Thursday, November 8, 2012

மோகினியின் கதாப்பாத்திரத்திரம் : படிப்பினைகள்




மோகினியின் கதாப்பாத்திரத்தின் மூலம் நாம் பெறும் படிப்பினைகளை விளக்கி எழுதுக.
                                                         ஆக்கம்:


குமாரி புஷ்பவள்ளி சத்திவேல்
SMK Taman Selesa Jaya,
Johor Bahru,Johor.


இக்காலக்கட்ட எழுத்தாளர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்து 1960-களில் திராவிட எழுச்சிக்காகப் பாடுபட்ட அன்றைய எழுத்தாளர்களுள் பெரும் முத்திரை பதித்தவர் நா.பார்த்தசாரதி.அவர் கைவண்ணத்தில் மலர்ந்த பல நூல்களில் பிரசித்திப்பெற்றது பொன் விலங்கு நாவலாகும்.சத்தியமூர்த்தி என்ற தனிமனித வாழ்வியல் போராட்டங்களை மையமிட்டு இந்நாவல் புனையப்பட்டிருந்தாலும் துணைக்கதைப்பாத்திரமான மோகினியே கதையின் திருப்புமுனைக்கு அஸ்திவாரமாக அமைகிறாள்.அவளது கதாபாத்திரத்தின் வாயிலாக நாவலாசிரியர் நமக்குப் பல்வேறு படிப்பினைகளைத் தந்துள்ளார்.
ஒழுக்கம் என்பது மனித வாழ்க்கையின் உயிர்நாடி. பொய்யாமொழிப் புலவரின்
         ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
 உயிரினும் ஓம்பப் படும்
என்ற வாக்கை மெய்ப்பித்தவள் மோகினி.தாசிக் குலப் பெண்ணாக இருந்தாலும் தன் கற்பை உயிரினும் மேலாகக் கருதுகிறாள்.எந்தவொரு சூழ்நிலையிலும் தன் கற்புக்குக் களங்கம் வராதபடி தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறாள்.தன் தாயார் மற்ற ஆண்களோடு அளவளாவக் கூறியபோதும், மஞ்சள் பட்டி ஜமீன்தார் அவளிடம் நெருங்க நினைத்த போதும் நெருப்பிற்கு இணையாக நின்று தன் கற்பைக் காப்பாற்றுகிறாள்.அறிவியல் வளர்ச்சியால் வாழ்க்கைமுறை நாகரீகம் என்ற புதிய பரிமாணத்தை எட்டியிருக்கும் இன்றைய நிலையில் பெண்கள் தாந்தோன்றித் தனமாக வாழாமல் கற்புக்கு முக்கியத்துவம் தரவேண்டும். பெண்ணுக்கு முக்கிய அணிகலன் கற்பே என்பதால் அதனைக் கருத்தில் கொண்டு வாழ முற்பட வேண்டும் என்பது தெளிவாகிறது.
   அடுத்தபடியாகத் தெய்வீகக் காதலுக்கு இலக்கணமாகத் திகழ்கிறாள் மோகினி. ஒருத்திக்கு ஒருவன் என்ற தமிழர் பண்பாட்டைப் போற்றிப் பேணி வந்தாள்.இரயிலில் தன்னைக் காப்பாற்றிய சத்தியமூர்த்தியை உள்ளன்போடு காதலித்து அவனையே தன் மானசீக கணவனாக ஏற்றுக் கொண்டு உடலும் உள்ளமும் அவனுக்கே அர்பணம் என்று இறுதிவரை வாழ்ந்து போகிறாள்.மலர் விட்டு மலர் தாவும் வண்டைப் போல இனக்கவர்ச்சியால் உந்தப்பட்டு காதலிக்கும் இன்றைய இளையோர் தெய்வீகக் காதல் என்பது அன்பின் உச்சம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தனது ஆத்மார்த்தமான காதலால் சத்தியமூர்த்தியின் மனதில் நித்திய சுமங்கலியாக வாழும் பேறுப் பெற்ற மோகினியை வழிகாட்டியாகக் கொள்வது நலம்.
    மேலும், ஒரு பெண்ணுக்குக் கல்வியறிவு மிக முக்கியம்  என்பதனை மோகினி மூலம் அறிய முடிகிறது.எதையும் சீர்தூக்கிப் பார்த்து முடிவெடுக்கும் திறன் கல்விகற்ற சமுதாயத்தினரிடையே மட்டுமே காண முடியும். பாரதியையும் மோகினியையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் கல்வியறிவின் துணையோடு பாரதி எந்த முடிவையும் தீரயோசித்து எடுக்கிறாள்.காதல் தோல்வியையும் தந்தையின் இழப்பையும் திடமான மனதோடு ஏற்றுக் கொள்கிறாள். ஆனால், கல்வியறிவில்லாத மோகினியோ அறிவுப்பூர்வமாகச் செயல்படாமல் உணர்ச்சியின் விளிம்பில் நின்றதால் தற்கொலைக்கு ஆட்படுகிறாள். எந்தவொரு பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல என்பதனை பெண்கள் உணர வேண்டும்.உலகம் வளர்ந்து விட்ட இந்நிலையிலும் போராட்ட அடிமை வாழ்க்கையில் சிக்குண்டிருக்கும் பல பெண்கள் விழிப்புணர்ச்சி பெற்று தன்னம்பிக்கையோடு வாழ கல்வியறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தினை நாம் படிப்பினையாகக் கொள்ள வேண்டும்.
கலையைப் போற்றிவாழ்ந்த மோகினியின் குணமும் நோக்கத்தக்கது.வீணை வாசிப்பதிலும் நாட்டியம் ஆடுவதிலும் அபாரத் திறமை பெற்றிருந்தும் அதனை வியாபரப் பொருளாக்க அவள் முனையவில்லை.தான் கற்ற கலையைத் தெருக்கூத்தாக்க விரும்பாமல் இறைவனுக்குச் சமர்ப்பணமாக்க விழையும் அவளது பண்பு போற்றத் தக்கது. கலை என்ற பெயரில் ஆபாச நிகழ்ச்சிகள் நடத்தி தமிழர் கலை பண்பாட்டைச் சீரழிப்போர் மோகினியின் கொள்கையைச் சீர்தூக்கிப் பார்ப்பது நலம்.
       காதற்ற ஊசியும் வாராது கடைவழிக்கேஎன்ற உண்மையை அறிந்த பட்டினத்தடிகள் கட்டிய கோவணத்துடன் வாழ்க்கையைத் துறந்தார்.வாழ்க்கை நிலையற்றதுஎன்பதனை அறிந்ததால் என்னவோ மோகினி சற்றும் பொருளாசை இல்லாதவளாகத் திகழ்கிறாள்.மோகினி தன் அழகையும் கலையையும் வைத்துப் பொருள் சேர்க்க விரும்பவில்லை.வாழ்க்கைக்குப் போதுமான அளவிற்குப் பணம் தேட வேண்டுமே தவிர பகட்டுக்காகவும் ஆடம்பர வாழ்க்கைக்காகவும் அல்ல என்பதனை நாவலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
ஆகவே, நா.பார்த்தசாரதி திராவிட எழுச்சியோடு பெண்ணிய சிந்தனையையும் இந்நாவலில் துளிர்விடச் செய்து சமுதாயத்தில் மாற்றங்களைக் காண விரும்புகிறார்.இன்றைய நமது சமுதாயம் இச்சிந்தனைகளை வாழ்க்கையில் அமல்படுத்தி முன்னேறுவதே சமுதாயத்தின் மறுமலர்ச்சியாகும்.
 

No comments:

Post a Comment