Friday, November 16, 2012

பொன் விலங்கு நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உத்திமுறைகளை விளக்கி எழுக.



பொன் விலங்கு நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உத்திமுறைகளை விளக்கி எழுக.


ஆக்கம்:
குமாரி புஷ்பவள்ளி சத்திவேல்
SMK Taman Selesa Jaya,
Johor Bahru,Johor.


   பொன் விலங்கு நாவல் நாவலாசிரியர் நா.பார்த்தசாரதியின் கைவண்ணத்தில் மலர்ந்த நாவலாகும்.இந்நாவலானது உயர்ந்த இலட்சியங்களும் சிறந்த கொள்கைகளும் கொண்ட சத்தியமூர்த்தி தனி மனித வாழ்க்கையிலும் பொது வாழ்விலும் எதிர்நோக்கும் சிக்கல்களை முன்வைக்கிறது.இந்நாவல் சிறந்த முறையில் உருவம் பெற நாவலாசிரியர் பற்பல உத்திமுறைகளைப் பயன்படுத்தியுள்ளார். 

   இந்நாவலில் பயன்படுத்தப்பட்டுள்ள பல்வேறு உத்திகளில் பின்னோக்கு உத்தியும்ஒன்றாகும்.கடந்தகால நிகழ்ச்சிகளைக் கதையோட்டத்திற்கு ஏற்ப பின்னோக்கி பார்ப்பதே பின்னோக்கு உத்தியாகும்.பொன் விலங்கு நாவலில் பல இடங்களில் பின்னோக்கு உத்தி பயன்படுத்தப்பட்டுள்ளது.மல்லிகைப் பந்தலில் பூபதி வீட்டில் தமிழ் விரிவுரையாளர் பணிக்காக நேர்முகத்தேர்வு முடிந்து வீடு திரும்பும் சத்தியமூர்த்தி தன் குடும்பத்தின் வறுமை நிலையையும் தந்தையின் வாழ்க்கைப் போராட்டத்தையும் எண்ணிப் பார்க்கிறான்.மேலும், மல்லிகைப் பந்தல் கல்லூரியில் வேலை கிடைத்த சத்தியமூர்த்தி மோகினியிடம் விடைபெற வந்த போது தன் பாட்டி மதுரவல்லியின் காதல் கதையைக் கூறுகிறாள்.

   நாவலின் சுவாரசியமான நடையோட்டத்திற்கு முன்னோக்கு உத்தியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.நாவலில் எதிர்காலத்தில் நடக்கப் போகும் நிகழ்வை முன்கூட்டியே நாவலாசிரியர் குறிப்பால் உணர்த்துகிறார்.மல்லிகைப் பந்தலில் இருக்கும் நண்பன் குமரப்பனிடமிருந்து கடிதமும் மோகினியின் படங்களும் வருகின்றன.அன்று தூங்கும்போது தான் ஒரு பிச்சைக்காரனாக ஏதோ ஒரு வீதியில் போவதைப் போல் கனாக்காண்கிறான் சத்தியமூர்த்தி.அழகிய பெண்ணொருத்தி ஓடிவந்து அவன் காலில் வந்து விழுவதாகவும் அவன் அப்பெண்ணை ஏற்க மறுப்பதாகவும் அக்கனவு அமைகிறது.பின்னாளில் மோகினி சத்தியமூர்த்தியின் காதல் நிறைவேறாமலே போகும் என்பதை முன்கூட்டியே வாசகர்களுக்குப் புலப்படுத்துவதாக இது அமைகிறது.

பொன் விலங்கு நாவலில் நாவலாசிரியருக்குக் கடித உத்தியும் கைக்கொடுத்துள்ளது. கதைமாந்தர்கள் கடிதம் எழுதுவதாகப் படைத்து அவற்றின்வழி கதையை நகர்த்தும் கருத்துகளைச் சொல்லவும் ஆசிரியர் முயல்கிறார்.இந்த உத்தியானது நாவலில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு நாவலின் சுவையான கதைப் பின்னலுக்கும் பெரும் பங்கை ஆற்றியுள்ளது.நேர்முகத் தேர்வுக்கு வந்து சென்ற சத்தியமூர்த்திக்குப் பாரதி இருமுறை கடிதம் எழுதுகிறாள்.முதல் கடிதத்தில் தன் தந்தைக்கு அவன் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அவருக்குக் கடிதம் எழுதுமாறு வேண்டிகிறாள்.பாரதியின் வேண்டுகோளுக்கிணங்க பூபதிக்கு ஒரு கடிதம் எழுதி வேலையைப் பெறுவதில் தனக்குள்ள உண்மையான ஆர்வத்தைச் சத்தியமூர்த்தி வெளிப்படுத்துகிறான்.மேலும், மல்லிகைப் பந்தலிலிருக்கும் சத்தியமூர்த்திக்கு அவன் அப்பா குடும்பம் எதிர்நோக்கும் பணப் பற்றாக்குறையை விளக்கி அதிக பணம் அனுப்புமாறு வேண்டி கடிதம் எழுதுகிறார்.நாவலின் முக்கியக் கட்டமான மோகினியின் தற்கொலை சம்பவத்தின் போதும் இவ்வுத்தியானது பயன்படுத்தப்பட்டுள்ளது.தற்கொலை செய்து கொள்ளும் முன்பு மோகினி தன் நிலையை விளக்கி பாரதிக்கும் சத்தியமூர்த்திக்கும் கடிதங்கள் எழுதுகிறாள்.இது நாவலில் ஒரு திருப்புமுனையாக அமைகிறது.இக்கடிதத்தின் வழிதான் சத்தியமூர்த்தி மோகினியின் உண்மை நிலவரத்தையும் அவளுடைய காதலின் ஆழத்தையும் அறிகிறான்.

   வாசகர்களின் மனத்தை நாவலோடு பின்னிவிட நாவலாசிரியர் பயன்படுத்திய மிகச் சிறந்த உத்திகளில் கவிதை உத்தியும் அங்கம் வகிக்கின்றது.நவநீத கவி வடித்த கவிதைகளின் வழி நாவலின் சுவைக்கு மெருகூட்டியுள்ளார்.இந்த உத்தியும் நாவலின் பல்வேறு பகுதிகளில் கையாளப்பட்டுள்ளது.உதாரணமாகக் காதல் தோல்வி எந்த அளவு ஒரு பெண்ணின்  மென்மையான இதயத்தைக் காயப்படுத்துகின்றது என்பதைக் காட்ட கவிதை உத்தியைப் பயன்படுத்துகிறார்.பாரதி தன் காதல் நிறைவேறாவிட்டாலும் மோகினியின் காதல் வெற்றியடைய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாலும் காதல் பாதிப்பிலிருந்து மீளவில்லை.நவநீத கவியின் , “ முன்னும் பின்னும் நினைவாகி - அது
                           முடிவில் பெரிய கனவாகி
                           நீயும் நானும் கதையாகி நம்
                           கதையும் உலகிற் செலவாகி
என்ற பாட்டை பாரதியின் வேண்டுகோளுக்கிணங்கி மோகினி நெஞ்சுருகி பாட்டாகப் பாடும்பொழுது அவள் தேம்பித் தேம்பி அழுகிறாள்.இந்தக் காட்சி கண்டிப்பாய் வாசகருடைய நெஞ்சைப் பிழிய வைக்கும் நாவலாசிரியரின் தனித் திறமை எனக் கூறலாம். நாவலை முடிப்பதற்கும் நாவலாசிரியர் இவ்வுத்தியைப் பயன்படுத்தியுள்ளார். மோகினி சத்தியமூர்த்தியை விட்டு நிரந்தரமாகப் பிரிக்கும் வகையில் மரணம் அவளைத் தழுவுகிறது.இனி சத்தியமூர்த்தி மோகினியின் நினைவலைகளால் மட்டுமே வாழ முடியும் என்பதை,
காம்பிற் பூத்து மண்ணடைந்தாள் - ஒரு
கைப்படாத தெய்வ மலரானாள்என்ற பொருத்தமான கவிதை வரிகள் நாவலுக்குச் சிகரம் வைக்கின்றன.

     நாவலின் சுவையை மென்மேலும் கூட்டுவதற்கு நாவலாசிரியர் உரையாடல் உத்தியையும் கையாண்டுள்ளார்.உதாரணமாக மோகினி சத்தியமூர்த்தியைக் கோவிலில் சந்திக்கும் வேளையில் கண்ணாயிரத்தின் மீதுள்ள சீற்றத்தை திரும்பத் திரும்ப அந்த பாவியைப் பற்றி பேசுவதற்குக் கோவிலைப் போல் புனிதமான இடம் தகுதியானதில்லைஎன்ற வரிகளில் வெளிப்படுத்துகிறாள்.நாவலுக்கு உயிரோட்டத்தைக் கொடுக்கக் கூடிய ஆற்றலை இவ்வுத்தி கொண்டுள்ளது.

ஆகவே, பொன் விலங்கு நாவல் வாசகர்களின் மனத்தில் நீங்கா இடத்தைக் பிடிக்க நல்லதொரு கதை மட்டுமல்லாது சிறந்த உத்திமுறைகளும் முக்கியப் பங்களிக்கின்றன.இதனாலேயே நாவலாசிரியர் நா.பார்த்தசாரதி நாவலுலகின் முடிசூடா மன்னனாக இன்றளவும் விளங்குகிறார் என்று துணிந்து கூறலாம்.

No comments:

Post a Comment