Friday, November 16, 2012

நாடகம்- கரிகாலனின் பாத்திரப்படைப்பு


நாடகம்- கரிகாலனின் பாத்திரப்படைப்பைக் காவிய நாயகிதுணைக் கொண்டு விளக்கி எழுதுக.

ஆக்கம்:
குமாரி புஷ்பவள்ளி சத்திவேல்
SMK Taman Selesa Jaya,
Johor Bahru,Johor.



கலைமாமணி இரா.பழனிசாமி படைத்துள்ள காவிய நாயகிநாடகம் புறநானூற்றுப் புலவர் வெண்ணிக்குயத்தியாரின் பாடலை ஆதாரமாகக் கொண்டதாகும்.இதில் துணைக் கதாபாத்திரங்களில் ஒருவனாக வரும் சோழ மன்னன் கரிகாலன் நற்பண்புகளின் உறைவிடமாகப் படைக்கப்பட்டுள்ளான்.
  சோழ மன்னன் சிறந்த வீரனாகப் படைக்கப்பட்டுள்ளான்.அகிலம் போற்றும் ஆதித்த குலத்தில் பிறந்து இமயத்தில் புலிக்கொடி பொரித்தவனான அவன் காவிரிக்குக் கரை கண்டவன்.படைகளை அனுப்பிவிட்டு பின்னால் நின்று வேடிக்கைப் பார்க்கும் பழக்கம் இல்லாதவன்.தானே போர்க்களத்தில் இறங்கி பகைவரை வீழ்த்தும் வீரத் திறம் கொண்டவனாக மிளிர்கிறான்.வெண்ணிப் பறந்தலையில் சேர,பாண்டிய மன்னர்களை வென்று வெற்றி வாகை சூடினான்.
   கரிகால் பெருவளத்தான் போரை ஆதரிப்பவனாகவே நாடகாசிரியர் படைத்துள்ளார்.இரும்பிடர்த்தலையாரின் கூற்றிற்கு ஏற்ப கரிலாலன் மண்ணாசை மிக்கவனாகவேஇருக்கிறான்.எனவேதான்,பாண்டிய நாட்டைப் போன்று பல நாடுகளைத் தன் வசப்படுத்தினான்; இமயம் முதல் குமரிவரை எல்லோரையும் பணியச் செய்தான்.சேர மன்னனைப் போரில் வென்றதை மக்கள் விழாவாகக் கொண்டாட ஆணையிட்டதோடு அதனைக் கொண்டாட அவையையும் கூட்டுகிறான்.
   கரிகாலன் புலமையைப் போற்றும் மன்னனாகவும்விளங்குகிறான்.பொன்னி விதவைக் கோலத்தில் அவைக்கு வந்தாலும் அவளுடைய புலமையை மதித்து ஆசனத்தில் அமரச் செய்கிறான்.சோழனை விட சேரன் நல்லவன் எனப் பொருள்பட பொன்னி பாடிய கவிதையை அவையோர் குறை கூறிய வேளையில் , “இது சிந்தனைக்கு வேலை தரும் செந்தமிழ்க் கவிதைதான்என்று பாராட்டுகிறான் கரிகாலன். விசாரணை முடியும் வரை பாதுகாப்பான அடைக்கலம் கொடுக்கிறான்;பாதுகாப்பையும் உறுதி செய்கிறான்.அரசி வேண்மாள் எழுதிய கவிதையையும் படித்து இரசிக்கிறான்.
   இதனைத் தவிர்த்து, கரிகாலன் நீதியை நிலைநாட்டும் அரசனாகப் படைக்கப்பட்டுள்ளான்.எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் எதையும் தீர ஆராய்ந்து பார்த்து முடிவு எடுப்பவன்.எனவேதான், போரில் புறப்புண் ஏற்பட்டதால் வடக்கிருந்து உரிர் நீத்த சேரனின் மானங்காக்க நீதி கேட்டு வந்த பொன்னியின் வழக்கில் உடனே தீர்ப்பு கூறாமல் தீர ஆலோசித்து , விவாதித்து முடிவெடுக்க விசாரணையை இருமுறை தள்ளி வைக்கிறான்.தீர ஆராய்ந்து இறுதியில் பொன்னி குற்றமற்றவள் என தீர்ப்பளிப்பதன் மூலம் நீதியை நிலைநாட்டுகிறான்.
   சோழப்பேரரசன் கரிகாலன் சதிகளை முறியடிப்பதில் மதிநுட்பம் கொண்டவனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளான்.பொன்னியின் பின்புலத்தை அறிந்து கொள்ள துறவியாக மாறுவேடமிட்டு விருந்தினர் விடுதியில் அவளைச் சந்தித்து உண்மைக் கதையினைக் கண்டறிகிறான்.தளபதி,காளிங்கராயர் இருவரின் தூண்டுதலின் பேரில் விஷ வைத்தியன் கார்கோடகன் விஷம் கலந்த உணவைப் பொன்னிக்குக் கொடுத்து அவளைக் கொல்ல முயற்சிக்கும் பொழுது அவ்வுணவைப் பறவைகளுக்கு வழங்கி சதியை முறியடிக்கிறான்.மேலும்,காளிங்கராயரோடு தொடர்பு வைத்துள்ள பாண்டிய மன்னனின் ஒற்றனைக் கைது செய்ததோடு சாமார்த்தியமாகத் தன்னைக் கொல்ல வந்த வேங்கையனையும் சிறையிலிடுகிறான்.
   அத்துடன், கற்பு நெறியைப் போற்றுபவனாகவும் கரிகாலன் விளங்குகிறான்.இரும்பிடர்த்தலையார் ஒரு பெரும் நிலக்கிழாரின் கற்பனைக் கதையைக் கூறும் பொழுது, கரிகாலன் ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தமிழர் பண்பாடுஎன நினைவுறுத்துகிறான்.வேண்மாளைத் தவிர வேறு யாரையும் தன் மனதால் எண்ணவில்லை. தன் கணவனின் மானங்காக்க கரிகாலனின் அரசவைக்கே துணிவோடு வந்து கவிபுனைந்த பொன்னியின் கற்பின் திறத்தை வியந்து அவளைப் பெருஞ்சேரலாதனின் மனைவியாகவும் சேர நாட்டின் பேரரசியாகவும் அங்கீகரிக்கிறான்.
இறைபக்திதிறத்தையும் கரிகாலனிடத்தில் காண முடிகிறது.சிறந்த சிவபக்தனான கரிகாலன் இறையுணர்வின் காரணமாக இமயம் வரைச் சென்று புலிக்கொடி பொறித்தான்.மேலும்,சேர நாட்டின் மீது அவன் படையெடுத்தது மண்வெறியால் அல்ல, பக்தி வெறியால்தான்.சிவபெருமானுக்கு அடுத்தபடியாக சாத்தனை( ஐயப்பன் ) வழிபடும் சோழன் கரிகாலன் சேரநாட்டில் உள்ள சாத்தன் கோயிலைத் தன் ஆளுகைக்கு உட்படுத்தி அங்குச் சிறப்பான பூசைகள் நடைபெற வேண்டும் என்று விரும்புகிறான். அதைச் சேரனிடம் கேட்டுப் பெறுவது மதிப்புக் குறைவான செயல் என்பதால் சேரன் மீது கரிகாலன் படையெடுக்கிறான்.
  ஆகவே, சோழன் கரிகாலன் வீரம்,பக்தி,நீதி  போன்ற சிறந்த பண்புகளைக் கொண்ட மன்னனாகத் திகழ்கிறான். இவன் இன்றைய சமூகத் தலைவர்களுக்கு நல்ல முன்னுதாரணம் எனக் கூறுவதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.
 

No comments:

Post a Comment