Thursday, November 8, 2012

பொன் விலங்கு: கதைப்பின்னல்



பொன் விலங்கு நாவலின் கதைப் பின்னலை விளக்கி எழுதுக.

ஆக்கம்: குமாரி புஷ்பவள்ளி, செலெசா ஜெயா இடைநிலைப்பள்ளி, ஸ்கூடாய், ஜொகூர்


  நா.பார்த்தசாரதி கற்பனை நனவோடையில் பிறந்த பல நாவல்களில் பொன் விலங்கும் ஒன்றாகும்.இந்நாவல் முக்கிய கதாபாத்திரமான சத்தியமூர்த்தி தனது தனிமனித வாழ்விலும் பொது வாழ்விலும் எதிர்நோக்கிய சவால்களை முன்வைக்கிறது.இந்நாவலைப் படிக்கும் வாசகர்களுக்குச் சோர்வை ஏற்படுத்தாமல் நிகழ்வுகளைக் காரண காரியத்தோடு தொடர்புபடுத்தி கதைப் பின்னலைச் சிறப்பாக அமைத்துள்ளார் நாவலாசிரியர்.

   பொன் விலங்கு நாவலின் கதைப்பின்னலை ஐந்து கூறுகளாகப் பிரிக்கலாம்,அவை தொடக்கம், வளர்ச்சி,சிக்கல்,உச்சம்,மற்றும் சிக்கல் அவிழ்ப்பு ஆகும்.சத்தியமூர்த்தி மல்லிகைப் பந்தல் கலைக்கல்லூரியின் நேர்முகத் தேர்வுக்கு வருவதாக நாவலாசிரியர் இந்நாவலைத் தொடக்கியுள்ளார்.இப்பகுதியில் தொழிலதிபரும் மல்லிகைப்பந்தல் கலைக்கல்லூரியின் ஸ்தாபகரான பூபதி, அவரின் மகள் பாரதி,ஆகியோரும் இப்பகுதியில் அறிமுகமாகிறார்கள்.ஒழுக்கமும் கட்டுப்பாடும் நிறைந்த தரமான கல்லூரியை நடத்தும்தொழில் அதிபராகப் பூபதி விளங்குகிறார்.அவரின் ஒரே அன்பு மகள் பாரதி சத்தியமூர்த்தியின் அறிவாற்றலால் கவரப்படுகிறாள்.பேட்டி  முடிந்து மதுரை திரும்பும் வழியில் தற்கொலைக்கு முயன்ற நடன மங்கை மோகினியைக் காப்பாற்றுகிறான். சத்தியமூர்த்தியின் உயர்ந்த இலட்சியங்களும், குணாதிசியங்களும் இந்நாவலின் தொடக்கத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் உணர்த்தப்படுகின்றன.

    மோகினியோடு சத்தியமூர்த்திக்கு ஏற்பட்ட தொடர்பு நெருங்கி விட்டுவிலக முடியாத அவனை அரவணைப்பது இந்நாவலின் வளர்ச்சியைச் சித்தரிக்கின்றது.அதே வேளை, மூன்லைட் விளம்பர நிறுவன உரிமையாளர் கண்ணாயிரம், மஞ்சள்பட்டி ஜமீன்தார் இருவரும் மோகினி குடும்பத்தோடு நெருக்கமாகின்றனர்.மேலும்,சத்தியமூர்த்தி வேலை கிடைத்து மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுவதும் இந்நாவலின் வளர்ச்சிக்கு வித்திடுகிறது.

      அதனையடுத்து,மல்லிகைப் பந்தலில் சத்தியமூர்த்தி காலடி பதித்த நாள் முதலே அவனுக்குப் பல சிக்கல்கள் உருவெடுக்கின்றன. பூபதியின் அன்பைப் பெறும் சத்தியமூர்த்தி மற்றவர்களின் பொறாமைக்கு ஆளாகிறான்.அவன் அன்புக்காக ஏங்கி அவனிடம் நெருங்கி வரும் பாரதியிடம் கவனமாகப் பழகுகிறான் . சத்தியமூர்த்தி தன்னைப் புறக்கணிப்பதை எண்ணி பாரதி மனம் வருந்துகிறாள்.இதனைத் தொடர்ந்து கார் விபத்தில் தாயை இழந்த மோகினியை ஆதரித்து அவளை மனைவியாக்கிக் கொள்ளத் துடிக்கிறார் ஜமீன்தார். மேலும்,விமான விபத்தில் பூபதி மரணமடைந்த பிறகு கல்லூரி நிர்வாகியாகும் ஜமீன்தார் சத்தியமூர்த்தியைப் பழிவாங்கத் திட்டமிடுகிறார்.அவர் கல்லூரியின் கூரைக்குத் தீ வைக்கும் ஏற்பாட்டைச் செய்துவிட்டு அப்பழியைச் சத்தியமூர்த்தியின் மீது போடுகிறார்.பொய்ச்சாட்சியங்களால் சத்தியமூர்த்தி கைது செய்யப்படுகிறான்;பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்படுகிறான்.

   சத்தியமூர்த்தி-மோகினி காதல் உறவை அறிந்து மனம் உடைந்து போகும் பாரதி பல நாட்கள் உடல் நலமின்றி படுத்த படுக்கையாகக் கிடந்ததையொட்டி அவளைப் பார்க்க வருகிறான் சத்தியமூர்த்தி.அங்கு மோகினி மஞ்சள்பட்டி ஜமீன்தாருக்குக் காப்பி கொடுத்து பணிவிடை செய்வதைக் கண்டு திகைக்கிறான். ஜமீன்தாரின் சதியால்,மோகினியும் ஜமீன்தாரும் மணமக்கள் கோலத்தில் காட்சியளிக்கும் புகைப்படத்தைக் கண்ட சத்தியமூர்த்தி, மோகினியின் மேல் வெறுப்பைக் காட்டுகிறான்.அவனுக்கு உண்மையை விளக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன.சத்தியமூர்த்தியின் வெளிநாட்டுப் பயணமும், ஜமீன்தாரின் அத்துமீறலும் மோகினியை மனமுடையச் செய்து தற்கொலை செய்துகொள்ளத் தூண்டுகின்றன.மோகினி தனது உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன் பாரதிக்கும் சத்தியமூர்த்திக்கும் கடிதங்கள் எழுதி பின்னர் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு உயிர் துறக்கிறாள்.இதுவே கதையின் உச்சமாகத் திகழ்கிறது.

      இப்பொன் விலங்கு நாவலின் கதைப் பின்னலின் இறுதி பகுதி சிக்கல் அவிழ்ப்பாகும். இதில், மோகினியின் மரணத்துக்குத் தான் காரணமாகி விட்டதை எண்ணிச் சத்தியமூர்த்தி குமுறி அழுகிறான்.நயவஞ்சகர்களான கண்ணாயிரமும், ஜமீன்தாரும் கள்ள நோட்டு விவகாரத்தில் போலீசாரால் கைது செய்யப் படுகின்றனர்.தன் மனதில் நித்திய சுமங்கலியாகி விட்ட மோகினியின் நினைவலைகளோடு உயர்கல்விப்பெற சத்தியமூர்த்தி ஜெர்மனிக்குப் பயணமாகிறான்.
  ஆகவே, நா.பார்த்தசாரதி பொன்விலங்கு நாவலை வாசகர்கள் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நன்கு திட்டமிட்டு எழுதியிருக்கிறார் என்றால் அதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை. பொன்விலங்கு போன்ற இலக்கியப் படைப்புகள் தமிழன்னை இன்னும் பல நூற்றாண்டுகள் இப்பூவுலகில் நடைப்பயில கண்டிப்பாய்த் துணைப் புரியும்.

No comments:

Post a Comment