Friday, November 16, 2012

பொன்னியின் வழக்கு விசாரணை



பொன்னியின் வழக்கு விசாரணை மூன்று முறை நடந்தது.இந்த வழக்கு விசாரணைகளின் முடிவுகளைத் தொகுத்து எழுதுக.



ஆக்கம்:
குமாரி புஷ்பவள்ளி சத்திவேல்
SMK Taman Selesa Jaya,
Johor Bahru,Johor.
 
 

நாடகாசிரியர் இரா.பழனிசாமியின் கைவண்ணத்தில் மலர்ந்துள்ள காவிய நாயகி நாடகம் புறநானூற்றில் இடம்பெற்றுள்ள புலவர் வெண்ணிக்குயத்தியாரின் பாடலை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும்.காதலும் வீரமும் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு உருவான இந்நாடகத்தில் சோழ மன்னன் கரிகாலனுக்கும் சேர மன்னன் பெருஞ்சேரலாதனுக்கும் வெண்ணிப்பறந்தலையில் நடந்த போரில் கரிகாலன் போர் நெறித் தவறி பெருஞ்சேரலாதனுக்குப் புறப்புண் ஏற்படுத்துகிறான். இதனால், தன்மானம் கருதி பெருஞ்சேரலாதன் வடக்கிருந்து உயிர் துறக்கிறான். இறப்பதற்கு முன் தன் மனைவியாக ஏற்றுக் கொண்ட பொன்னியிடம் தன் மானம் காக்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டதற்கிணங்க பொன்னியும் கரிகாலனின் அரசவைக்கு வந்து வஞ்சகப் புகழ்ச்சியாகப் பாடுகிறாள்.  அதனைக் குற்றமாகக் கருதிய அவையோர் அவளுக்குத் தண்டனை அளிக்குமாறு வேண்டியும், செங்கோன்முறைமை தவறாத கரிகாலன் அவளை விசாரித்து தீர்ப்பளிக்க உறுதி பூணுகிறான். அவ்வகையில் பொன்னியின் விசாரணை மூன்று முறை நடந்தது.

முதல் விசாரணையில், புகழுக்காகப் போரிட்ட கரிகாலனை விட தன்மானத்திற்காக உயிர்விட்ட பெருஞ்சேரலாதனே சிறந்தவன் என்று பொருள்பட வஞ்சகப் புகழ்ச்சியாகப் பொன்னி பாடியது தங்கள் மன்னனை இழிவுப்படுத்தி விட்டதாக அவையோர் குற்றம் சுமத்துகின்றனர். ஆனால், பொன்னியோ தன் கவிதையின் நியாயத்தை உணர்த்துகிறாள்.இவ்வழக்கைக் கூர்ந்து கவனித்தவனாகவும் பொன்னியின் கவிதையில் உள்ள நியாயத்தை உணர்ந்தவனாகவும் கரிகாலன் இவ்வழக்கை இரண்டாம் கட்ட விசாரணைக்கு ஒத்தி வைத்து , பொன்னியின் பாதுகாப்பு குறித்து அவளை விருந்தினர் விடுதியில் தங்க வைக்கிறான்.

   ரண்டாம் கட்ட வழக்கு விசாரணையில் பொன்னி அரசவைக்கு வரவழைக்கப்படுகிறாள்.அடுக்களையில் அடங்கிக் கிடக்காமல் அவைக்கு வந்து அரசரை அவமதித்த பே¨தப் பெண் என பொன்னியைக் காளிங்கராயர் கூற, ஒரு புலவரின் கௌரவத்திற்குப் பங்கம் ஏற்படாத வகையில் விசாரணை நடத்தும்படி பொன்னி கேட்டுக்கொள்கிறாள்.காளிங்கராயரும் தளபதியும் அவள் கரிகால மன்னனை அவமதித்துப் பேசியது குற்றமெனக் குறிப்பிடுகின்றனர்.மேலும், இரும்பிடர்த்தலையார் பொன்னி உண்மையாக நிகழ்ச்சியை மட்டும் பாடாமல் அவளின் விமர்சனத்தால் மன்னரின் மதிப்பிற்கு மாசு கற்பித்து விட்டதாகக் கூறுகிறார்.இதை செவிமடுத்த பொன்னி,விமர்சனம் அறிவைப் பொறுத்தது என்றும் இப்படித்தான் நினைக்க வேண்டும் என்று சொல்ல எவருக்கும் உரிமை கிடையாது எனத் தீர்க்கமாகக் கூறுகிறாள்.அதுமட்டுமின்றி,புலவர்கள் இறைவனுக்க்ச் சமமானவர்கள் என்றும் புலமையை வெளிப்படுத்த காலம், இடம், சுற்றுச்சூழல் முதலியவற்றைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் தான் குற்றம் இழைக்கவில்லை என்று ஆணித்தரமாகக் கூறுகிறாள்.தன் செயலின் விளைவு என்னவென்று சிந்திக்காமல் பாடுபவர்கள் புலவர்கள் என்று தம்மால் ஒப்புக்கொள்ள முடியாது என இரும்பிடர்தலையார் அவளுக்கு மறுமொழியாகக் கூறுகிறார். பசிக்கும், பதவிக்கும் ,பரிசு பொருளுக்கும் கட்டுப்பட்டு புலமைத் தொழில் வியாபாரமாக உருமாறி விட்டதைப் பொன்னி சுட்டிக் காட்டுகிறாள்.அவளின் இவ்வாதத்தைக் கேட்டு காளிங்கராயரும் தளபதியும் அரசரிடம் பொன்னி தண்டமிழ்ப்புலவர்களை அவமதிப்பதாக முறையிடுகின்றனர்.வழக்கைப் பற்றி விசாரிக்காமல் புலவரைப் பற்றி விசாரணை நடந்ததைக் கவனித்த கரிகாலன் அதை இரசித்தவனாக இடையில் எதுவும் பேசாமல் இருக்கிறான்.அவையின் நேரம் முடிந்து அரை நாழிகைக்கு மேலாகி விட்டதால் வழக்கை இரண்டு நாள்களுக்குத் தள்ளி வைக்கிறான்.

   மூன்றாம் கட்ட விசாரணையும் அரசவையில் நடைபெறுகிறது.இவ்விசாரணையில் அனைத்து உண்மைகளையும் துறவி வேடத்தில் ஆராய்ந்து அறிந்து கொண்டு கரிகாலன் அமர்ந்திருக்கிறான்.காளிங்கராயரும் தளபதியையும் சுட்டிப் பேசி இறுதியில் அவர்களின் சதித்திட்டங்களை அம்பலப்படுத்துகிறான். அவர்கள் பொன்னியைக் கொல்ல கார்கோடகனை ஏவியது,வேங்கையன் மூலம் துறவியைக் கொல்ல முயன்றது, பாண்டிய மன்னனுடன் கூட்டுச் சதி  போன்றவற்றைக் கரிகாலன் வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறான். இவற்றையெல்லாம் கேட்டு காளிங்கராயரும் தளபதியும் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர்.மேலும் , துறவி வேடத்தில் வந்தது கரிகாலன் தான் என்று அறிந்ததும் பொன்னியை உள்ளிட்டு அவையினர் அனைவரும் திடுக்கிடுகின்றனர்.இறுதியாகக் கரிகாலன் காளிங்கராயரையும் தளபதியையும் கைது செய்யும்படி ஆணையிடுகிறான்.பொன்னி குற்றமற்றவள் என்று அறிவிப்பதோடு தன்னைவிட சேரன் சிறந்தவன் என்று ஒப்புக்கொள்கிறான்.சேரனின் வேண்டுகோளுக்கிணங்கி  அவைக்கே வந்து பாடி அவனின் மானத்தை நிலை நிறுத்திய பொன்னியை மனமாரப் பாராட்டுகிறான். அவளுக்கு ஏற்பட்ட அவலங்களுக்கும் மன்னிப்புக் கேட்பதோடு பூம்புகாரிலேயே வாழ அனுமதிக்கிறான்.ஆனால், பொன்னியோ வெண்ணிப்பறந்தலையிலேயே வாழ விருப்பப்பட்டு விடைபெற்றுச் செல்கிறாள்.

இம்மூன்று வழக்கு விசாரணையிலும் கரிகாலன் நன்கு கூர்ந்து ஆராய்ந்து தீர்ப்பளிக்கும் திறம் நன்கு வெளிப்படுகிறது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல் நிதானமாக வழக்கை ஆராய்ந்ததால்தான் கரிகாலனால் நியாயமான தீர்ப்பை வழங்க முடிந்தது.இப்பண்பை இன்றையத் தலைவர்களும் கொண்டிருத்தல் வேண்டும்.

No comments:

Post a Comment