி இழைப்போருக்குத் தண்டனை உறுத¢ என்ற கருத்தையும்  நாவலாசிரியர் முன்வைக்கிறார்.மூன் லைட் விளம்பர நிறுவனத்தின் உரிமையாளர் கண்ணாயிரம் வஞ்சகத்தன்மை நிறைந்தவர்.மஞ்சள்பட்டி ஜமீன்தாரோ பணபலத்தைக் கொண்டு எதையும் சாதித்து விடலாம் என்ற எண்ணம் கொண்டவர்.குரூர மனம் படைத்த இவ்விருவரும் சத்தியமூர்த்திக்கும் மோகினிக்கும் சொல்லொணா துன்பத்தை விளைவிக்கின்றனர்.ஜமீன்தார், பூபதியின் மறிவுக்குப் பின் கல்லூரியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சத்தியமூர்த்தியைப் பழிவாங்க முனைகிறார்.ஆயினும், சூதும் வாதும் வேதனை செய்யும் என்பது போல நாவலின் இறுதியில் கள்ள நோட்டுக் கும்பலுடன் தொடர்பு இருந்ததால் கண்ணாயிரமும் ஜமீன்தாரும் காவல் துறையினரால் கைது செய்யப்படுகின்றனர்.எனவே, முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற சிந்தனையை என்றும் நினைவில் கொண்டு பிறருக்குத் துன்பம் விளைவிக்கலாகாது என்று நாவலாசிரியர் நினைவூட்டுகிறார்.

குலத்தால் தாழ்ந்தாலும் குணத்தால் உயர முடியும் என்ற சிந்தனை மோகினி மூலம் வெளிப்படுகிறது. உலகம் நிரந்தரமாகப் பழித்துக் கொண்டிருக்கிற ஒரு பகுதியைச் சேர்ந்த அழகிய பெண்களிடையே இருந்துதான் வஸந்தசேனை,மாதவி, மணிமேகலை, கடைசியாக மோகினி எல்லோரும் தோன்றியிருக்கிறார்கள்என்கிறார். நாவலாசிரியர்.மோகினி கணிகையர் குலப் பெண்ணாகப் பிறந்திருந்தாலும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதும் பெண்ணாக, விரும்பியவரையே மணம் புரிந்து தூய வாழ்வு வாழத்துடிக்கும் பெண்ணாகப் படைக்கப்பட்டுள்ளாள்.சேற்றில் முளைத்தாலும் செந்தாமரை தெய்வாம்சம் பொருந்திய மலராகக் கருதப்படுவதைப் போன்று ஒருவரின் குலத்தைப் பார்த்து அவரை எடை போடலாகாது என நாவலாசிரியர் மோகினி வழி நமக்குப் படிப்பினை தந்துள்ளார்.

ஆகவே, மனிதரைப் பண்படுத்தி நற்பாதையில் நடக்க உதவும் அரிய பல நல்ல கருத்துகளைப் பொன் விலங்கு நாவல் உள்ளடக்கியுள்ளது.படித்துச் சுவைப்பதோடு அக்கருத்துகளை வாசகர்கள் அசைபோடவும் நல்ல பனுவலாக இஃது அமைந்துள்ளது.

No comments:

Post a Comment