Monday, November 26, 2012

மோகினி– பாரதி இருவரையும் ஒப்பிடுக.



மோகினி– பாரதி இருவரையும் ஒப்பிடுக.

சமூக நாவல் எழுதுவதில் தனித்திறம் பெற்ற எழுத்தாளர்களில் நா.பார்த்தசாரதி குறிப்பிடத்தக்கவர்.அவரது சிந்தனை ஓடையில் மலர்ந்திட்ட நாவல்களுள் ஒன்றே பொன் விலங்கு ஆகும். சத்தியமூர்த்தி என்ற இளைஞ தன் தனிமனித வாழ்விலும் பொது வாழ்விலும் எதிர்நோக்கும் சிக்கல்களை இந்நாவல்சுவைபடச் சொல்கிறது. இந்நாவலில் மோகினி, பாரதி என இரு துணை கதைப்பாத்திரங்கள் இந்நாவலுக்கு மேலும் மெருகூட்டுகின்றனர்.இவ்விருவரிடையே பல ஒற்றுமை வேற்றுமைகளைக் காண இயலுகிறது.

   அவ்வகையில், ஒற்றுமை எனப் பார்க்கையில் இருவருமே சத்தியமூர்த்தியைக் காதலித்த பெண்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.சத்தியமூர்த்தியின் நற்குணங்களையும் அறிவாற்றலையும் கண்டு தங்கள் மனத்தைப் பறிக்கொடுத்தனர்.  பாரதி மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரியின் நேர்முகத்தேர்வின் போதும் மோகினி இரயில் பயணத்தின் போதும் சத்தியமூர்த்தியை முதன்முதலில் கண்டபோதே   விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவாகி போனான் சத்தியமூர்த்தி. சத்தியமூர்த்தியின்பால் ஆழமான அன்பைக் கொண்டிருந்த இருவரும்  பல வேளைகளில் தங்கள் அன்பை வெளிப்படையாகக் காட்டினர். 

   மேலும், பாரதியும் மோகினியும் தங்கள் வாழ்க்கையில் முக்கியமான ஆதரவை இழந்தவர்கள். கணிகையர் குலப்பெண்ணான மோகினி, தன் தாய்முத்தழகம்மாளின் ஆதரவில் வாழ்ந்தவள். தாய்ப்பாசமற்ற முத்தழகம்மாளின் ஏச்சுக்கும் பேச்சுக்குமிடையேயும் தனக்கும் ஓர் உறவுண்டு என்று சொல்லிக் கொள்ளும் அளவில் மோகினிக்கு அவள் தாய் இருந்தாள். ஆனால், தன் தாயை கார் விபத்தில் இழந்த மோகினி சிறகு இழந்த பறவை போல் ஆனாள்; மஞ்சள்பட்டி ஜமீன்தாரின் கட்டுப்பாட்டுக்குள் கூண்டுக்கிளியாகிறாள். அதே வேளையில், பாரதியோ சிறு வயதிலேயே தாயை இழந்தாலும் அக்குறை தெரியாமல் தந்தை பூபதியின் அரவணைப்பில் வளர்ந்தவள். ஆனால், விதிவசத்தால் பத்மஸ்ரீ விருதைப் பெற டில்லிக்குச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியதால் பூபதி இறந்து போகிறார். தந்தையின் இறப்பு  பாரதியை வெகுவாகப் பாதிக்கிறது. கொழு கொம்பற்ற கொடி போல பாரதியும் ஜமீன்தாரின் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டியதாயிற்று.

     இதுமட்டுமின்றி, இருவருமே பிறருக்கு உதவும் மனப்பான்மையைக் கொண்டவர்கள். ஜமீன்தாரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் மோகினி மல்லிகைப் பந்தலுக்கு வரவழைக்கப்பட்டு மல்லிகைப்பந்தலில் பாரதியுடன் ஒரே மாளிகையில் தங்க வைக்கப்படுகிறாள். பாரதிக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் தருவாயில் ஒரு தாய் போல் இருந்து கண்ணுங்கருத்துமாகக் கவனித்து எல்லா பணிவிடைகளையும் செய்கிறாள் மோகினி. அதே வேளையில் பாரதியோ தன் காதல் நிறைவேறாமல் போனாலும் மோகினியும் சத்தியமூர்த்தியும் வாழ்வில் இணைசேர பல உதவிகளைச் செய்ய முன்வருகிறாள். அதன்படி மோகினியின் மீது வீண்சந்தேகம் கொள்ளும் சத்தியமூர்த்திக்கு உண்மை தெரியவருவதற்காக மோகினியின் கடிதத்தைச் சேர்க்கப் பெரும் முயற்சி செய்கிறாள்.

   இவ்வாறாக இவர்களுக்குள் பல ஒற்றுமைகள் இருந்தாலும் சில வேற்றுமைகளும் இருக்கும் வண்ணம் நாவலாசிரியர் படைத்துள்ளார். இருவருமே வெவ்வேறு குடும்பப் பின்னணியைக் கொண்டவர்களாகத் திகழ்கின்றனர். மோகினி தாசிக்குலத்தில் பிறந்து சமுதாயத்தில் அங்கீகரிக்கப்படாத , ஒதுக்கப்பட்ட வர்க்கத்தைச் சார்ந்தவளாகத் திகழ்கிறாள். அன்பான தாய்தந்தை, உடன்பிறப்பு, தோழர்தோழியர், அண்டை அயலார்  என இயல்பான மனித சமுதாயத் தொடர்பைப் பெற இயலாத அபலைப் பெண்ணாக விளங்குகிறாள். பணத்தாசைக் கொண்ட தாய் முத்தழகம்மாளின் பிடியில் சிக்கி அனுதினமும் நரக வாழ்க்கையில் செத்துச் செத்துப் பிழைக்கிறாள். தன் மன உணர்வுகளைக்கூட வெளிப்படுத்த ஆள் கிடையாமல் இறைவனிடமே சரணாகதி அடைகிறாள்;அன்புக்கும் ஆறுதலுக்கும் ஆதரவுக்கும் ஏங்கித் தவிக்கும் பெண்ணாக வாழ்கிறாள். ஆனால், பாரதியோ தொழிலதிபர் பூபதியின் ஒரே செல்வ மகளாகப் பிறந்து இன்ப வாழ்வு வாழ்கிறாள். தந்தை பூபதியின்  பாச மழையில் நனைந்து விருப்பப்பட்டதெல்லாம் கிடைக்கும் பேறு பெற்றவளாக விளங்குகிறாள். தமிழ்த்துறையில் சேர்ந்து படிக்க விரும்பிய அவளது ஆசைக்குப் பூபதி முட்டுக்கட்டை போடாததை இதற்கு நற்சான்றாகக் கூறலாம். கல்லூரிப் படிப்பு, தோழியர், சுதந்திரம் என நல்வாழ்வு வாழ்கிறாள்.

இதனைத் தவிர்த்து,  மோகினி – பாரதி இருவருக்குமே சத்தியமூர்த்தியின் காதலைப் பெறுவதில் வேறுபடுகின்றனர். ஆட்படுத்தும் அன்பு கொண்ட மோகினி சத்தியமூர்த்தியின் காதலைப் பெறுவதில் வெற்றி அடைந்து அவன் மனத்தில் நித்திய சுமங்கலியாக வாழும் பேற்றைப் பெறுகிறாள். குலத்தால் தாழ்ந்தாலும் குணத்தால் உயர முடியும் என்பதைப் பறைசாற்றும் வகையில் ஒழுக்கத்தையே தன் உயிர் மூச்சாகக் கொண்டிருக்கும் மோகினியின் அன்பு சத்தியமூர்த்தியை விட்டுவிலக முடியாத பொன்விலங்காகக் பிணிக்கிறது. இதன் காரணமாகவே பாரதி சத்தியமூர்த்தியின் காதலைப் பெறுவதில் தோல்வி அடைகிறாள். பாரதியின் அன்பை ஆளவிரும்பும் அன்பாகவே நினைக்கும் சத்தியமூர்த்தி அவளிடமிருந்து விலகி இருக்கவே விரும்புகிறான். மோகினியைத் தன் மனத்தில் மனைவியாக வரித்துக் கொண்ட சத்தியமூர்த்தி மற்றொரு பெண்ணுக்குத் தன் மனத்தில் இடமில்லை  என்பதை மெய்ப்பிக்கவே பாரதி எழுதிய கடிதங்களை கிழித்தெறிகிறான். 

     இறுதியாக, இருவரும் சிக்கல்களை எதிர்நோக்கும் மனத்திடத்தில் மாறுபடுகின்றனர்.மோகினி மனத்திடம் குறைந்தவளாகவும் அடிமை வாழ்விலிருந்து மீள முடியாதவளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளாள்.முதலில் தன் தாயின் கடுஞ்சொற்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறாள். தாயின் இறப்பிற்குப் பின்பு மஞ்சள்பட்டி ஜமீன்தாரின் கட்டுப்பாட்டுக்குள்ளாகிய நிலையில் அவரது அத்துமீறலாலும் சத்தியமூர்த்தியின் வெளிநாட்டுப் பயணத்தாலும் நிலைக்குலைந்து தற்கொலை செய்து கொள்கிறாள். ஆனால் பாரதியோ, காதல் தோல்வி, தந்தையின் இறப்பு என தொடர் சிக்கல்களால் மனம் பாதிக்கப்பட்டாலும் மனத்திடத்தை ஏற்படுத்திக் கொள்கிறாள். எனவேதான், சத்தியமூர்த்தியையும் மோகினியையும் இல்லற வாழ்வில் இணைத்து வைக்கப் போராடுகிறாள்; கோழைத்தனமாகத் தற்கொலை செய்துகொள்ளாமல் உறுதியுடன் வாழ்க்கையைத் தொடர்கிறாள்.

    ஆகவே, நா. பார்த்தசாரதியின் கற்பனை சிற்பங்களாக மோகினியும் பாரதியும் விளங்கினாலும் நாவலின் நோக்கத்தை வெற்றியடையச் செய்வததில் பெரும் பங்காற்றியுள்ளதோடு இன்றையப் பெண்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக உள்ளனர் என்றால் அதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

                                               லாவண்யா த/பெ சுதாகர்
SMK Taman Selesa Jaya
Skudai, Johor Bahru

No comments:

Post a Comment