Sunday, November 18, 2012

காவிய நாயகி - சமுதாயச் சிந்தனைகள்



காவிய நாயகி நாடகத்தில் காணப்படும் சமுதாயச் சிந்தனைகளைத் தொகுத்து எழுதுக.



ஆக்கம்:
குமாரி புஷ்பவள்ளி சத்திவேல்
SMK Taman Selesa Jaya,
Johor Bahru,Johor.
 


கலைமாமணி இரா.பழனிசாமியின் கைவண்ணத்தில் மலர்ந்த பல படைப்புகளில் காவிய நாயகிநாடகமும் ஒன்றாகும்.காதலையும் வீரத்தையும் மையக்கருவாகக் கொண்ட இந்நாடகம் புறநானூற்றுப் பாடலை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட வரலாற்றுக் காவியம் என்பது குறிப்பிடத்தக்கது.அவ்வகையில் வாசகர்களுக்கு நல்ல கருத்துகளைத் தந்து சமுதாயத்தின் வளர்ச்சிக்குத் துணை நிற்கும் இலக்கிய வடிவமாகச் செயல்படுகிறது.

    நாம் வீரத்துடன் அதாவது மறத்தமிழர்களாக வாழ்வது உத்தமம் எனும் கருத்து இந்நாடகத்தில் வலியுறுத்தப்படுகிறது.சேர மன்னன் பெருஞ்சேரலாதனும் சோழ மன்னன் கரிகாலனும் தமிழர் பண்பாட்டிற்குரிய வீரத்தில் சிறந்து விளங்குகின்றனர்.வீரம் ,கட்டிக்காக்கப்பட வேண்டிய மரபு என்பது காவிய நாடகத்தின் வழி கூறப்படுகிறது.வீரம் என்பது போர்த்திறன் மட்டுமல்ல மாறாக நமது உள்ளத்தில் உரம் , ஊக்கம் ஆகியவையும் அடங்கும்.பொன்னி எனும் கதாபாத்திரத்தைப் போல இருக்குமேயானால் எந்தவொரு முட்டுக்கட்டையையும் தகர்த்தெரிந்து நமது வாழ்க்கையில் வெற்றிநடைபோட முடியும் என்ற சமுதாயச் சிந்தனையும் காவிய நாயகி நாடகத்தில் நயம்பட உணர்த்தப்பட்டுள்ளது.

     அதோடு, பெண்ணுரிமை கட்டிக்காக்கப்பட வேண்டிய ஒன்று எனும் சமுதாயச் சிந்தனையையும் இந்நாடகத்தின் வழி உணரவைக்கப்படுகிறது.ஏனெனில், தன் கணவனாகப் பெருஞ்சேரலாதனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பொன்னிக்கு வழங்கப்பட்டுள்ளது.மேலும்,விதவை கோலம் பூண்டிருந்தாலும் பொன்னிக்கும் பெண்ணுக்குரிய மரியாதை கரிகாலன் அவையில் வழங்கப்படுகிறது.தொடர்ந்து, மன்னனாக இருந்த போதும் கரிகாலன் தனது மனைவி வேண்மாளின் ஆலோசனைக்கு முன்னுரிமை வழங்கும் பண்பு காட்டப்பட்டுள்ளது.பொன்னி தனது கணவனின் மானத்தை நிலைநாட்டும் பொருட்டு அவையில் கரிகாலனிடம் விவாதம் செய்வது , பெண்ணுக்கு பேச்சுரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதையும் இந்நாடகம் வலியுறுத்துகிறது.எனவே,’பெண்கள் நாட்டின் கண்கள்எனும் கூற்றுக்கேற்ப பெண்களைப் போற்றி அவர்களின் உரிமையைக் கட்டிக்காக்க வேண்டும் எனும் உன்னத கருத்து நம் சிந்தனைக்கு விருந்தாகிறது.

  இதனைத் தொடர்ந்து , புனிதமான காதலே சிறந்தது எனும் உன்னத சிந்தனையையும் இந்நாடகம் வாசகர்களுக்குத் தெளிவுறுத்துகிறது.சேர மன்னனான பெருஞ்சேரலாதனுக்கும் சோழ நாட்டில் குயவர் குலத்தில் பிறந்த பொன்னிக்கும் காதல் மலர்கிறது.பொன்னியின் அழகிலும் கவிதைத் திறனிலும் மனதைப் பறிகொடுக்கும் பெருஞ்சேரலாதன் அவளை மணக்க சித்தமாக உள்ளான். அவர்கள் இருவரும் பழகும் பொழுதும் காமத்திற்கு இடங்கொடாமல் கண்ணியமாகப் பழகுகின்றனர். சேரன் மீது தான் கொண்ட காதலின் காரணமாக அவன் மானங்காக்க கரிகாலனின் அவைக்கே வந்து நியாயம் கேட்கிறாள் பொன்னி.இனக் கவர்ச்சியால் உந்தப்பட்டு காதல் என்ற பெயரில் தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்ளும் இன்றைய இளையோருக்குச் சேரன் -பொன்னியின் புனிதக் காதல் நல்லதொரு பாடம் எனலாம். 

   மேலும், பிறந்த தாய் நாட்டின் மீது பற்று வேண்டும் என்ற சிந்தனையையும் நாடகாசிரியர் நமக்கு உணர்த்தத் தவறவில்லை.பொன்னி சேர நாட்டு மன்னன் பெருஞ்சேரலாதனைச் சாதாரண படைவீரன் என்றெண்ணியே காதலிக்கிறாள்.ஆனால்,அதே காதலன் சோழமன்னன் மண்வெறி கொண்டு சேரநாட்டின் மீது போர் தொடுத்துள்ளதாக ஓலை அனுப்பியபொழுது பொன்னி கோபங்கொள்கிறாள். மேலும், தன் அன்னை மண்ணின் மீது போர்த்தொடுக்க வந்திருக்கும் பெருஞ்சேரலாதனை அவன் கூடாரமிட்டிருக்கும் இடத்திற்கே வசைப்பாடச் செல்கிறாள். அங்குக் காவல் வீரனோடும் சேரனோடும் கடுமையான வாய்ச்சண்டையில் ஈடுபடுகிறாள்; தன் மன்னன் கரிகாலனின் மாண்பை உயர்த்திப் பேசுகிறாள். அவளைப் போன்று நாமும் தாய்த் திருநாட்டின் மீது பற்று கொண்டு வாழ வேண்டும்.

அத்துடன், கற்பு நெறி பிறழா வாழ்க்கையே மிகச் சிறந்த வாழ்வாகும் என்ற சிந்தனையை நாடகாசிரியர் பதியமிட்டுள்ளார். ஏனெனில்,ஒருவனுக்கு ஒருத்தி எனும் தமிழரின் கற்பு நெறி நிறைந்த வாழ்க்கை இந்நாடகத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.பொன்னி,பெருஞ்சேரலாதன்,கரிகாலன் ஆகியோரின் வாழ்க்கையில் இப்பண்பு தெள்ளத்தெளிவாக வெளிப்படுகிறது.அதோடு,கட்டிய மனைவியைக் கண் கலங்க விட்டுக் கள்ளத்தனமாக ஒருத்தியைக் காதலிப்பது மன்னிக்க முடியாத குற்றமெனக் கரிகாலன் இரும்பிடர்த்தலையாரிடம் கூறுவதன்வழி ஆண்களுக்கும் கற்பு நெறி அவசியம் என்பது உணர்த்தப்படுகிறது.இச்சிந்தனையை மக்கள் பின்பற்றி வாழ்ந்தால் நிச்சயமாக ஒழுக்கமிக்க சமுதாயத்தை  உருவாக்கலாம்.

    எந்த நிலையிலும் தன்மானத்தை இழக்கக் கூடாது என்ற சமுதாயக் கருத்தினையும் நாடகாசிரியர் நினைவுறுத்தியுள்ளார்.வெண்ணிப் பறந்தலைப் போரில், பெருஞ்சேரலாதன் கரிகாலனைத் துணிவாக எதிர்த்துப் போரிட்டான். ஆனால், சோழனின் வாள் நெஞ்சில் பாய்ந்து முதுகையும் துளைத்ததால் மக்கள் தன்னைப் புறமுதுகு காட்டிய கோழை எனத் தூற்றுவர் என்று எண்ணி வருந்தியதால் தன்மானம் இழந்து உயர் வாழ்வதைவிட வடக்கிருந்து உயிர் விடுவதே வீரத்திற்கு அழகு என்று உயிர் மாய்க்கிறான்.

ஆகவே, மனிதரைப் பண்படுத்தி நற்பாதையில் நடக்க உதவும் அரிய வாழ்வியல் கருத்துகளை உள்ளடக்கியப் பனுவலாக காவிய நாயகி நாடகம் திகழ்கிறது.வாசகர்கள் கண்டிப்பாய் இந்நாடகத்தைப் படித்துச் சுவைப்பதோடு சிந்தனைக்குத் தீனியாய்ப் பயன்படுத்தி வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும்.

No comments:

Post a Comment