Thursday, November 8, 2012

சத்தியமூர்த்தி எதிர்நோக்கிய வாழ்க்கைப் போராட்டங்கள்



சத்தியமூர்த்தி எதிர்நோக்கிய வாழ்க்கைப் போராட்டங்களை விளக்கி எழுதுக.


குமாரி புஷ்பவள்ளி சத்திவேல்

SMK Taman Selesa Jaya,
Johor Bahru,Johor.



தமிழிலக்கிய வரலாற்றில் தனிப்பெரும் இலக்கியவாதியாகத் திகழ்ந்தவர் நா.பா என்றழைக்கப்படும் நாவலாசிரியர் நா.பார்த்தசாரதி ஆவார்.தனது எழுத்தாற்றலாலும் இலக்கியச் சுவையாலும் வாசகர்கள் மத்தியில் தனக்கென சிறப்பிடம் பெற்றவர். இவரது கற்பனையில் உதித்த பொன் விலங்கு எனும் சமூக நாவல் சத்தியமூர்த்தி எனும் இளைஞனை மையமிட்டு புனையப்பட்டுள்ளது.சிறந்த சிந்தனைகளும் உயர்ந்த கொள்கைகளும் உடைய இலட்சியவாதியாகச் சத்தியமூர்த்தி படைக்கப்பட்டுள்ளான்.தமிழில் முதுகலை(எம்.ஏ) பட்டம் பெற்ற சத்தியமூர்த்தி சாதாரண இளையோரிடையே தனித்து விளங்குகிறான்.இப்படி மற்றவர்களிடமிருந்து சிந்தனைகளாலும் செயல்களாலும் மாறுபட்ட அவன் தனது வாழ்வில் பலவகையான போராட்டங்களைச் சந்திக்கிறான்.
   முதலில் சத்தியமூர்த்தியின் குடும்பச் சூழலால் போராட்டம்.இளமையைத் தொலைத்த மூத்து தளர்ந்த பெற்றோர்,திருமண வயதில் பருவ மங்கைகளாக இரு தங்கைகள் என நடுத்தர வர்கத்தைச் சேர்ந்த குடும்பம் அவனுடையது. இருபத்தைந்து வருடங்களாகத் தமிழாசிரியராகப் பணிப்புரிந்திருப்பினும் குடும்பத்தைச் செல்வச் செழிப்பில் வாழச்செய்ய முடியாத ஆற்றாமைக்கு உந்தப்பட்டவர் அவன் அப்பா.வயதான காலத்தில் சிறு பிள்ளைகளுக்குத் துணைப்பாட வகுப்பு நடத்தியும் தனது வீட்டின் மேல் மாடியை வாடகைக்கு விட்டும் குடும்பத்தை நகர்த்தி வருகிறார்.மூத்தப் பிள்ளை என்ற ரீதியில் குடும்பப் பொருளாதாரத்தை உயர்த்தி வறுமையின் கோரப்பிடியிலிருந்து குடும்பத்தை மீட்கும் பொறுப்பு தன் மேல் இறக்கி வைக்கப்பட்டுள்ளதைச் சத்தியமூர்த்தி உணர்கிறான்.
   அதோடு கொள்கையால் மாறுபட்ட தந்தையுடன் சத்தியமூர்த்திக்குப் போராட்டம் நிலவுகிறது.நல்ல வருமானம் வரக்கூடிய துறையில் பட்டம் பெறாது, தமிழின் மேல் மோகம் கொண்ட தன் மகனின் எதிர்காலத்தையும் தனது குடும்பத்தின் நிலையைக் குறித்தும் அவனது அப்பா தனது மனக் குமுறலையும் ஆதங்கத்தையும் அவனிடம் கொட்டி வைக்கிறார்.நயவஞ்சகமும் அற்பத்தனமும் கூடிய கொடூரர்களான மஞ்சள்பட்டி ஜமீன்தாரிடமும் கண்ணாயிரத்திடமும் பழகி அனுசரித்து போகும்படி தனது தந்தை கூறுவதைச் சத்தியமூர்த்தியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.ஆனாலும், அவர் மனம் நோகாதபடி எதையும் அவன் சொன்னதுமில்லை.தனது  வேலை குறித்து கண்ணாயிரத்திப் போய்ப் பார்க்கும்படி அடிக்கடி தன் தந்தை வற்புறுத்துவதால் சத்தியமூர்த்தி மனப் போராட்டத்திற்கு உள்ளாகிறான்.
   இதனைத் தொடர்ந்து, சத்தியமூர்த்திக்கு வேலை தேடுவதில் போராட்டம் நிலவுகிறது.கிடைத்த வேலையைச் செய்து தனது குடும்பத்தைக் கரை சேர்க்க வேண்டிய நிலையில் இருந்தாலும் தன் இலட்சியங்களுக்கு ஒத்து வராத பல நல்ல வேலைகளைச் சத்தியமூர்த்தி முயன்று பார்த்ததில்லை.தனது மனம் விரும்பிய தொழிலைச் செய்வதையே பரம திருப்தியாக நினைக்கிறான்.மேலும்,தனது மொத்த குடும்பமும் தன் வேலையை எதிர்பார்த்தும் நம்பியும் இருப்பதைச் சத்தியமூர்த்தி உணர்கிறான்.இருந்தும்,பணத்திற்காகத் தனது இலட்சியங்களையும் கொள்கைகளையும் அடமானம் வைப்பதில் சத்தியமூர்த்திக்கு உடன்பாடில்லை.அதனால் பாரதி தன் தந்தைக்குக் கடிதம் எழுதச் சொன்ன பொழுது முதலில் தயங்கினாலும் தன் மனம் கவர்ந்த மல்லிகைப் பந்தல் கலைக் கல்லூரியில் வேலைக் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவருக்குக் கடிதம் எழுதுகிறான். மதுரையைக் காட்டிலும் வாழ்க்கைச் செலவினம் அதிகமாக இருக்கும் என்று குமரப்பன் கூறினாலும் தன் முடிவில் உறுதியாக இருக்கிறான்.
    இதனைத் தவிர்த்து, அவன் வேலைப் பார்க்கும் கல்லூரியிலும் சத்தியமூர்த்தி போராட்டத்தை எதிர்நோக்குகிறான்.வேலையில் சேர்ந்த முதல் நாள் கொண்டு பல இடர்களைச் சந்திக்கிறான்.கல்லூரி நிர்வாகி பூபதிக்கும் அவரின் மகள் பாரதிக்கும் அவன் மீது இருந்த தனிப்பட்ட அன்பும் அக்கறையின் காரணமாகக் கல்லூரி முதல்வர் முதல் கொண்டு மற்ற விரிவுரையாளர்களின்  பொறாமைக்கு ஆளாகிறான்.உதாரணமாக, மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி பைரனின் ஷி வாக்ஸ் இன் பியூட்டிஎன்ற ஆங்கில கவிதைக்கு அவன் அழகுற விளக்கமளித்தது மாணவர்களை மட்டுமல்லாது மறைந்திருந்து கேட்ட பூபதியின் பாராட்டினையும் பெறுகிறது.இதனை அறிந்த கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் காசிலிங்கனார் சத்தியமூர்த்தியைக் கூப்பிட்டு அவனைத் தமிழில் மட்டுமே பாடம் நடத்தும்படி எச்சரிக்கிறார்.மேலும் சத்தியமூர்த்தி மாணவர்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்று வருவதைப் பல ஆசிரியர்கள் விரும்பாமல் அவனைப் பற்றி பலவாறு இழிவாகப் பேசுகின்றனர்.மாணவர் விடுதியில் அவன் அடிக்கடி கண்காணிப்பதை விரும்பாத வார்டனோ குறைப்பட்டுக் கொள்கிறார். நிறைய படித்திருந்தும் பொறாமையாலும் சிறுமைத்தனமான எண்ணத்தாலும் தாழ்வடைகிற இத்தகைய நபர்களால் சத்தியமூர்த்தி போராட்டங்களைச் சந்திக்கிறான்.
   அத்துடன், சத்தியமூர்த்தியின் வாழ்வில் அன்பினாலும் போராட்டம் நிகழ்கிறது.பாரதி மற்றும் மோகினி ஆகிய இரு பெண்களும் அவன்பால் அளவிலா அன்பு கொள்கின்றனர்.சத்தியமூர்த்தியை ஒருதலையாக விரும்பும் பாரதி அவன்மேல் ஆளவிரும்புகிற அன்பைக் காட்டுகிறாள்.சத்தியமூர்த்தியின் அன்புக்குப் பாத்திரமான மோகினி அவனை ஆட்படுத்துகிற அன்பினால் பிணைக்கிறாள்.பாரதியின் அன்பினைத் தவிர்ப்பதிலும் மோகினியின் அன்பினை ஏற்பதிலும் சத்தியமூர்த்தி போராடுகிறான்.படகு பயணத்திற்கு அழைத்தபோது பாராமுகமாக இருத்தல், பாரதி எழுதிய கடிதங்களைக் கிழித்து எறிதல் போன்ற பாரதியைத் தவிர்க்க நினைக்கும் தனது நடவடிக்கைகளால் அவள் மன வேதனைக்குள்ளாகிறாள் என்று தெரிந்தும் செய்வதொன்றறியாமல் திகைக்கிறான்.தனக்கும் மோகினிக்குமிடையிலான காதல் வாழ்க்கையில் மஞ்சள்பட்டி ஜமீன்தாரும் பல சிக்கல்களை ஏற்படுத்துவதாலும் மனம் சஞ்சலப்படுகிறான்.
சத்தியமூர்த்தி சதிநாசக்காரர்களை எதிர்நோக்கக் கூடிய போராட்டத்தையும் அனுபவிக்கிறான். மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரியின் நிர்வாகம் பூபதியின் மறைவிற்குப் பின்னர் மஞ்சள்பட்டி ஜமீன்தார் கைக்கு மாறுகிறது. மோகினியை அடைவதில் சத்தியமூர்த்தியே தடையாக இருப்பதை உணர்ந்த மஞ்சள்பட்டி ஜமீன்தார் கண்ணாயிரத்துடன் கூட்டுச் சேர்ந்து அவனைப் பழிவாங்க பல தீங்குகளையும் அநீதிகளையும் விளைவிக்கின்றார்.உச்சக்கட்டமாக, கல்லூரி கூரைக்குத் தீ வைத்து விட்டான் என் பொய்க் குற்றம் சுமத்தி சத்தியமூர்த்தியைச் சிறையில் தள்ள முயலுகின்றனர்.சத்தியமூர்த்தியோ அவர்களது சூழ்ச்சிக்கு அடிபணியாமல் இறுதிவரை தனது நியாயத்திற்காகவும் உரிமைக்காகவும் போராடுகிறான். கல்லூரி மாணவர்கள், குமரப்பன் போன்ற நல்லுள்ளங்களின் பக்கத் துணையுடன் இறுதியில் வெற்றிப் பெறுகிறான்.
  இறுதியாக, “வீழ்வது மீண்டும் எழுவதற்கேஎன்ற சுவாமி விவேகாநந்தரின் அமுத வாக்கைத் தன் கொள்கையாகக் கொண்ட சத்தியமூர்த்தி , வாழ்வின் சுக துக்கங்களையும் போராட்டங்களையும் திறந்த மனத்துடன் ஏற்றுச் சமாளிக்கிறான். சத்தியமூர்த்தி இன்றைய இளைஞர்களுக்குச் சிறந்ததொரு வழிகாட்டியாக நாவலாசிரியர் படைத்துள்ளார் என்றால் அதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

No comments:

Post a Comment