Friday, November 16, 2012

கண்ணாயிரமும் மஞ்சள்பட்டி ஜமீன்தாரும் இழைத்த கொடுமைகள்

கண்ணாயிரமும் மஞ்சள்பட்டி ஜமீன்தாரும் இழைத்த கொடுமைகளை விளக்கி எழுதுக.

ஆக்கம்:
குமாரி புஷ்பவள்ளி சத்திவேல்
SMK Taman Selesa Jaya,
Johor Bahru,Johor.
 

நாவலாசிரியர் நா. பார்த்தசாரதியின் சிந்தனையில் மலர்ந்த சிறந்த நாவல்களில் குறிப்பிடத்தக்கது பொன் விலங்காகும் . இந்நாவலில் எதிர்மறைக் கதாபாத்திரமாக விளங்கும் கண்ணாயிரம் , மஞ்சள்பட்டி ஜமீன்தார் ஆகியோர் மற்றவர்களுக்குச் சொல்லொணா கொடுமைகளை இழைக்கின்றனர். 

முன் லைட் விளம்பர நிறுவன உரிமையாளரான கண்ணாயிரம் நியாயம், தர்மம், ஈவிரக்கம் அறியாத மனிதர்; வஞ்சகமும் அற்பத்தனமும் கொண்டவர்.எப்பொழுதும் சுயநலத்தோடு செயல்பட்டுத் தம் காரியங்களைச் சாதித்துக் கொள்பவர். அவ்வகையில் ,பணத்தாசைப் பிடித்த முத்தழகம்மாளைக் கைப்பாவையாக்கி மோகினியைக் கவர்ச்சிகரமான விளம்பரப் படங்களில் நடிக்க வைத்து பணம் சம்பாதிக்க முனைகிறார். தனது கொள்கைக்கும் உணர்வுக்கும் அப்பாற்பட்டு நடக்க விரும்பாத மோகினி பல சமயங்களில் தனது மறுப்பை வெளிப்படையாகக் காட்டுகிறாள்.உதாரணமாகக் கூந்தல் தைல விளம்பரப் படமெடுக்க அவர் கொடுத்த கவர்ச்சியான சேலையை மோகினி வீசி எறிகிறாள்.ஆனால், அவளது இத்தகைய மறுப்பானது பெற்றெடுத்த தாயின் ஏச்சுக்கு ஆளாக்கி அவளது மனவுணர்வைப் பாதிக்கிறது.

 மேலும், மோகினியின் கலைத்திறனையும் தனக்குச் சாதகமாக்கிக் கொள்கிறார் கண்ணாயிரம். மோகினி வீட்டுக்குத் தனவணிகரை அழைத்து வந்து அவர் வீட்டுத் திருமணத்தில் மோகினியின் நடனத்துக்கு ஏற்பாடு செய்கிறார்.இவ்வாறே ஜமீன்தாரையும் மோகினி குடும்பத்துக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். மோகினியின் கலைத்துறை உயர்வுக்கு ஜமீன்தாரே காரணம் எனப் பேட்டியை வெளியிட்டு ஜமீன்தாரின் மனதில் மோகினி மீது ஆசையைத் தூண்டி அதன் மூலம் தான் இலாபம் அடைய நினைக்கிறார் கண்ணாயிரம். ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதும் மோகினி ஆண்களுடன் பேசிப் பழகக் கட்டாயப்படுத்தப்படும் பொழுது அனலில் இட்ட புழு போல துடிதுடிக்கிறாள்.

இதனைத் தவிர்த்து, சத்தியமூர்த்தியின் குடும்பத்திற்கும் துன்பம் விளைவிக்கிறார் கண்ணாயிரம்.நடுத்தரவர்க்கமான அக்குடும்பம் நிதிநெருக்கடியில் சிக்கும் பொழுது கண்ணாயிரம் தனது சுயரூபத்தை வெளிக்காட்டுகிறார்.சத்தியமூர்த்தியின் தந்தைக்குக் கடன் கொடுத்து தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கிறார். வயதானவர், மதிப்புக்குரிய முன்னால் ஆசிரியர் என்றெல்லாம் நினையாது அவரை ஜமீன்தாரிடம் எடுபிடியாக வேலைக்குச் சேர்த்து விடுகிறார்.மேலும், முத்தழகு அம்மாளின் மரணத்துக்குப் பிறகு மோகினி ஜமீன்தாரிடம் அடைக்கலமாகக் கண்ணாயிரம் துணை போகிறார். பூபதியின் மரணத்துக்குப் பிறகு சத்தியமூர்த்தியைப் பழி வாங்கத் துடிக்கும் ஜமீன்தாருக்கு உடன் இருந்து உதவுகிறார்.

அத்துடன், மோகினியைத் தாரமாக்கிக் கொள்ள வேண்டும் என கங்கணம் கட்டி செயல்படும் மஞ்சள்பட்டி ஜமீன்தாருக்குக் கண்ணாயிரம் துணை நிற்கிறார்.மஞ்சள்பட்டி ஜமீன்தாரின் கட்டுப்பாட்டில் சிறகிழந்த பறவையாய் தவிக்கும் மோகினியை அடைவதில் ஜமீன்தார் தீவிரம் காட்டும் வகையில் ஒரு சமயம் அவளது அறையில் அத்துமீறி நுழைகிறார்.பொங்கியெழும் மோகினியிடத்தில் ஜமீன்தாரின் செய்கையை நியாயப்படுத்தி கண்ணாயிரம் பேசுகிறார்.

இவரைத் தவிர, புகழுக்காகப் பணத்தை வாரி இறைக்கும் செல்வரான மஞ்சள்பட்டி ஜமீன்தாரும் பல வகையில் பிறருக்குத் துன்பத்தை விளைவிக்கிறார்.கண்ணாயிரம் மூலம் மோகினி குடும்பத்துக்கு அறிமுகம் ஆகும் இவர் இரண்டு அல்லது மூன்று இலட்சம் ரூபாய் முதலீட்டில் மோகினியை வைத்து சினிமாப் படம் தயாரிக்க திட்டமிடுகிறார்.இதனால் முத்தழகம்மாளின் பணத்தாசை மேலும் பெருகி மோகினியை ஆட்டிப் படைக்கிறது.

   மோகினியை அடைவதில் குறிக்கோளாய் இருக்கும் மஞ்சள்பட்டி ஜமீன்தார், அவள் தாய் முத்தழகம்மாள் கார் விபத்தில் இறந்த பிறகு அவளைத் தம் கட்டுப்பாட்டுக்குள் பங்களாவில் அடைத்து வைக்கிறார்.கொழு கொம்பற்ற கொடி போல ஆதரவின்றி தவிக்கும் மோகினி வேறுவழி தெரியாது ஜமீன்தாருக்குக் கட்டுப்பட்டு கூண்டுக் கிளியாகிறாள்.

  மேலும், பூபதி விமான விபத்தில் மரணமடைந்த பிறகு கல்லூரி நிர்வாகியாகும் ஜமீன்தார், மோகினியை அடைய நினைக்கும் தம் விருப்பத்துக்குக் குறுக்கே நிற்கும் சத்தியமூர்த்தியைப் பழி வாங்கமுனைகிறார்.அவனைக் கல்லூரி உதவி வார்டன் பதவியிலிருந்து நீக்குவதோடு மாணவரைத் தூண்டிக் கல்லூரி கூரைக்குத் தீ வைத்ததாகச் சதித் திட்டம் தீட்டி போலீஸ் கைது செய்யும் திட்டத்தை அரங்கேற்றுகிறார்.இது போதாதென்று, சத்தியமூர்த்தியின் அப்பாவை மிரட்டி குற்றத்தை ஒப்புக் கொள்ளும் கடிதத்தில் கையெழுத்திட பணிக்கிறார். சத்தியமூர்த்தியின் உறுதியினால் ஜமீன் தாரின் சதித்திட்டம் தோல்வியடைகிறது.சத்தியமூர்த்தியை விசாரிக்க வந்த கலெக்டர் அவனின் முன்னால் விரிவுரையாளர் என்பதால் ஜமீன்தாரின் சதித்திட்டம் தகர்த்தெறியப்படுகிறது.

 அடுத்ததாக, சத்தியமூர்த்தி - மோகினி காதலில் குறுக்கீடு சய்கிறார் மஞ்சள்பட்டி ஜமீன்தார். மோகினியும் அவரும் மணமக்களாகக் காட்சி தரும் பொய்யான படத்தைச் சத்தியமூர்த்தி கண்ணில் படும்படி வீட்டில் மாட்டி வைத்து அவன்  அவள் மீது வெறுப்பு கொள்ளும் நிலையை உண்டாக்குகிறார்.மோகினி தன்னை ஏமாற்றி விட்டதாகக் கருதும் சத்தியமூர்த்தி அவளைப் பிரிந்து உயர்கல்விக்கு ஜெர்மனி செல்ல முடிவெடுக்கிறான். சத்தியமூர்த்தி தன் மீது சந்தேகம் கொண்டு விட்டானே என்ற துயரத்தில் இருக்கும் மோகினிக்கு வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சியது போல தனித்திருக்கும் அவளிடம் ஜமீன்தார் அத்துமீறி நடக்க முயலும் போது தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள தற்கொலை செய்து கொள்கிறாள்.மஞ்சள்பட்டி ஜமீன்தாரின் சுயநலத்தனமே இரு அன்பு உள்ளங்கள் வாழ்வில் இணைசேர முடியாமல் போக வழிவகுத்தது எனலாம்.

ஆகவே, மஞ்சள்பட்டி ஜமீன்தார் மற்றும் கண்ணாயிரம் ஆகியோரின் வஞ்சகமும் சுயநலமும் பலருக்குத் தீங்கிழைக்க செய்துள்ளது.ஆனால், அடாது செய்பவன் படாது படுவான் என்பதற்கொப்ப மற்றவர்களுக்குத் துன்பம் விளைவித்த கண்ணாயிரமும் ஜமீன்தாரும் அதற்குரிய தண்டனையாக இறுதியில் கள்ள நோட்டுக் கும்பலுடன் தொடர்பு இருந்ததால் போலீசாரால் கைது செய்யப்படுகின்றனர்.தர்மம் வெல்லும் அதர்மம் தோற்கும் என்ற படிப்பினையை நாவலாசிரியர் இவ்விரு கதாபாத்திரங்களின் மூலம் நமக்கு உணர்த்தியுள்ளார்.
 

No comments:

Post a Comment