Thursday, November 22, 2012

“ இயற்கையில் ஏழைமை ” என்ற கவிதையைக் கொண்டு பாட்டாளியின் வறுமையை ஒட்டி கவிஞரின் வருத்தத்தை விளக்கி எழுதுக.



இயற்கையில் ஏழைமை என்ற கவிதையைக் கொண்டு  பாட்டாளியின் வறுமையை ஒட்டி கவிஞரின் வருத்தத்தை விளக்கி எழுதுக.


ஆக்கம்:
குமாரி புஷ்பவள்ளி சத்திவேல்
SMK Taman Selesa Jaya,
Johor Bahru,Johor.



    அருந்தமிழ்க் கவிஞர் வெ.ஆறுமுகத்தின் சிந்தனை முத்துகளின் பெட்டகமாக விளங்கும் இயற்கையில் ஏழைமை என்ற கவிதையானது கவிதைப் பூங்கொத்து என்ற கவிதை தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது. இன்றைய சூழலில் உழைப்பவனுக்கே உணவில்லை என்ற மையக்கருத்தினை ஒட்டியே இக்கவிதை சொற்கோலம் பூண்டுள்ளது.

      இப்பூவுலகம் இயற்கை அன்னையின் எழில் ஓவியங்களால் நிறைந்த ஒன்று ; இரசிக்க இரசிக்கத் திகட்டாத வனப்பைக் கொண்டது. எனினும், மண்ணுயிரையும் தன்னுயிராக நினை என்ற கொள்கையில் ஆழப்பதிந்த கவிஞர், சமுதாய அமைப்பில் தொழிலாளர் வர்க்கத்தின் வறுமை நிலையை எண்ணி பெருந்துயரம் கொள்கிறார். அதன் காரணமாக  எப்போதும் வளமாகவும் அழகாகவும் இருக்கிற இயற்கையின் கூறுகள்கூட அவர் கண்ணுக்கு வறுமையின் சின்னங்களாகவே தோன்றுகின்றன. பாட்டாளி தன் உழைப்புக்கேற்ற வருவாய் இன்றி வறுமையில் வாடுவதைக் காணுங்கால் கவிஞருக்கு ஏற்படும் வருத்தமானது இக்கவிதை முழுவதும் இழையோடுவதைக் காணலாம். 

    அவ்வகையில், கரும்பஞ்சு போன்று பரந்து விரிந்த வாண்வெளியில் பறந்து திரியும் மேகக் கூட்டங்கள் இரசிக்கத் தக்கன. ஆனால், கவிஞருக்கோ வயிற்றைக் கிள்ளும் பசிக்குக் கஞ்சிகூடக் கிடைக்காமல் கடும்பசியால் கருகுகின்ற ஏழையின் முகமாகத்தான் அம்மேகம் தோன்றுகின்றது.

       மேலும், பல சிங்கங்கள் ஒன்றாய்க் கூடி எழுச்சியும் சீற்றமும் கொண்டு எழுப்புகிற முழக்கம் போலவும் இருட்டின் நிறத்தைக் கொண்ட பெரிய ஆண்யானைக் கூட்டம் ஒன்று காடே அதிருகின்ற அளவுக்குப் பிளிருகின்ற ஓசைப்போலவும் பேரோலி கொண்டது இடி . ஆனால், கவிஞருக்கோ அவ்வொலியானது வெப்பம் மிகுந்த கனல் வீசும் வெயிலில் கடுமையாக உழைத்தும் உரிய வருவாயைப் பெற முடியாத துயரத்தால் புடைக்கும் ஏழையின் நெஞ்சக் குமுறலாகத்தான் கேட்கிறது என்கிறார்.

     இதுமட்டுமல்லாது, இயற்கையின் மற்றொரு கூறான மின்னலையும் ஏழைமையின் குறியீடாகவே பார்க்கிறார் கவிஞர். பெரிய வீரன் ஒருவன், பகைவரைக் கொன்று அழிப்பதற்காகப் போர்க்களத்தில் பாய்ந்து சுழற்றி வீசும் கூரிய வாள் போலவும் ; பிற ஆடவர்களின் மதியை மயங்கச் செய்யும் நோக்கத்தில் மூங்கில் போன்ற தோள்களுடைய மங்கை ஒருத்தி வீசுகின்ற விழிப்பார்வைப் போன்றது என்று பிறர் மின்னலை அழகு மொழிகளால் உரைக்கலாம். அதற்கு மாறாக கவிஞரோ,  வருவாய் போதாத ஆற்றாமையில் ஏழை ஒருவன் அன்றாட வயிற்றுப் பசியைப் போக்கும் தேவைக்காகவே அலைந்து திரிவதால்  அவன் முகம் சுருங்கித் தோன்றிய கோடுதான் என்று கூறி தன் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார்.

  அத்துடன் , பரந்து விரிந்து காணப்படுவது வானம் . அந்த பெரிய அணைக்கட்டிலே பிளவு ஏற்பட்டதால் அதன் வழியாகப் பெருக்கெடுத்து வரும் வெள்ளப்பெருக்கோ என்றும்,பெருஞ்சிறப்புடன் வாழ்ந்த தமிழினத்தவராகிய நாம் இன்று மானம் மதிப்பெல்லாம் இழந்து நிற்கின்ற நிலையைக் கண்டு இரங்கி வானம் எனும் தாய் வடிக்கின்ற கண்ணீர்ப் பெருக்கோ என்றும் என்ணுகிற வகையில் மனிதர்கள் எல்லாம் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளும் மழையைப் பற்றி நாம் பல கற்பனைக்கு ஆட்படுவதுண்டு. பிறர் துயர் கண்டு மனமிரங்கும் பண்பு கொண்ட கவிஞரோ அம்மழையை வறுமை காரணமாகப் பேணி வளர்க்க முடியாமல் விடப்பட்டுள்ள தன் குழந்தைகள்கூட பசியால் வாடுவதைக் கண்டு பெருந்துயர் கொண்டு கலங்கும் ஏழையின் கண்ணீராக வடிவம் கொள்கிறார்.

    ஏழைகளின் உழைப்பை அட்டையாய் உறிஞ்சி கோடான கோடி பணம் ஈட்டி மாட மாளிகையில் தான் மட்டும் சுகமாக உண்டு களிப்பவராக இருக்கின்றனர் முதலாளிமார்கள். இதன் காரணமாகவே கடுமையாக உழைத்தும் உரிய வருவாய் இன்மையால், உணவுக்குக்கூட, அதுவும் குழந்தைகளின் பசியைத் தீர்ப்பதற்குக்கூட இயலாத அளவுக்குக் கொடிய வறுமையில் இன்னும் பல பாட்டாளிகள் சிக்கித் தவிக்கின்றனர். நல்ல உணவு கிடைக்கப்பெறவில்லையென்றால் உடல்நலனும் உயர்குணமும்கொண்ட குடிமக்களை உருவாக்குவதென்பது முயல் கொம்பே என்ற கருத்தினைக் கவிஞர் முன்வைத்துள்ளார். மேலும் உழைப்பவர்கள் தங்கள் உழைப்புக்கு உரிய வருவாயுடன் நிறைவாக வாழாதவரை உலகில் அறம் நிலவுவதாகக் கொள்ள முடியாது ; அறம் இல்லாத உலகில் இயற்கை அழகும் வளமுங்கூடப் பயனற்றவையே என்ற கவிஞரின் கருத்தும் சிந்திக்கத்தக்கது. 

 ஆகவே,  தனியொருவனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோம் என்ற வெகுண்டு பாடிய பாரதியின் வாரிசாகவே கவிஞரும் திகழ்கிறார் என்பது வெள்ளிடைமலை. சுயநலவாதிகளாக அல்லாமல் பிறர் நலனில் அக்கறை கொள்ளும் கவிஞரின் பாங்கு அனைத்து மக்களிடத்தேயும் நிலைப்பெற்றால் இப்பூமி சொர்க்கப்புரியாக மாறுவது திண்ணம்.

No comments:

Post a Comment