Sunday, November 18, 2012

வேண்மாள், இரும்பிடர்த்தலையார் ஆகியோரின் பாத்திரப்படைப்பை ஆராய்க.



வேண்மாள், இரும்பிடர்த்தலையார் ஆகியோரின் பாத்திரப்படைப்பை ஆராய்க.


ஆக்கம்:
குமாரி புஷ்பவள்ளி சத்திவேல்
SMK Taman Selesa Jaya,
Johor Bahru,Johor.



கலைமாமணி இரா.பழனிசாமி அவர்களின் இலக்கிய உளியால் செதுக்கப்பட்ட சிற்பமே காவிய நாயகி நாடகமாகும்.இந்நாடகம் புறநானூற்று நூலில் வெண்ணிக் குயத்தியார் எனும் பெண் புலவரின் கவியை மையமாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது.இந்நாடகத்தில் வேண்மாள்,இரும்பிடர்த்தலையார் ஆகியோர் துணை கதைப்பாத்திரங்களாக வலம் வருகின்றனர்.இவ்விரு கதை மாந்தர்களும் கதை ஓட்டத்திற்கு முக்கியப் பங்காற்றுகின்றனர்.

  சோழ மன்னன் கரிகாலைன் பட்டத்தரசி நாங்கூர் வேண்மாள் .அவள் கரிகாலனுக்கு ஏற்ற துணையாக அவன் மீது ஆழ்ந்த அன்பு கொண்டவளாகப் படைக்கப்பட்டுள்ளாள்.வேண்மாள் கவிதை எழுதும் ஆற்றல் படைத்தவள்.கரிகாலனோடு தான் கொண்ட ஊடலையும் வெண்ணிப் பறந்தலையில் கரிகாலன் வெற்றி பெற்றதையும் இணைத்து வெண்பா பாடித் தன் கணவனை வியப்பில் ஆழ்த்துகிறாள்.

   மேலும், தன் கணவன் கரிகாலனின் புகழுக்கு இழுக்கு என்றால் மனம் பதறும் அன்பு மனம் கொண்ட பெண்ணாக இருக்கிறாள் வேண்மாள்.கரிகாலனின் அரசவையில் பொன்னி எனும் புலவர் வந்து கரிகாலனைவிடப் பகைவன் சேரனை உயர்த்திப் பாடியது கேட்டு கோபங்கொள்கிறாள்.;அடுத்தமுறை தானும் அவைக்கு வருவதாகக் கூறுகிறாள்.

   மனைவி ஒரு மந்திரி என்பதற்கொப்ப தக்க நேரத்தில் தன் கணவன் கரிகாலனுக்கு ஆலோசனைகளை வழங்கி அவனுக்கு வழிகாட்டும் மனைவியாகவும் திகழ்கிறாள் வேண்மாள்.அரசவையில் சேரனை உயர்த்திப் பேசிய பொன்னியின் பின்னணியைக் கண்டுபிடிக்குமாறு தூண்டுகிறாள்.வேண்மாளின் ஆலோசனைக்குப் பிறகு கரிகாலன் துறவியாக மாறுவேடம் பூண்டு பொன்னியைப் பற்றிய உண்மைகளைக் கண்டறியும் பணியில் இறங்குகிறான்.
இவ்வளவில் நற்குணங்கள் வாய்த்தவளாக வேண்மாள் இருப்பினும், தீர விசாரிக்காமல் முடிவு எடுக்கும் அவளின் மறுமுகத்தையும் நாவலாசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.தளபதியாரும் காளிங்கராயரும் பொன்னி எழுதியது போல் ஒரு பொய்யான ஓலையைத் தயாரித்து அதனை வேண்மாளின் அந்தப்புரத்தில் போடுகின்றனர்.அந்த ஒலையைப் படித்த வேண்மாள் கரிகாலனுக்கும் பொன்னிக்கும் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கிறாள்.உடனே,இரும்பிடர்த்தலையாரிடம் சென்று முறையிடுகிறாள்.சந்தேகப் பிணிக்கு உயர்மட்ட பெண்ணான வேண்மாளும் அப்பாற்பட்டவள் அல்ல என்பது நிரூபணமாகிறது.

   ஆயினும்,தான் செய்த தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்கும் குணமுடையவள் வேண்மாள்.பொன்னி உண்மையாக எழுதிய ஓலையைப் பார்த்துப் பொன்னிக்கும் தன் கணவனுக்கும் தொடர்பில்லை என்ற உண்மையைத் தெரிந்து கொள்கிறாள்.அவசரப்பட்டுக் கரிகாலன் மீது சந்தேகப்பட்டமைக்காகத் தன் கணவனிடம் உளமார மன்னிப்புக் கேட்கிறாள்.

    மற்றொரு பக்கத்தில், இரும்பிடர்த்தலையார் கரிகாலனின் தாய்மாமனாகவும் தலைமை அமைச்சராகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார்.அவர் தமிழ்ப் புலமை படைத்தவர்.அரசவையில் புலவர் பொன்னி புறப்புண் பட்டு மானங்காக்க வடக்கிருந்து உயிர்நித்த பெருஞ்சேரலாதனின் மானங்காக்க சபையில் வாதாடியபோது இரும்பிடர்த்தலையார் துணிவோடு அவளை எதிர்த்து வாதாடுகிறார். பொன்னி ,சேரனின் கைகூலி பெற்றவளாக இருக்கும் எனச் சந்தேகங்கொண்டு அவளைச் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என்று உறுதியாகக் கூறுகிறார்.மன்னனின் வெற்றிக்குக் களங்கம் கற்பிக்கும் பொன்னியின் செயலை அறவே ஏற்காமல் வாதாடுகிறார். 
  
    இரும்பிடர்த்தலையார் கரிகாலனிடத்தில் அன்பும் புரிந்துணர்வு  கொண்டவராக இருக்கிறார்.காளிங்கராயரும் தளதியும் பொன்னி எழுதியதுபோல் எழுதிய பொய்யான ஓலையைக் கண்டு வேண்மாள் தன் கணவனைச் சந்தேகப் பட்டு நியாயம் கேட்க இரும்பிடர்த்தலையாரைச் சந்திக்கும் போது அவர் கரிகாலனைத் தற்காத்துப் பேசுகிறார்.கரிகாலனுக்கு மண்வெறி உண்டு, ஆனால் பெண்வெறி இல்லை என்று ஆணித்தரமாகக் கூறுகிறார்.

   சோழ சாம்ராஜ்யத்தின் தலைமை அமைச்சர் இரும்பிடர்த்தலையார் கடமையுணர்ச்சி தவறாதவர் என்பதும் வெள்ளிடைமலை. தாய் தந்தையரை இழந்து அனாதையான கரிகாலனை சிறுவயதில் தாயாதிகளின் பகையிலிருந்து காப்பாற்றி கருவூரிலே ஒளித்து வைத்து வளர்த்து ஆளாக்கி அரச பிடத்திலே அமர்த்தி சோழப் பேரரசைக் காப்பாற்றினார். கரிகாலன் ஆட்சித் திறமும், வீரமும், தமிழ்ப் பற்றும், ஒழுக்கமும் கொண்டு விளங்குவதற்கு இரும்பிடர்த்தலையாரின் வளர்ப்பு முறையே எனத் தாராளமாகக் கூறலாம்.

பொன்னியின் வழக்கு தொடர்பாக அவையில் காரசாரமான விவாதம் நடந்தாலும் இரும்பிடர்த்தலையார் கரிகாலன் மீது மிகவும் பாசமும் விசுவாசமும் கொண்டவராகப் படைக்கப்பட்டுள்ளார்.மன்னனின் கட்டளைக்கு கட்டுப்படுகிறார்.பொன்னியின் குற்றச்சாட்டு கரிகாலனுக்குக் களங்கத்தை ஏற்படுத்தி விட்டது என்பதால் பொன்னிக்குத் தக்கத் தண்டனை அளிக்க வேண்டும் என்று காளிங்கராயரும் தளபதியும் இட்ட தூபதிற்கு அவர்  அடிபணிந்து போய் கரிகாலனைச் சந்தித்தது மன்னரிடத்தில் அவர் கொண்ட விசுவாசத்தையே காட்டுகிறது.
இதனைத் தவிர்த்து, இரும்பிடர்த்தலையார் மதிநுட்பம் கொண்டவராகத் திகழ்கிறார்.பொன்னிக்கும் கரிகாலனுக்கும் தொடர்பு உள்ளதாக வேண்மாள் கொடுத்த ஒலையில் உள்ள உண்மையைக் கரிகாலனிடத்தில் விசாரிக்க நேரிடையாக அல்லாமல் நிலக்கிழாரின் காதல்என்ற கற்னை கதையைப் பயன்படுத்துகிறார்.

ஆகவே, வேண்மாள் மற்றும் இரும்பிடர்த்தலையார் ஆகிய இருவரும் கதை ஓட்டத்திற்கு உயிர் தந்துள்ளனர்.இவ்விரு கதை மாந்தர்களும் தங்கள் பாத்திரப்படைப்பின் மூலம் வாசகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்க நாடகாசிரியர் வகைசெய்துள்ளார்.

No comments:

Post a Comment