Thursday, November 8, 2012

சத்தியமூர்த்தியின் பாத்திரப்படைப்பு.

சத்தியமூர்த்தியின் பாத்திரப்படைப்பு.
ஆக்கம்: குமாரி புஷ்பவள்ளி, செலெசா ஜெயா இடைநிலைப்பள்ளி, ஸ்கூடாய், ஜொகூர்

 நாவல் உலகின் முடிசூடா மன்னன் நா.பார்த்தசாரதி படைத்திருக்கும் சமூக நாவல், பொன் விலங்காகும்.இது சத்தியமூர்த்தி எனும் இளைஞன் தனிமனித வாழ்விலும் பொது வாழ்விலும் எதிர்நோக்கும் சிக்கல்களை மையமிட்டு இந்நாவல் எழுந்துள்ளது.இதில் முதன்மைக் கதைப்பாத்திரமாக வலம் வரும் சத்தியமூர்த்தி நம் நெஞ்சில் நிலைத்து நிற்கும் பாத்திரமாக நாவலாசிரியர் செதுக்கியுள்ளார்.

   சத்தியமூர்த்தி தன் குடும்பத்தின் மீது ஆழமான அன்பு கொண்டவனாகப் படைக்கப்படுள்ளான். மூத்துத் தளர்ந்த தன் பெற்றோரையும் இரு தங்கைகளையும் பராமரிக்க வேலைத் தேடுகிறான். கால் நூற்றாண்டுகளுக்கு மேல் ஆசிரியராகப் பணிபுரிந்தும் நிதிநெருக்கடியில் அல்லாடும் நடுத்தர வாழ்க்கையிலிருந்து விடுபட முடியாத நிலையில் மனம் நொந்து காணப்படும்  தன் தந்தை திட்டும் பொழுதெல்லாம் எதிர்த்துப் பேசாமல் பொறுமைக் காக்கிறான்.தன் இரு தங்கைகளுக்கும் முதலில் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காகத் தன் திருமணம் பற்றி யோசிக்காமல் இருக்கிறான்.

    மேலும், சத்தியமூர்த்தி உயர்ந்த இலட்சியங்களைக் கொண்ட இளைஞனாகத் திகழ்கிறான். குறைவான சம்பளம் பெற்றாலும் ஆசிரியர் தொழிலையே விரும்பி ஏற்று உன்னத சேவையை வழங்க ஆர்வமாய் இருக்கிறான்.வாழ்க்கைச் செலவினம் அதிகமாக இருப்பினும் மல்லிகைப் பந்தல் போன்ற ஒழுக்கமும் கட்டொழுங்குமிக்க கல்லூரியில் வேலை செய்யவே விரும்புகிறான். பல இடர்களைச் சந்திப்பினும் ஜெர்மனிக்கு உயர்கல்வி மேற்கொள்ளச் செல்வது அவனின் இமயம் போன்ற இலட்சியத்திற்கு நற்சான்று.

   வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்என்று தாய்த் தமிழைப் போற்றுபவனாக நாவலாசிரியர் படைத்துள்ளார்.அதிகப் பணம் ஈட்டக் கூடிய கணக்குத் துறையில் அவன் படித்துப் பட்டம் பெற வேண்டும் என்ற தன் தந்தையின் எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டு தமிழ்த் தாயின் அரவணைப்புக்குக் கட்டுப்பட்டு தமிழில் முதுகலை பட்டம் பெறுகிறான்.மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரி அதிபர் பூபதி வீட்டில் அனைவரும் ஆங்கிலத்தில் பேச, சத்தியமூர்த்தி தமிழில் பேசிப் பாராட்டைப் பெறுகிறான். நான் ஆங்கிலத்தை மதிக்கிறேன்; தமிழை மதித்து வணங்குகிறேன்என்ற சத்தியமூர்த்தியின் கூற்று இதனை மெய்ப்பிக்கின்றது.

    இதனைத் தவிர்த்து, சத்தியமூர்த்தி, நட்புக்கு இலக்கணமானவனாகவும் இருக்கிறான். படிப்பறிவிலும் தொழிலிலும் மலையும் மடுவுமாகக் காணப்பட்டாலும் குமரப்பனுடன் புனிதமான நட்பைக் கொண்டிருக்கிறான். மோகினி தனக்கு எழுதிய கடிதங்களைக் குமரப்பன் அனுமதியின்றி படித்தமைக்கு மன்னிப்பு கேட்ட பொழுது அவனைக் கடிந்து கொள்ளாமல் தன் உண்மை நண்பனுக்குத் தன் அந்தரங்கத்தைத் தெரிந்து கொள்ள உரிமையுண்டு என்று பெருந்தன்மையுடன் கூறுகிறான்.புரிந்துணர்வு, தன்னலங்கருதாமை, ஒளிவு மறைவின்றி பழகுதல் போன்ற  உயர்ந்த பண்புகளால் சிறந்து விளங்கும் நட்பு காலத்தால் அழியாது என்ற கருத்தினை மெய்ப்பிக்க நாவலாசிரியர் சத்தியமூர்த்தியைத் திறம்பட படைத்துள்ளார்.

    அத்துடன், சத்தியமூர்த்தி தீயவரிடம் அடிபணிந்து போகாத நெஞ்சுரமிக்க இளைஞனாகவும் மிளிர்கிறான்.வஞ்சகமும் அற்பத்தனமும் கொண்ட மூன்லைட் விளம்பர நிறுவன உரிமையாளர் கண்ணாயிரத்தை அவன் தந்தை வேலைக்காகச் சென்று காண வற்புறுத்தியபோது அவன் தவிர்த்து விடுகிறான்.அதுபோல, புகழுக்காக பணத்தை வாரி இழைக்கும் மஞ்சள்பட்டி ஜமீன்தாருக்கும் அவன் அடிபணிந்து போகாமல் துணிந்து போராடுகிறான்.பூபதிக்குப் பின் மல்லிகைப் பந்தல் கலைக் கல்லூரி நிர்வாகியாகும் ஜமீன் தாரை பிறரைப் போன்று பொய்யாகப் பாராட்டிப் பேச விரும்பாது அங்கிருந்து வெளியேறுகிறான் ; கூரைக்குத் தீ வைத்ததாக ஒப்புக் கொள்வதுடன் மன்னிப்புக் கேட்பதாகவும் தயாரிக்கப்பட்ட கடிதத்தில் கையெழுத்திட மறுத்ததுடன் அதனைக் கிழித்தெறிகிறான்.

    அதுமட்டுமல்லாமல், சத்தியமூர்த்தி ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழர் பண்பாட்டைக் கடைபிடிக்கும்  சிறந்த ஆண்மகனாகவும் நாவலாசிரியர் காட்டியுள்ளார். மோகினி தாசி குடியில் பிறந்து நடன மங்கையாக வாழ்ந்தாலும் ஒழுக்கத்தை உயிரென கொள்ளும் பண்பால் கவரப்பட்ட சத்தியமூர்த்தி அவளையே தன் மானசீக மனைவியாக ஏற்றுக் கொள்கிறான். சமலபுத்தி கொண்ட ஆணாக இல்லாமல் தன்னிடம் நெருங்கிப் பழக வரும் பாரதியிடம் விலகியே இருக்கிறான். மோகினி இறந்த பின்பும் அவள் அணிவித்த மோதிரத்தை அன்பின் பிணைப்பாகக் கொண்டு அவள் நினைவுடன் ஜெர்மனி பயணமாகிறான். உன்னத காதலும் குடும்ப வாழ்க்கை நெறியும் சமுதாயத்தில் நிலைபெற வேண்டும் என்ற நாவலாசிரியரின் எண்ணம் சத்தியமூர்த்தியின் மூலம் பளிச்சிடுகிறது.

   இவ்வாறு சான்றாண்மைக் குணங்களின் பிறப்பிடமாகத் திகழும்  சத்தியமூர்த்தி, மோகினியின் தூய அன்பைச் சந்தேகிக்கும் இயல்பான நிலைக்கு ஆட்படுவது வருந்தத்தக்கதே. ஜமீன்தாரும் மோகினியும் மணமக்களாகக் காட்சி தரும் பொய்யான படத்தை உண்மையென நம்பி, சூழ்நிலையின் கைதியாகிக் கிடக்கும் மோகினியிடத்தில் தீர விசாரிக்காமல் அவளை வெறுத்து ஒதுக்கும் செயல் தவறாகிறது; அவள் தற்கொலை செய்து கொள்ள வழிகோலுகிறது.சந்தேகமே உறவைச் சுட்டெரிக்கும் தீ என்பதை நாவலாசிரியர் உணர்த்த விழைகிறார். 

     ஆகவே, ஒழுக்கம்,அறிவாற்றல்,தமிழ்ப் பற்று, நெஞ்சுரம் கொண்ட இளைஞர்கள் சமுதாயத்தில் உருவாக வேண்டும் என்ற நாவலாசிரியரின் அவாவினை சத்தியமூர்த்தியின் பாத்திரப்படைப்பு பறைசாற்றுகிறது என்றால் அது மிகையில்லை.சத்தியமூர்த்தியை நெஞ்சில் நிலைத்து நிற்கும் பாத்திரமாகப் படைப்பதில் நாவலாசிரியர் வெற்றி பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment