Friday, November 16, 2012

கரிகாலனின் தமிழ்ப்பற்று



கரிகாலனின் தமிழ்ப்பற்றை விளக்கி எழுதுக.


ஆக்கம்:
குமாரி புஷ்பவள்ளி சத்திவேல்
SMK Taman Selesa Jaya,
Johor Bahru,Johor.



கலைமாமணி இரா.பழனிசாமி வடித்த புறநானூற்றுப் பாடலை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுக் காவியம் காவிய நாயகிநாடகம் ஆகும்.காதலையும் வீரத்தையும் மையமாகக் கொண்டு இந்நாடகம் எழுதப்பட்டுள்ளது.முக்கிய கதாபாத்திரங்களுள் ஒருவரான கரிகாலனின் தமிழ்ப் பற்றை நாடக ஆசிரியர் சிறப்பாக விளக்கி உள்ளார்.

  கரிகாலன் ஆழ்ந்த தமிழ்ப் பற்று கொண்டதன் காரணமாகத் தமிழ்ப் புலவர்களைப் போற்றுகிறான்.தன்னை நாடி வரும் புலவர்களை வரவேற்று அவர்களுக்குத் தக்க மரியாதை செய்கிறான். கரிகாலனின் இப்பண்பு பொன்னி விசயத்தில் தெள்ளத் தெளிவாகிறது.வெண்ணிப்பறந்தலை போரில் சேரனை வீழ்த்தி வெற்றியடைகிறான் கரிகாலன்.அவ்வெற்றி விழாவை அரசவையில் உள்ள அனைவரும் களிப்பில் கொண்டாடிக் கொண்டிருக்கையில் தமிழ்ப் புலவரான பொன்னி கரிகாலன் அவைக்கு அமங்கலக் கோலத்தில் வருகிறாள்.அமங்கலக்கோலத்தில் வந்திருந்தாலும், அவன் அவளுக்கு அமர ஆசனம் வழங்கி, மரியாதையுடன் வரவேற்றான்.  
    மேலும்,புலவர்கள் சிறப்பான தமிழ் இலக்கியங்கள் இயற்ற ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களுக்குப் பொன்னும் பொருளும் அள்ளித் தருகிறான் கரிகாலன்.உதாரணமாகப் புலவர் உருத்திரங்கண்ணனாரின் பட்டினப்பாலைக்கு வரிக்கு ஒருபொற்தேங்காய் கொடுத்து பெருமைப்படுத்துகிறான்.தன்னை நாடி வந்த பொன்னிக்கும் அவ்வாறே தருவதாகவும் கூறுகிறான்.

கரிகாலன் கவிதா ஞானமும் தமிழ்ப்பற்றும் உடையவன் என்பது தெளிவு. பொன்னி நளியிறு முன்னீர் நாவாய் ஓட்டி..எனத் தொடங்கும் பாடலின் வஞ்சகப்பொருளை அவன் நன்கு அறிகிறான். அதுமட்டுமின்றி,பட்டத்து அரசியும் கரிகாலனின் மனைவியுமான நாங்கூர் வேண்மாள், தம்பதிகளான தங்கள் இருவருக்குமிடையே நடந்த ஊடலையும் வெண்ணிப் பறந்தலை வாயிற்போரோடு இணைத்து வெண்பா பாடியிருந்தாள்.அக்கவிதையைப் படித்தப்பின் அவளின் தமிழ்ப் புலமையைப் பாராட்டுகிறான்.

  இதுமட்டுமல்லாது,  தன்னைவிட சேரன் நல்லவன் என்று பொன்னி கூறினாலும் அவளைப் பெண் புலவர் என்று பாராமல் தண்டிக்க முடிவெடுக்கவில்லை; இது சிந்தனைக்கு வேலை தரும் செந்தமிழ்க் கவிதை எனக் கூறி , அவளது கவிதையை ஆராய எண்ணினான்; விசாரணையை ஒத்தி வைத்தான்.தமிழ் மேல் அளவிலா பற்று இருந்ததாலும் ஒரு தமிழ்ப் பெண் புலவரைத் தீர விசாரிக்காமல் தண்டித்து விட்டான் என்று பிறர் பழி கூறக் கூடாது என்பதாலும் அவன் பொன்னி வஞ்சகப் புகழ்ச்சியாகப் பாடிய பாடலின் நோக்கத்தையும் அவள் பின்னணியையும் அறிய முடிவு செய்தான். பொன்னியின் குற்றம் விசாரணையில் நிரூபிக்கப்படும்வரை விருந்தினர் விடுதியில் பாதுகாப்பாகத் தங்க வைக்கிறான். 

அதுமட்டுமல்லாமல், கரிகாலனின் அரசைவையில் அரசவைப்புலவராக ஒருவரை நியமித்து உள்ளது அவனின் தமிழ்ப் பற்றுக்கு நற்சான்று.கரிகாலனின் அரசவையில் புலவர் உருத்திரங்கண்ணனார் அரசவைப் புலவராக வீற்றிருக்கிறார். தமிழ் இலக்கியங்களை ஆராயும் பணி கரிகாலனின் அரசவையில் நடைபெறுகிறது என்பது புலப்படுகிறது.சங்க கால இலக்கியங்கள் வளர அரசர்களின் தமிழ்ப்பற்றுதான் முக்கியக் காரணம் என்று நாம் யாவரும் அறிந்த ஒன்றே.அதற்கொப்ப கரிகாலனின் அரசவையில் புலவர் உருத்திரங்கண்ணனார் இருப்பதன் மூலம் தமிழ்ப் படைப்புகளின் விவாதங்கள் சுடசுட நடைபெற ஏதுவாக அமைகின்றது.

இலக்கிய விவாதங்களைக் கேட்டு இரசிக்கும் ஆவல் கொண்டன் கரிகாலன் என்பது வெள்ளிடைமலை.பொன்னியின் வழக்கை விசாரிக்க அரசவை இரண்டாம் முறை கூடிய பொழுது அவள் மேல் உள்ள குற்றம் விசாரிக்கப்படாமல் புலமைத் திறன் பற்றியும் புலவர்களைப் பற்றியும் சூடான விவாதம் பொன்னிக்கும் இரும்பிடர்த்தலையார், தளபதி,காளிங்கராயர்,புலவர் உருத்திரங்கண்ணனார் ஆகியோருக்குமிடையே நடைபெறுகிறது.எல்லோரும் வழக்கை விட்டு விட்டு புலவர்கள் பற்றிய விவாதத்தில் இறங்கியதை அறிந்தும் கரிகாலன் ஒன்றும் கூறாமல் அச்சுவையான வாதத்தில் இலயித்து விட்டான்.

  ஆகவே, கரிகாலனின் தமிழ்ப் பற்றை வாசகர்களுக்கு நாடகாசிரியர் சிறப்பாகக் காட்டியுள்ளார்.தமிழன்னையின் குழந்தகளான நாமும் அவள் மீது அலாதி பற்று வைத்து,உயிர் போல் நேசித்து,சுவாசித்து போற்றுவோமாக.
உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு

No comments:

Post a Comment