Thursday, November 22, 2012

பஞ்சின் பயன்கள் பற்றி கவிஞர் கூறும் கருத்துகளை விளக்கி எழுதுக.



பஞ்சின் பயன்கள் பற்றி கவிஞர் கூறும் 
கருத்துகளை விளக்கி எழுதுக.



ஆக்கம்:
குமாரி புஷ்பவள்ளி சத்திவேல்
SMK Taman Selesa Jaya,
Johor Bahru,Johor.





   நற்றமிழ்க் கவிஞர் கரு. வேலுச்சாமி அவர்களின் கற்பனை நீரோடையில் மலர்ந்திட்ட கவிதையே பஞ்சு’ . இக்கவிதை , ‘கவிதைப் பூங்கொத்து எனும் கவிதைத் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது. படைப்பனைத்தும் பயனுள்ளவையே எனும் மையக் கருத்தினை ஒட்டி இக்கவிதை உருப்பெற்றுள்ளது.

பஞ்சு என்பது நமக்கு அற்பமாகத் தோன்றும் பொருளாக இருந்தாலும் அதன் சிறப்புக்குரிய பல பயன்களைத் தானே எடுத்துரைப்பதாக இக்கவிதையைக் கவிஞர் புனைந்துள்ளார். அவ்வகையில் பஞ்சு தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பாங்கில், தன்னை நெருப்புக்கு மிகவும் பிடிக்கும் என்றும், தன்னைக் கண்டவுடன் அது விரும்புகிறபடி தன்னைப் பற்றிக் கொள்ளும் என்றும் கூறுகிறது.மனிதன் பண்பாடற்று மிருகங்களைப் போல் திரிந்த காலத்திலிருந்து மாற்றங்கண்டு நாகரீகம் எனும் பரிமாணத்தை எட்டும்பொழுது தன்மானத்தைக் காக்க உடை பெரும் பங்காற்றியது. அத்தகைய உடை தன்னால்தான் உருவாகிறது என்று பெருமித உணர்வுடன் கூறுகிறது. மேலும் , தன்னைப் போல் நிலத்தில் முளைக்கும் செடியில் உருவாகும் பருப்பு என்ற பொருள் கறியாக்குவதற்குப் பயன்பட்டு மனிதருக்கு உணவாகி உதவுவதைப் போன்று தன்னால் உதவ முடியாவிட்டாலும் அவர்கள் வளர்க்கிற மாடுகளுக்குத் தான் உருவாகிற பருத்திச் செடியின் விதை விருப்பமான உணவாகிப் பசியை நீக்குவதற்குப் பயன்படுகிறது என்று பூரிப்புடன் கூறுகிறது.இவ்வாறு உலகின் பயனுள்ள பணிகளை  ஆற்றும் தன்னைப் பஞ்சு  என்று பெயர் கூறி அழைப்பதாகக் கூறுகிறது. மனித சமுதாயத்தில் தன்னைப் போன்று மிகச் சிலரே வெள்ளையான நெஞ்சம் கொண்டிருப்பதையும் மிக நாசுக்காகச் சொல்கிறது.

    இதனை அடுத்து, மகாத்மா காந்தி தம்முடைய வன்முறையற்ற விடுதலைப் போராட்டக் காலத்தில் நடத்திய கதர் ஆடை இயக்கத்தின் போது, அவர் கையாலேயே நூல் நூற்கப் பயன்படும் பஞ்சாக இருந்த பெருமைமிக்க பெயர் தனக்கு உண்டு என்றும் அந்த நூலால் நெய்த கதர்த் துண்டாக அவருடைய தோலைப் போர்த்திருந்த பெருமையும் தன் பெற்றுள்ளதாக பஞ்சு சொல்கிறது. இந்த இருவகையான சிறப்புகளும் இணைந்து தனக்குப் பெரும்புகழை ஈட்டித் தந்துள்ளன என்று உச்சிக்குளிர்கிறது.இருப்பினும் , நூலாக்குவதற்காகத் தன்னைத் திரித்துப் பழகிக் கொண்ட மனிதர்கள் , பின்னால், தாங்கள் பேசுகின்ற சொற்களின் பொருளையும் வஞ்சகமான நோக்கமான நோக்கத்தில் திரித்துப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள் என்று கூறுவதில் வருத்தம் இழையோடுவதைக் காண முடிகிறது. எண்ணெயில் எரியும் விளக்குகளில் பூந்தன்மை கொண்ட திரியின் வடிவில் சுடர்பரப்புகின்ற தன்னுடைய புகழுக்கு மனிதர்கள் களங்கத்தை ஏற்படுத்துகிறார்களே என்ற ஆற்றாமையே இவ்வருத்தத்திற்குக் காரணமாக அமைகிறது.

     பால்நிறங்கொண்ட முகில் வான்வெளியில் படர்ந்திருப்பது போலவும், பனி தன்னுடைய வெண்ணிற உடம்பை மலைகளின் மீது கிடத்திப் படுத்திருப்பது போலவும் , பெருப்பரப்புக் கொண்ட வயற்காடுகளில் முளைத்துள்ள பருத்திச் செடிகள் வெடிக்கும் காலத்தில், கன்ணுக்கெட்டிய தொலைவுவரை, எங்கும் அழகிய வெண்ணிறக் காட்சியாகத் தான் விளங்குவதாகப் பஞ்சு தன் பிறப்பின் வரலாற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறது. பின்பு,  கருவுற்ற தாயின் கருப்பைக்குள் உள்ள குழந்தையாக, தலையணைக்குள் தான் இன்பமாகத் தூங்குவதுடன், அந்தத் தலையணையில் சாயும் மனிதர்களையும் தான் தூங்க  வைக்கும் பணியை விளக்குகிறது. அத்துடன் ஆற்று நீரின் ஆழத்தைக் கணிப்பதற்காக நூலைத் தொங்கவிட்டுப் பார்க்கும் பழைய மரபு முறையின் வழியாக அதன் ஆழத்தை அறிய மனிதருக்குத் தான் தோள் கொடுப்பதையும் குறிப்பிடுகிறது.பல்வேறு வகையிலும் வடிவிலும் பயன்படுவதல்லாமல் , நூல் வடிவிலேயே இருந்தாலும் பல நோக்கங்களுக்குப் பயன்படுவதை நம்மை உணர வைக்கிறது.

  இதுமட்டுமல்லாது, சுவர் எழுப்பும்போது நூலின் வடிவில் தன்னை அணைவாகக் தொங்கவிட்டு நேர்மட்டம் பார்க்காமல் எழுப்பப்படும் கட்டடங்கள் புயற் காற்று வீசும்போது தானே இடிந்து விழும் என்று தன் இன்றியமையாதப் பயனை விளக்கும் அதே வேளையில், பொழுது போக்காக விளையாடப்படும் பம்பரத்திற்கும் தன் தேவையைக் கூறுகிறது.  நூல் என்பது பஞ்சாகிய தன்னுடைய வயிற்றுக்குள் பிறந்த பிள்ளை என்று கூறுவதுடன் அந்நூலைக் கொண்டே மனிதர்கள் ஆடைகளில் வண்ண வேலைப்பாடுகள் செய்வதையும் இயம்புகிறது. நூல் போன்ற இடையை உடையவர்கள் என்று கூறுவதால் பெண்கள் சிறப்புப் பெறுவதுடன் இலக்கியங்களையும் நூல் என்ற சொல்லால் சிறப்பித்துக் கூறுவதையும் சுட்டிக் காட்டுகிறது.
ஆகவே,   எளியப் பொருளாகக் கருதப்பட்டாலும் பலர் அறியாத பல பயன்களைப் பஞ்சு கொண்டிருப்பதைக் கவிஞர் நயம்பட உணர்த்தியுள்ளார்.ஆறறிவு படைத்த சில மனிதர்கள் பஞ்சின் அளவுக்குக் கூட உலகுக்குப் பயன்படுமாறு வாழ்வதில்லை என்ற கருத்தினைக் கவிஞர் மறைமுகமாகச் சுட்டுகிறார்.உலகின் மற்ற படைப்புகளுக்குப் பயன்படுமாறு வாழ்வோருக்கே வாழ்வில் பலவகயான உயர்வும் சிறப்பும் புகழும் பெருமையும் வாய்க்கும் என்ற உண்மையை நாம் தெளிந்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment