Thursday, November 8, 2012

பொன் விலங்கு: கதைச் சுருக்கம்



பொன் விலங்கு நாவலின் கதைச் சுருக்கத்தை எழுதுக.
ஆக்கம்: குமாரி புஷ்பவள்ளி, செலெசா ஜெயா இடைநிலைப்பள்ளி, ஸ்கூடாய், ஜொகூர்

   எழுத்தாளர் நா.பார்த்தசாரதியின் கைவண்ணத்தில் தமிழகக் கல்கிவார இதழில் 1963 - 1964 ஆம் ஆண்டுகளில் தொடராக வந்து பின் நாவலாக உருப்பெற்றதே பொன் விலங்கு நாவலாகும்.கல்கி இதழில் பொன் விலங்கு தொடராக வந்தபோது எண்ணற்ற வாசகர்களிடையே மிகுந்த ஆதரவைப் பெற்றது வெள்ளிடைமலை.
தொழிலதிபர் பூபதி தம் இலட்சியக் கல்லூரியை மல்லிகைப் பந்தல் எனும் ஊரில் ஒழுக்கத்தோடும் கட்டுப்பாட்டோடும் நடத்தி வருகிறார். அங்குத் தமிழ் விரிவுரையாளர் பணிக்காக நேர்முகத் தேர்வுக்குச் சத்தியமூர்த்தி எனும் இளைஞன் வருகிறான். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற அவன் உயர்ந்த இலட்சியமும் நல்ல சிந்தனைகளும் கொண்ட இளைஞனாகத் திகழ்கிறான்.மதுரையில் வாழும்  வயதான தன் பெற்றோரையும் இரு தங்கைகளையும் பராமரிக்க வேலை தேடிக்கொண்டிருக்கிறான்.
 பூபதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் நேர்முகத் தேர்வு அவர் இல்லத்திலேயே நடக்கிறது.தேர்வின் போது சத்தியமூர்த்தி அளித்த பதில்கள் அவனுடைய அறிவாற்றலை வெளிப்படுத்துகின்றன.பூபதியின் மகள் பாரதியின் அறிவாற்றலால் கவரப்படுகிறாள்.நேர்முகத் தேர்வு முடிந்த பின் பாரதியே தன் காரில் சத்தியமூர்த்தியைப் பேருந்து நிலையத்திற்கு அனுப்பி வைக்கிறாள். மதுரைக்கு இரயிலில் பயணமான சத்தியமூர்த்தி தாயின் சுடுச் சொற்களைத் தாளாது தற்கொலைக்கு முயற்சித்த நடன மங்கை மோகினியைக் காப்பாற்றி அறிவுரைக் கூறுகிறான்.மோகினி தாசி குலத்தில் பிறந்தாலும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதும் பெண்ணாகத் திகழ்கிறாள்.ஆனால் அவள் அம்மா முத்தழகம்மாளோ மோகினியை வைத்து நடனம், விளம்பரம் எனப் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்.
மூன் லைட் விளம்பர நிறுவனத்தின் உரிமையாளர் கண்ணாயிரம் மதுரை இரயில் நிலையத்திலிருந்து மோகினியையும் அவள் அம்மாவையும் அழைத்துப் போகிறார். மதுரை வட்டார பிரமுகர்களின் விளம்பரத் தேவைகளைப் பூர்த்தி செய்து பணம் ஈட்டுவதில் கில்லாடியான அவர் மோகினியின் அழகையும் கலைத்திறமையையும் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளப் பார்க்கிறார்.அதற்கு முத்தழகம்மாளை தன் கைப்பாவையாக்கிக் கொள்கிறார்.
இதனிடையே, சத்தியமூர்த்திக்குப் பிறகு தன் அப்பா இன்னொருவரை அழைத்து நேர்முகத் தேர்வு வைத்தது பாரதிக்கு அதிர்ச்சியூட்டுகிறது. சத்தியமூர்த்தியே தமிழ் விரிவுரையாளராக வரவேண்டும் என்று ஆசைப்பட்ட பாரதி சத்தியமூர்த்திக்குக் கடிதம் எழுதி தன் அப்பா பூபதிக்குக் கடிதம் எழுதுமாறு வேண்டுகிறாள். குடும்பத்தின் வறுமை நிலையையும், தனக்குப் பிடிக்காத கண்ணாயிரத்தை வேலைக்காகப் போய்ப் பார்க்கச் சொல்லும் தந்தையின் வற்புறுத்தலையும் கருத்தில் கொண்டு பூபதியின் மனதைக் கவர்வதுபோல் அவருக்குக் கடிதம் எழுதுகிறான்.
இரயிலில் சந்தித்த மோகினியுடனான சத்தியமூர்த்தியின் உறவு நெருக்கமாகிறது. கோயில், சித்திரா பௌர்ணமி நாட்டிய நிகழ்ச்சி என அவர்கள் இருவரும் சந்திக்கின்றனர்.மோகினியிடம் சத்தியமூர்த்திக்கு இனம் புரியாத அன்பு மேலிடுகிறது. மல்லிகைப் பந்தலில் வேலை கிடைத்த செய்தியைச் சொல்லி விடைபெற சத்தியமூர்த்தி அவள் வீட்டுக்குச் சென்ற போது, அவன் தன்னைக் காப்பாற்றிய முதலே தன்னை அர்பணித்து விட்டதாகக் கூறுகிறாள். அப்பொழுது, முருகன் படத்திற்கு மோகினி அணிவித்த மாலை கழன்று சத்தியமூர்த்தியின் கழுத்தில் விழுகிறது.மறுமுறை மோகினியைச் சந்தித்த பொழுது இருவரும் மோதிரங்களை மாற்றிக் கொள்கின்றனர்.மோகினியின் அன்பு தன்னை விட்டுப் பிரிய முடியாத விலங்காகப் பிணிப்பதைச் சத்தியமூர்த்தி உணர்கிறான்.
    மல்லிகைப் பந்தலில் பாரதி அவனை அழைத்துச் சென்று கல்லூரி ஆசிரியர் அறையில் தங்க வைக்கிறாள். இதனைக் கல்லூரி முதல்வரும் ஹெட்கிளார்க்கும் விரும்பவில்லை என்பதை உணர்ந்த சத்தியமூர்த்தி மறுநாள் காலை லேக் அவென்யூ பகுதியில் வாடகைக் அறையைத் தேடிக் கொள்கிறான். குறுகிய காலத்திலேயே தன் தனித் திறமையால் பூபதியின் அன்பையும் பாராட்டையும் பெறுகிறான்; உதவி வார்டனாகவும் நியமிக்கப்படுகிறான். இதனால் மற்றவர்களின் பொறாமைக்கு ஆளாகிறான். இருப்பினும் சிறந்த போதனையாலும் நற்பணிகளாலும் மாணவர்களின் பாராட்டைப் பெறுகிறான்.மோகினியின் அன்புக்கு ஆட்பட்ட சத்தியமூர்த்தி தன்னை நெருங்கி வரும் பாரதியிடம் விலகி இருக்கிறான்.தன்னைப் புறக்கணிக்கும் சத்தியமூர்த்தியின் செயலால் பாரதி மனவேதனை அடைகிறாள்.சத்தியமூர்த்தியின் நெருங்கிய நண்பன் குமரப்பன் குத்துவிளக்கு பத்திரிக்கை வேலையை இராஜினாமா செய்து விட்டு சத்தியமூர்த்தியுடன் வந்து தங்கி குமரப்பன் ஆர்ட்ஸ்என்ற பெயரில் சொந்தத் தொழிலில் ஈடுபடுகிறான்.
     இதற்கிடையில், சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தலுக்குப் போன பிறகு மோகினி தன் அம்மாவின் பண ஆசையிடம் மாட்டிக் கொள்கிறாள். தனக்கு உடன்படாத நடவடிக்கைகளில் கண்ணாயிரமும் தாய் முத்தழகம்மாளும் ஈடுபடச் செய்வதை வெறுத்து ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகிறாள்.பின் மதுரையில் நடந்த கார் விபத்தில் தாயை இழக்கிறாள். கண்ணாயிரம் மூலம் தன் குடும்பத்திற்குப் பழக்கமான  மஞ்சள்பட்டி ஜமீன்தார் என்ற பெரும் பணக்காரரின் கட்டுப்பாட்டுக்குள்ளாகிறாள்; அவளைத் தன் மாளிகையில் சிறை வைக்கிறார்.மோகினியைத் தாராமாக்கிக் கொள்ள அவர் மனப்பால் குடிக்கிறார்.
துரதிஷ்டவசமாக விமான விபத்தில் பூபதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது நண்பரான மஞ்சள்பட்டி ஜமீன்தார் மல்லிகைப் பந்தலுக்குப் புதிய நிர்வாகியாகிறார். மோகினியை அடைவதில் சத்தியமூர்த்தி பெரும் தடையாக இருப்பதை உணர்ந்து அவனைப் பழிவாங்கும் செயலில் ஈடுபடுகிறார். அவன் மீது முன்பே பொறாமை கொண்ட கல்லூரி முதல்வர் போன்றவர்களுக்கு இது வாய்ப்பாக அமைகிறது. உதவி வார்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதோடு கல்லூரிக் கூரைக்குத் தீ வைத்ததாக பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்துவதால் போலீசார் அவனைக் கைது செய்கின்றனர்.மறுநாள் ஜாமீனில் வெளியாகிறான். இந்தச் சதித் திட்டத்தை டிரைவர் முத்தையா மூலம் பாரதி தெரிந்து கொள்கிறாள். சத்தியமூர்த்தியின் மீது பழி சுமத்தியதால் மாணவர்கள் கோபங்கொண்டு வகுப்புகளைப் புறக்கணிக்கின்றனர். மஞ்சள்பட்டி ஜமீன் தாரிடம் கணக்குப் பிள்ளை என்ற தோற்றத்தில் எடுபிடியாக இருக்கும் சத்தியமூர்த்தியின் அப்பாவை மிரட்டி அவர் மூலம் குற்றத்தை ஒப்புக் கொள்ள வைக்கும் முயற்சியும் தோல்வியடைகிறது.கல்லூரி தீவைத்த சம்பவத்தை விசாரிக்க வந்த கலெக்டர் சத்தியமூர்த்தியின் முன்னால் விரிவுரையாளர் என்பதால் உண்மை நிலையை அறிகிறார்; விசாரணையில் சத்தியமூர்த்தி குற்றமற்றவன் என்பது நிரூபணமாகிறது.
    இதனூடே மதுரையிலிருந்து ஜமீன்தாரால் மல்லிகைப் பந்தலுக்கு வரவழைக்கப்படும் மோகினி பாரதியுடன் பழகுகிறாள். ஜவுளிக்கடையில் அவளை மஞ்சள்பட்டி ஜமீந்தாருடன் பார்க்கும்  சத்தியமூர்த்தி அதிர்ச்சியும் கோபமும் அடைகிறான். சத்தியமூர்த்தி -மோகினி உறவை அறியும் பாரதி மனமுடைந்து போனாலும் அவர்களை இணைத்து வைக்க முடிவெடுக்கிறாள். மஞ்சள்பட்டி ஜமீன்தாரோ  இதனைத் தெரிந்து கொண்டு கண்ணாயிரத்தின் உதவியுடன் தானும் மோகினியும் மணமக்களாகக் காட்சி தரும் பொய்யான படத்தைச் சத்தியமூர்த்தியின் கண்ணில் படும்படி மாட்டி வைக்கிறார். மோகினி தனக்குத் துரோகம் இழைத்து விட்டதாக மனம் நொந்து போகிறான்; அவளை அடியோடு வெறுக்கிறான்.தனக்கு ஒரே ஆதரவாய்த் திகழ்ந்த சத்தியமூர்த்தியும் தன்னை வெறுப்பதை அறிந்து மோகினி அனலில் இட்ட புழு போல துடிக்கிறாள்.அவள் தன் உண்மை நிலையை விளக்கி எழுதிய கடிதம் சத்தியமூர்த்தியின் அப்பாவால் கிழித்து வீசப்படுகிறது.
சத்தியமூர்த்தியின் வெளிநாட்டுப் பயணமும், ஜமீன்தாரின் அத்துமீறலும் மோகினியை மனமுடையச் செய்து தற்கொலை செய்துகொள்ளத் தூண்டுகின்றன.மோகினி தனது உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன் பாரதிக்கும் சத்தியமூர்த்திக்கும் கடிதங்கள் எழுதி பின்னர் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு உயிர் துறக்கிறாள். மோகினியின் மரணத்துக்குத் தான் காரணமாகி விட்டதை எண்ணிச் சத்தியமூர்த்தி குமுறி அழுகிறான்.நயவஞ்சகர்களான கண்ணாயிரமும், ஜமீன்தாரும் கள்ள நோட்டு விவகாரத்தில் போலீசாரால் கைது செய்யப் படுகின்றனர். தன் மனதில் நித்திய சுமங்கலியாகி விட்ட மோகினியின் நினைவலைகளோடு உயர்கல்விப்பெற சத்தியமூர்த்தி ஜெர்மனிக்குப் பயணமாகிறான்.
   ஆகவே, இவ்வளவில் நிறைவுப் பெற்றிருக்கும் பொன் விலங்கு நாவல் வாசகர்களின் நெஞ்சைச் சோக இராகங்களினால் வருடினாலும் சத்தியமூர்த்தி, மோகினி போன்ற உயிரோட்டமான பாத்திரங்கள் வாசகர் மனத்தில் என்றென்றும் நீங்கா இடத்தைப் பெறச் செய்து பல நல்ல கருத்துகளைச் சிந்தையில் பதியமிடுவதில்  நாவலாசிரியர் வெற்றி பெற்றுள்ளார் என்றால் மிகையில்லை.

No comments:

Post a Comment